அமரர் கே.கே.நடராசா அதிபராக இருந்த காலத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபருமாகிய அமரர் தியாகராசா அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து காரைநகர் இந்துக் கல்லூரி மைதானத்தின் சுற்று மதில் அமைக்கப்பட்டிருந்தது. ஐம்பது ஆண்டுகள் பழைமை மிக்க இச்சுற்று மதில் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில் புதிதாக சுற்று மதில் அமைக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி கல்லூரிச் சமூகத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து கொண்ட பிரித்தானியா- காரை நலன்புரிச் சங்கத்தினர் சுற்று மதில் அமைப்பதற்கான நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளமை அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளது. இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டினை S.K.சதாசிவம் ஆசிரியர் அவர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைதானத்தின் கிழக்கு, தெற்கு எல்லைகளில் முழுமையாகவும் மேற்கு எல்லையின் ஒரு பகுதியில் மதில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதிப் பகுதியிலுமே இச்சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது. இம்மதிலினை அமைப்பதற்கான எல்லைகள் பிரதேச சபையின் விதிகளுக்கு அமைய நிர்ணயம் செய்யப்பட்டு பிரதேச சபையின் முறையான அனுமதியும் கல்விப் பகுதியின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இச்சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சென்ற 13-06-2023 புதன்கிழமை காலை கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், வலயக் கல்வி அலுவலக தொழில்நுட்ப உத்தியோகத்தர், பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைளின் செயலாளர், உதவிச் செயலாளர் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில் பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் பொருளாளரான திரு.இ.தர்சன் அவர்கள் முதலாவது அடிக்கல்லினை நாட்டி வைத்திருந்தார்.
பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் இப்பணியினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.
அடிக்கல் நாட்டிய நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்படவுள்ள காரை.இந்து விளையாட்டு மைதானத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.”