கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பயன்பாட்டிற்கென சிற்றுண்டிச் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை தீவக வலய கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்கள் நாடாவை வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
இதுவரை காலமும் கல்லூரியின் வகுப்பறைகளே சிற்றுண்டிச் சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் வகுப்பறைகள் சுகாதாரப் பகுதியின் விதிகளிற்கு அமைவாக சிற்றுண்டிச் சாலைக்குரிய வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதால் வகுப்பறைகளை சிற்றுண்டிச் சாலையாக பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரப்பகுதியினால் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் வேண்டுகோளிற்கமைய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக காரைநகர் இலகடியைச் சேர்ந்த அமரர் கணபதிப்பிள்ளை திருவேங்கடம் அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவிலும் இலங்கையிலும் வதியும் கல்லூரியின் பழைய மாணவர்களாகிய அன்னாரது பிள்ளைகள் முன்வந்து இச்சிற்றுண்டிச் சாலையினை அமைப்பதற்கு செலவிடப்பட்ட ஒருலட்சம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையூடாக வழங்கியுதவியுள்ளனர். அமரர் திருவேங்கடம் அவர்கள் கல்லூரிக்கு முன்பாகவுள்ள கட்டிடத்திலிருந்து வீரகேசரி தினகரன் போன்ற நாளிதழ்களினதும் இலங்கை இந்திய சஞ்சிகைகளினதும் முகவராக நீண்டகாலம் பணியாற்றியதன்மூலம் கல்லூரியுடன் நெருக்கமான தொடர்பிலிருந்து மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் சிநேகபூர்வமாகவும் கலகலப்பாகவும் பழகி அனைவரினதும் மனங்களை கவர்ந்தவராக விளங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரியின் தெற்கு வளாகத்தில் அமைந்திருந்த துவிச்சக்கர வண்டி தரிப்பிடமே சுகாதார நலன்களை பேணக்கூடிய வசதிகளைக் கொண்ட சிற்றுண்டிச் சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்ட ஆசிரியர்களும் மாணவர்களும் இடைவேளையின்போது தங்கள் தேநீர் மற்றும் சிற்றுண்டித் தேவைகளை கல்லூரிக்குள்ளேயே பூர்த்தி செய்யக்கூடியதாவுள்ளதையிட்டு தமது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர்.
இதற்கு உதவிசெய்த பழைய மாணவர்களான அமரர் திருவேங்கடத்தின் பிள்ளைகளிற்கும் இவ்வுதவியினை பெறுவதற்கு அநுசரணையாகவிருந்து செயற்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளைக்கும் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகம் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் பாடசாலையின் இதுபோன்ற அரச உதவிகள் கிடைக்கமுடியாத தேவைகளை நிறைவு செய்வதற்கு பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் புலம்பெயர் அமைப்புக்களும் முன்வரவேண்டும் என பழைய மாணவர் சங்கம் எதிர்பார்க்கின்றது.
No Responses to “பிரபல நாளிதழ்கள், சஞ்சிகைகள் முகவர் அமரர் திருவேங்கடம் அவர்களின் ஞாபகார்த்தமாக சிற்றுண்டிச் சாலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.”