காரை மண் தந்த கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ மரபுக் கவிதை நூல், இசைப்பாடல் இறுவெட்டு என்பனவற்றின் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்பிரல் 16, 2017 அன்று மாலை 5:00 மணிக்கு கனடா தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் கவிநாயகர் வி.கந்தவனம் அவர்களின் தலைமையில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊரின் உறவுகள் என அரங்கம் நிறைந்த விழாவாக நடைபெற்றது.
கொழும்பில் பிறந்து வளர்ந்து தற்போது சிட்னி, அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன், கணக்கியல் துறையில் தலைமை நிதி அலுவலராகப் (Chief Financial Officer) பணியாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழிலும் சைவத்திலும் தணியாத பற்றுடையவர்.
புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரிடமும் அறிஞர் இ. இரத்தினம் அவர்களிடமும் இளமையிலே தமிழ் கற்றவர். பின்னர் பேராசிரியர் இராசு வடிவேலு அவர்களிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்;று நூற்றுக்கு மேற்பட்ட மரபுக் கவிதைகளைப் படைத்துள்ள இவர் தமது மரபுக் கவிதைகள் அடங்கிய ‘எழில் பூக்கள்’ என்ற நூலையும் அந்தக் கவிதைகளை பிரபல தென்னிந்தியத் திரை இசைப் பாடகர்களின் குரலில் வடிவமைத்த இசைப்பாடல் இறுவெட்டையும் சிட்னி, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை ஆகிய நகரங்களைத் தொடர்ந்தது ரொரன்ரோவில் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வே அண்மையில் நடைபெற்றது.
கவிஞரின் மூத்த உறவினர்களான பொன்னம்பலம் தம்பதியினர், வேலாயுதபிள்ளை தம்பதியினர் மங்கல விளங்கேற்றி விழாவினைத் தொடக்கி வைத்தமையைத் தொடர்ந்து செல்வி ராகவி ரவிகுலன் தமிழ் பண், கனடா பண் ஆகியவற்றை இசைத்தார். விழாவிற்கு வருகை தந்தோரை திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் தமது கவிதையால் வரவேற்றார்.
விழாவிற்குத் தலைமை வகித்த கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள் தமது தலைமையுரையில் உன்னதமான மரபுக் கவிதைகளின் தொகுப்பு இது எனவும் கவிதை என்று வெறும் வார்த்தைகளை எழுதும் இந்தக் காலத்திலே அவுஸ்ரேலியாவிலிருந்து கவிஞர் நந்திவர்மன் யாப்பிலக்கண மரபைப் பின்பற்றி மரபுக் கவிதை வளர்ப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து நூலையையும் இசைப்பாடல் இறுவெட்டையும் அறிமுகம் செய்து வைத்த கவிநாயகர் அவர்கள், கவி எழுதித் தமிழ் வளர்க்கும் கவிஞர் நந்திவர்மனை தாம் உளமாரப் பாராட்டி வாழ்த்துவதாகக் கூறினார். சிறப்புப் பிரதிகளை விழாவிற்கு வருகை தந்திருந்த கவிஞரும் பேராசிரியருமான தி.சிவகுமாரன், குழந்தைகள் மருத்துவ நிபுணர் வி.விஜயரத்தினம், சிவநெறி செல்வர் தி.விசுவலிங்கம், கலாநிதி.த.ரவிச்சந்திரன், ஆசிரியர் சு.இராஜரட்ணம், த.சிவபாலு, கவிஞர் பொன்னையா விவேகானந்தன் உட்பட்ட 25 இற்கு மேற்பட்ட பேராளார்கள் பெற்றுக்கொண்டனர்.
அடுத்து இசைக்கலைமணி திருமதி.குலநாயகி விவேகானந்தனின் மாணவர்கள் ‘உன்னையே தொழுவேன் உமையவள் மைந்தா’, ‘அண்ட சராசரம் ஆளும் அற்புதன்’ ஆகிய கவிஞர் நந்திவர்மனின் இறை எழில் பாடல்களை கர்நாடக இசையில் இசைத்தனர்.
