காரை.இந்துவின் 135 ஆண்டுகால வளர்ச்சிப் பாதையில் இக்கல்லூரியில் பணியாற்றிய அதிபர்களதும் ஆசிரியர்களதும் சேவை என்றென்றும் நினைவுகூரப்படவேண்டியதாகும். முன்னாள் அதிபர்களும் ஆசிரியர்களும் நினைவுகூரப்படும் வகையிலான செயற்பாடு முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை மிகுந்த கரிசனைகொண்டு வந்துள்ளது. சங்கத்தினது கரிசனையினை அதிபர் ஜெகதீஸ்வரன் அவர்களிடத்தும் தாய்ச் சங்கத்திடமும் வெளிப்படுத்தியதுடன் இதற்கு ஏற்படக்கூடிய செலவுகளை சங்கமே பொறுப்பேற்கும் எனவும் தெரியப்படுத்தப்பட்டது..
தாய்ச் சங்கத்தின் ஒத்துழைப்போடு அதிபர் ஜெகதீஸ்வரன் அவர்கள் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக முன்னாள் அதிபர்களின் பெயர்கள் பதியப்பட்ட பெயர்ப்பலகைகள் இரண்டு அமைக்கப்பட்டு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தின் சுவரில் பொருத்தப்பட்டுள்ளன. இவ்விதம் பொருத்தப்பட்ட பெயர்ப்பலகைகள் சென்ற 4ஆம் திகதி நடைபெற்றிருந்த பரிசளிப்பு விழாவின்போது பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திரு. அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. காரை.இந்து நிறுவப்பட்ட 1888ஆம் ஆண்டிலிருந்து இன்று வரைக்கும் உள்ள 135 ஆண்டுகளில் பணியாற்றிய முப்பது அதிபர்களின் பெயர்களுடன் அவர்களின் கல்வித் தகமைகள் சேவைக் கால விபரம் என்பனவும் இப்பெயர்ப் பலகைகளில் பதிவிடப்பட்டுள்ளன.
சிறந்தமுறையில் செயற்பட்டு இந்நடவடிக்கையினை நிறைவேற்றி வைத்த அதிபர் திரு. அ.ஜெகதீஸ்வரன் அவர்களிற்கும், அழகியமுறையில் இப்பெயர்ப்பலகையின் வடிவமைப்பினை வரைந்து தந்ததுடன் ஆலோசனைகள் வழங்கி உதவிய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரான முன்னாள் படவரைஞர் திரு.செல்வரத்தினம் செல்வநாயகம் அவர்களிற்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றது.
அடுத்த கட்டமாக அதிபர்களின் படங்களை மண்டபத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அது நிறைவுற்றதும் நீண்டகாலம் சேவையாற்றிய ஆசிரியர்களின் படங்கள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பெயர்ப்பலகைகள் திரைநீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் அதிபர்களின் பெயர்ப் பலகைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.”