2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியிலிருந்து 2016ம் ஆண்டு பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களிற்கு காரைநகரின் பிரபல வர்த்தகர் S.P.S.என அழைக்கப்படும் அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது மூத்த மகனான பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அரிகரன் அவர்களின் உதவியுடன் ஊக்குவிப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு 17.03.2017 அன்று பி.ப 1.00 மணிக்கு கல்லூரியின் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்ற;து.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக் கழக ஆங்கில மொழியியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை அதிபரான கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கௌரவ விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் கலந்துகொண்டார்கள்.
மேலும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும் அயற்பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கல்லூரியின் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் 2016ம் ஆண்டு யாழ்ப்பாணம் கிழக்கு ஆகிய பல்கலைக் கழகங்களுக்கு கலை, வணிகம,; நுண்கலை ஆகிய துறைகளுக்கு தெரிவாகிய செல்வன் நவரத்தினம் லோகதாஸ், செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன், செல்வி தர்ஜிகா மூர்த்தி, செல்வி ஷஜிதா பாலசிங்கம, செல்வி கஜிந்தினி நதிசீலன், செல்வி ஹீந்துஜா முடிராசா ஆகிய ஆறு மாணவர்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு கல்லூரியின் பான்ட் அணியின் இசையோடு விருந்தினர்களுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். தேசியக் கொடி, கல்லூரிக் கொடி என்பவற்றை முறையே பிரதம விருந்தினர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா அவர்களும் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களும் மண்டப முன்றலில் ஏற்றிவைத்தனர். கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து மாணவி செல்வி ஜீவிசா சிவசக்திவேல் அவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. கல்லூரியின் பகுதித் தலைவர் திருமதி கலாநிதி சிவநேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றியதை அடுத்து பிரதி அதிபரின் தலைமையுரையும் விருந்தினர்களின் உரையும் கௌரவம் பெற்ற மாணவர்களின் சார்பில் செல்வன் நவரத்தினம் லோகதாஸ் வழங்கிய ஏற்புரையும் இடம்பெற்றன. அத்துடன் தேசிய மட்ட போட்டியாளர் செல்வி அமிர்தா ஆனந்தராசா இன்னிசைக் கச்சேரி நிகழ்த்தி சபையோரை மகிழ்வித்தார்.
அமரர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்பு பரிசில் வழங்கும் திட்டத்துக்கு அன்னாரது மகன் திரு.S.P.S.அரிகரன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாக உதவி வருவதுடன் இன்றைய நிகழ்விற்கான முழு அனுசரணையினையும் அவரே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அதிபர் அதற்காக திரு.அரிகரன் அவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.அத்துடன் இத்திட்டத்தினை சீரியமுறையில் நடைமுறைப்படுத்த சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகத்தையும் பாராட்டி நன்றியும் கூறினார். ஆறு மாணவர்களுக்கும் தலா ஏழாயிரம் ரூபா வீதம் ரொக்கப் பரிசிலும் பாராட்டு விருதும் விருந்தினர்களினாலும் பிரதி அதிபரினாலும் வழங்கப்பட்டிருந்தன. கல்லூரியின் ஆசிரியையும் பழைய மாணவர சங்க நிர்வாக சபை உறுப்பினருமான செல்வி சிவரூபி நமசிவாயம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.
S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த ஊக்குவிப்புப் பரிசில் வழங்கும் திட்டத்தின் 3வது கட்டமாக இந்நிகழ்வில் திரு.அரிகரனால் வழங்கப்பட்ட உதவி அமைந்திருந்தது. முதற்கட்டமாக க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்கள் 2014ம் ஆண்டு 2ம் தவணைப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 25 மாணவர்களிற்கும் இரண்டாவது கட்டமாக 2015ம் ஆண்டு பல்கலைக் கழகம் சென்ற ஆறு மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசில்கள் திரு.அரிகரனின் உதவியிலிருந்து வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்
No Responses to “பிரபல வர்த்தகர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களைக் கௌரவித்த நிகழ்வு சிறப்புற நடைபெற்றது”