விழாவில் வாழ்த்துரை வழங்கிய கவிதாயினி திருமதி.கோதை அமுதன் அவர்கள் தமிழர் வாழ்வில் பெருமை சேர்க்கின்ற ஒரு நாளாக இந்த நாளை எண்ணுவதாகவும், கவிஞர் தாம் பார்க்கின்ற எல்லாமே அழகாக மரபிலே சப்த எழில்களாக எழில் பூக்களைத் தந்திருக்கின்றார் என்றும் அவற்றில் தம் மனதைத் தொட்ட கவிதை வரிகளாக ‘அகந்தைக் கிழங்கை அகழ்ந்து வாழ்வீர்’ , ‘தமிழன்னை அழுகின்றாள்’, ‘பனைமரம்’ என்ற வரிகளையும் சமூகச் சாடலாக ‘பூப்புனித நீராட்டு விழா’ என்ற கவிதைiயும் எடுத்துக் காட்டினார். கவிஞரின் பெண்மையைப் போற்றிய பண்பையும் பாராட்டி எமது சமகாலத்திலே இலக்கண நூல்களைப் படைக்கும் இவர்போன்ற தமிழறிஞரைப் பார்க்கும் போது எமக்கிருந்த ஏக்கம் தீர்ந்து போயிற்று என்றும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ந.சுப்பிரமணிய ஐயர் தமது நயவுரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தமிழ்அடையாளத்தைப் பேணிக்கொள்வதிலும் அப்பேணுகையைத் தமக்கிடையே பகிர்ந்துகொள்வதிலும் கொண்டுள்ள பேரார்வத்தின் வரலாற்றுப் பதிவுகளில் ஒன்றாக இந்த நிகழ்வைத் தாம் பார்ப்பதாகவும் ஈழத்து மரபிலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதேவேளை புலம்பெயர் சமூகத்தின் பண்பாட்டுத் தேவையை முன்னிறுத்திய ஒரு புலமையுள்ளத்தின் வெளிப்பாடாகவும் தாம் இந்நூலைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். தமது பாடல்களைச் சுவைத்தல் என்பதற்கு மேலாக அவற்றின் வடிவநிலை தொடர்பான அறிவையும் வாசகர்கள் பெறவேண்டும் என்பதான கல்விசார் ஆர்வத்தையும் திரு நந்திவர்மன் அவர்கள் இந்நூலில் பதிவு செய்துள்ளமை இன்னொரு சிறப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
கவிஞரின் வரிகளில் உருவான இசைப்பாடல் இறுவெட்டிலிருந்து ‘இவளொரு அதிசயம்’ என்ற பாடலை ரொரன்ரோவின் பிரபல பின்னணிப் பாடகர் பிரபா பாலகிருஷ்ணன் அவர்களும், ‘கண்ணாளா எங்கே போனாயோ’ என்ற பாடலை செல்வி.ராகவி இரவிகுலனும், ‘கண்ணதாசன் உன் பாடல் கேட்டு’ என்ற பாடலை செல்வி. சாமந்தி யோகநாதனும் இசையமைப்பாளர் உதயனின் கரயோக்கி இசையில் பாடினார்கள்.
பரத நாட்டிய ஆசிரியை திருமதி.கௌரி பாபு அவர்களின் மாணவிகள் கவிஞரின் ‘ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்’ என்ற தமிழை வாழ்த்தும் பாடலுக்கு அழகிய நடனமாடினர்.
கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா கவிஞர் நந்திவர்மனின் தமிழ்ப்பணியைப் பராட்டி பராட்டு விருது வழங்கி பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார்.
கவிஞர் நந்திவர்மன் தமது ஏற்புரையில் தமக்கு தமிழறிவை ஊட்டிய அன்னையையும், ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்ததுடன் மரபுக் கவிதைக் கலையின் மகிமையையும் எடுத்து விளக்கி சந்தத்துடன் தமது கவி வரிகளைப் படித்தும் காட்டினார். விழா வெற்றி பெற உதவிய அனைவருக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார்.
‘எழில் பூக்கள்’ நூல் இசைப் பாடல் இறுவெட்டின் விற்பனை மூலம் பெறப்பட்ட நிதி கிளிநொச்சி காந்தி நிலைய ஆதரவற்ற சிறுவர்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகளை வானொலி அறிவிப்பாளர் திருமதி.தர்ஷினி உதயராஜா தமது கணீர் என்ற குரலில் அழகு தமிழில் தொகுத்து வழங்கினார்.
தமிழின் தொன்மையையும், இனிமையையும் புதிய அணுகுமுறையில் இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சென்ற இந்த விழாவில் மரபுக் கவிதைகளை முப்பதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் சந்தத்துடன் வாசித்தும், இசையுடன் பாடியும், ஆடல் வடிவிலும் அரங்கத்தில் வழங்கியிருந்தமை புதிய நம்பிக்கையைத் தருவதாக அமைந்திருந்தது.
படங்கள் உதவி: கே.கே.எலக்ரோனிக்ஸ்
No Responses to “மரபுக் கவிதை என்ற அழகிய தமிழ்க் கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்ற கவிஞர் த.நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ அறிமுக விழா”