எமது மண்ணின் கலைஞர் P.S.சுதாகரனின் இயக்கத்தில் வெளிவந்து ஒன்பது நாடுகளில் திரையிடப்பட்ட ஒருத்தி -1 திரைப்படமானது காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் சென்ற 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று திரையிடப்பட்டிருந்தது. திரையிடல் 12.00 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நேரத்திற்கு நடராசா ஞாபகார்த்த மண்டபம் மாணவர்களினாலும் பொது மக்களினாலும் நிரம்பி வழிந்தது. பலரும் இருக்கைகள் இன்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. ஆயினும் மாணவர்கள் பலரை நிலத்தில் அமரவைத்ததன் மூலம் அவர்களிற்கான இருக்கைகளை கல்லூரியின் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துக்கொண்டிருந்தனர். இத்திரையிடல் நிகழ்விற்கு யாழ்ற்ரன் கல்லூரியின் அதிபர், இக்கல்லூரியின் உயர்வகுப்பு மாணவர்கள், ஆரம்பப் பாடசாலைகளின் அதிபர்கள், கலைஞர்கள், அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டோரும் வருகை தந்திருந்தமை சிறப்பானதாகும்.
காட்சி தொடங்குவதற்கு முன்னதாக கலைஞர் P.S.சுதாகரன் அவர்களிற்கு கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. காரை.மண் தந்த மற்றொரு கலைஞரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் யாழ்.F.M.வானொலியின் கட்டுப்பாட்டாளரான திரு.முருகேசு ரவீந்திரன் சிறந்த வாழ்த்துரையை வழங்கியிருந்தார். இவர் தமது வாழ்த்துரையை வழங்குவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமை திரைப்படத்தை காண ஆவலாக இருந்தவர்களிற்கு சிறிது சலிப்பினை ஏற்படுத்தியிருந்தாலும் தமது அழகான அடுக்குத் தமிழிலே கவர்ந்திழுக்கும் பேச்சாற்றலினால் கொடிகட்டிப் பறந்த வானொலிக் கலைஞர்கள் காரைநகர் மண்ணை எவ்விதம் பெருமைப்படுத்தியுள்ளார்கள் என்பதை விரிவாக எடுத்துக் கூறியதுடன் அவர்கள் வரிசையில் வந்த P.S.சுதாகரனின் பெருமைகளையும் எடுத்துக் கூறி மிகச் சிறப்பானதொரு வாழத்துரையை வழங்கியபோது பலரும் ஆவலோடு செவிமடுத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. சுதாகரன் அவர்கள் தனது பதிலுரையில் தான் பிறந்த மண்ணில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு இம்மண்ணின் மக்கள் பார்வையிடவேண்டும் என்ற தமது கனவு நனவாவதையிட்டு பேருவகையடைவதாகவும் இன்றைய நாள் தனது வாழ்நாளில் மறக்கமுடியாதது என்பதுடன் இச்சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தந்த காரைநகர் இந்துக் கல்லூரிச் சமூகத்திற்கு சிறப்பாக அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். தனது படைப்புக்கள் மூலமாகக் கிடைக்கும் நிதியினை காரைநகர் மண்ணின் அபிவிருத்திக்கு உதவுவதே தனது குறிக்கோள் எனக் குறிப்பிட்ட போது மக்கள் பலத்த கரகோசம் செய்து பாராட்டி வரவேற்றனர். காரைநகர் இந்துக் கல்லுரியின் அதிபரிடம் நன்கொடையாக ஒருதொகைப் பணத்தினையும் சுதாகரன் கையளித்திருந்த அதே வேளை அவரது இப்பயணத்தின்போது தான் கல்வி கற்ற யாழ்ற்ரன் கல்லூரிக்கும் ஒருதொகைப் பணத்தினை உதவியதாக அறியமுடிந்தது. நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மண்டபத்தில் நிலவிய அதிக புழுக்கநிலையையும் பொருட்படுத்தாது திரைப்படத்தோடு மக்கள் அனைவரும் ஒன்றிப் போயிருந்திருந்தனர் என்றே கூறலாம். திரைப்படம் தொடங்கி முடியும் வரையுள்ள இரண்டு மணி நேரத்திற்கும் ஒருவரேனும் வெளியேறாது அதனைக் கண்டு களித்திருந்தமையும் படம் முடிவுற்றதும் வரிசையில் சென்று சுதாகரனை பாராட்டி வாழ்த்தியிருந்தமையும் திரைப்படத்தின் சிறப்பினை புலப்படுத்துவதாகவுள்ளது. படத்தின் நிறைவில் ஒருசிலர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டதையும் பார்க்கமுடிந்தது. காரைநகர் மக்கள் திரளாகக் கூடிய இது போன்ற நிகழ்வு காரைநகரில் அண்மைக் காலத்தில் நடைபெற்றதில்லை என பலரும் கூறிச் சென்றதையும் கேட்க முடிந்தது. சுமார் 800க்கு மேற்பட்டோர் இத்திரைப்படத்தைக் கண்டு களித்ததாக மதிப்பிடப்படுகிறது. உண்மையில் சுதாகரன் அவர்கள் திரைப்படத் துறையில் ஒரு வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்திய கலைஞராகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றார்.
