காரை.இந்துவின் 2022ஆம் கல்வி ஆண்டிற்கான பரிசளிப்பு தினமும் நிறுவுனர் தினமும் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சென்ற 04-07-2023 செவ்வாய்க்கிழமை; அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலுசேனா பிரதம விருந்தினராகவும் தீவக வலய கல்வி அபிவருத்திக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கம்சத்தானி விநோதன் சிறப்பு விருந்தினராகவும் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளைத் தவைர் தொழிலதிபர் திரு.சி.நேசேந்திரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன் தீவக வலயத்தின் கல்விப் பணிப்பாளரான திரு.தி.ஞானசுந்தரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை சிறப்பானதாகும்.
மடத்துக்கரை அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற பூசை வழிபாட்டில் விருந்தினர்கள் கலந்துகொண்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி பாண்ட் அணியின் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். சயம்பு சிலைக்கு பிரதம விருந்தினரால் மலர் தூவி மாலை அணிவிக்கப்பட்டது. மண்டப முன்றலை அடைந்ததும் பிரதம விருந்தினர் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததுடன் அதிபர் கல்லூரிக் கொடியினை ஏற்றி வைத்தார்.
கல்லூரியின் அதிபர் திருமதி அரூபா ரமேஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதிபர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் பரிசில் தின அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றியதைத் தொடர்ந்து ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரான திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களின் நிறுவுனர் தின உரை இடம்பெற்ற பின்னர் விருந்தினர்கள் உரையாற்றினர்.
பிரதம விருந்தினர் திரு.சமன் பந்துலுசேனா தமது உரையில் மாணவர்களிற்கு பயன்பெறக்கூடிய பல ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதுடன் காரை.இந்துவின் சிறப்புக்களையும் எடுத்துக் கூறியிருந்தார். குறிப்பாக “உனக்கு நீயே உண்மையாய் இரு” என்ற கல்லூரியின் மகுட வாசகம் போன்ற ஒன்றை தான் வேறு எங்கும் பார்த்ததில்லை எனக் குறிப்பட்டு பாராட்டியதுடன் இத்தகைய சிறப்பு மிக்க மகுட வாசகத்தினைக் கொண்டுள்ள இக்கல்லுரி பெருமையடையமுடியும் எனத் தெரிவித்தபோது சபையினர் பலத்த கரகோசம்செய்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
மாணவ சாதனையாளர்களிற்கான பரிசில்களும் விருதுகளும் சான்றிதழ்களும் மிகவும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு பாராட்டும் படியாக வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளை அடுத்து ஆசிரியர் பா.இராமகிருஸ்ணன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.
புகைப்படங்கள் சில் கீழே இணைக்கப்பட்டுள்ள அதே வேளையில் முழுமையான புகைப்படத் தொகுப்பினை கீழுள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடமுடியும்.புகைப்படத் தொகுப்பின் ஒரு புகைப்படத்தின் மேல் அழுத்திய பின்னர் அப்புகைப்படத்தின் வலப்பக்கமாகவோ இடப்பக்கமாகவோ அழுத்தி குறித்த புகைப்படத்தின் முன்னாலுள்ள அல்லது பின்னாலுள்ள புகைப்படங்கள் அனைத்தையும் பெரிதாகப் பார்வையிடலாம்.
https://photos.app.goo.gl/T4xCjEJMUh7o28Uj9
No Responses to “காரை.இந்துவின் பரிசளிப்பு தினமும் நிறுவுனர் தினமும் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் வெகுசிறப்பாக நடைபெற்றது”