ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று ஆறாம் தரத்தில் பயிலும் 12 மாணவர்களில் நாகேஸ்வரி நற்பணியகத்தின் அனுசரணையில் ஆறு மாணவர்களுக்கும் எனது ஊர் காரைநகர் தொகுப்பாளர் தீசன் திரவியநாதன் அவர்களினால் ஒரு மாணவனுக்கும் என ஏழு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்ட நிலையில் மீதமாகவுள்ள ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி உதவுமாறு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினை அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் வேண்டிக்கொண்டார்.
இச்சங்கத்தினர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக காரை.இந்துவின் பழைய மாணவனும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கு அவ்வப்போது உதவி ஆதரவளித்து வருபவருமாகிய சுவிற்சலாந்து, Bern, Siva Travel அதிபர் திரு.சிவா கனக சுந்தரம் அவர்களது அனுசரணையில் குறித்த ஐந்து மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திரு.சிவா கனகசுந்தரம் அவர்கள் தனது தந்தையாரும் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியரும் ஆகிய அமரர் நாகமுத்து கனகசுந்தரம், தாயாரான சுப்பிரமணிய வித்தியாசாலையின் முன்னாள் ஆசிரியை அமரர் இராசம்மா கனகசுந்தரம் (தையலம்மா) ஆகியோரது ஞாபகார்த்தமாக இத்துவிச்சக்கரவண்டிகளை வழங்கியிருந்தார்.
துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் சென்ற 25-07-2023 செவ்வாய்க்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆங்கில விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவர்கள் இருவரும் அமரர் ககசுந்தரம், அமரர் இராசம்மா கனகசுந்தரம் ஆகிய இருவரதும் கல்விச் சேவையினை நினைவுகூர்ந்து உரையாற்றியதுடன் அவர்களது ஞாபகார்த்தமாக துவிச்சக்கரவண்டிகளை வழங்க முன்வந்த சிவா கனகசுந்தரத்தையும் பாராட்டி நன்றி கூறினர். அமரர்களது திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு சுடரேத்தப்பட்டு மலரஞ்சலியும் செய்யப்பட்டிருந்தது. பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவின் பழைய மாணவன் சுவிற்சலாந்து Siva Travel அதிபர் சிவா கனகசுந்தரம் அவர்களின் அனுசரணையில் ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.”