காரைநகர் மண்ணில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு பெருந்திரளான மக்களின் ஆதரவினையும் பாராட்டினையும் பெற்றமை குறித்து கலைஞர் சுதாகரன் அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
13வது வயதில் ஈழத்தின் காரைநகர் மண்ணைவிட்டு கனடா வந்து 34 வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கையின் பாதைகள் மாறின…. பயணங்கள் மாறின…. ஆனாலும் எனது ஊரின் பசுமையான நினைவுகள் மறக்கவில்லை. கடந்த பலவருடங்களாக எனது ஊடகம் சார்ந்த அனுபவங்களைக்கொண்டு எனது இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த ‘ஒருத்தி’ திரைப்படத்தின் மூலம் உலகெங்கும் பரந்துவாழும் எனது காரைநகர் மண்ணைச் சேர்ந்த நண்பர்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் முழு ஆதரவு காரணமாகவே எனது திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக உலகெங்கும் உள்ள எனது ஊரின் சங்கங்கள், மன்றங்கள் நிறையவே உதவி செய்துள்ளார்கள். 10 நாடுகளுக்குமேல் திரைப்படம் திரையிட்டுஇருந்தாலும் எனது ஊரில் என் மண்ணில் எனது திரைப்படத்தை என் மக்கள் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அதற்கு Covid நோயும் ஒரு காரணம். இந்தவருடம் “ஒருத்தி-2” திரைப்படம் வெளிவந்து பல நாடுகளில் திரையிடப்படுகிறது . இம்முறை நான் தாயகம் செல்லும்போது எப்படியும் திரையிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை அருமை நண்பரும் சிறந்த சமூகச் செயற்பாட்டாளருமாகிய கனக சிவகுமாரன் அவர்களிடம் தெரிவித்தேன் அவரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் நிச்சயமாக திரையிடுவோம் என்று எனக்கு கூறியிருந்தார் அதன்படி எனக்கு முன்னதாகவே அவர் தாயகம் சென்றிருந்தார் அங்கு சென்று இதற்கான பணிகளில் ஈடுபட்டார் பின்னர் ஜூன் மாதம் 13 ஆம் தேதி காரை-இந்து கல்லூரியில் திரைப்படம் திரையிடப்பட்டது 1000இக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர்கள், கலைஞர்கள் என பலரும் வந்து பார்த்து பாராட்டிச் சென்றமை எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள். இந்த திரைப்படத்தை அங்கே திரையிடுவதற்கு அனைத்து வழிகளிலும் உதவி புரிந்தவர் திரு கனக சிவகுமாரன் அவர்கள். அவரோடு காரை.இந்துக் கல்லூரி அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் ஒரு கலைஞனின் படைப்பு அவனின் சொந்த ஊரில் ஊர் மக்கள் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இது எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பாக்கியமாகும். நன்றி.
திரையிடல் தொடர்பான சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
.
No Responses to “காரை.மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி -1 காரை.இந்துவில் மண்டபம் நிரம்பி வழிந்த மக்கள் மத்தியில் திரையிடப்பட்ட நிகழ்வு குறித்த சிறு பார்வை. – காரைக் கூத்தன் –”