காரை.இந்துவின் வடக்கு வளாகத்தில் கிழக்கே அமைந்துள்ள இரு மாடிக் கட்டிடமும்; வடக்கே அமைந்துள்ள இரு மாடிக் கட்டிடமும் இணைக்கப்படாத நிலையில் தனித்தனியான நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களைக் கொண்டவையாக விளங்குகின்றன. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். இதனை நீக்கி வைக்கும் வகையிலும் சயம்பு ஞாபகார்த்த மண்டபம் சேதமுற்ற நிலையில் மாணவர்களின் கற்றலுக்கான இடவசதியின்மைக்கு தீர்வு காணும் வகையிலும் குறித்த இரண்டு மாடிக் கட்டிடங்களையும் வட-கிழக்கு மூலையில் இணைத்து வைத்து இரண்டு அடுக்கிலான இரண்டு வகுப்பறைகளை நிர்மாணிக்கும் பணிக்கு உதவுவதற்கு 1973 ஆம் ஆண்டு பிறந்து 50 அகவையினை பூர்த்தி செய்த பழைய மாணவர்களின் அணியினர் முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகும்.
அண்மையில் இந்த பழைய மாணவர்களின் அணியினர் கல்லூரிக்குப் பயணம் செய்து அதனைச் சுற்றிப் பார்வையிட்டதுடன் அதிபருடனும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பணிக்கான உதவியாக ஐம்பது இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. உதவ முன்வந்த பழைய மாணவர் அணியின் முன்னுதாரணமான பணியினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டுவதுடன் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றது.
பழைய மாணவர் அணியினருடன் அதிபரும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பில் அதிபரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையினை கீழே பார்வையிடலாம்.
1973ம் ஆண்டு பிறந்து தற்போது 50 வயதையடையும் காரை இந்துவின் பழைய மாணவர்களின் பாடசாலைத் தரிசனம் தொடர்பான அறிக்கை
11.08.2023 வெள்ளிக்கிழமை பி.ப 1.00 மணியளவில் பாடசாலைக்கு வருகை தந்த 1973 இல் பிறந்து தற்போது 50 வயதையடைகின்ற எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் பாடசாலைச் சூழலை அவதானித்ததுடன் பாடசாலையின் தேவைகள் குறித்து அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அதிபர், முதலில் இன்று பாடசாலைக்கு வருகை தந்த 50 வயதை பூர்த்தி செய்யும் பழைய மாணவர்களை வரவேற்றார். உலகின் பல்வேறு பாகங்களிலும் பரந்து வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் பாடசாலை மீது கொண்டுள்ள பற்றுறுதியை இந் நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது எனவும் இது போன்று ஏனைய பழைய மாணவர்களும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் எமது பாடசாலை துரிதமாக முன்னேற முடியும் என அதிபர் குறிப்பிட்டார். இப்பழைய மாணவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க பாடசாலையின் அத்தியாவசியத் தேவைகள் குறித்து அதிபர் உரையாற்றுகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பௌதீக வள அபிவிருத்தி தொடர்பாக,
1. விளையாட்டு மைதான மதில் அமைத்தல் வேலைகள் தற்போது லண்டன் காரை நலன்புரிச்சங்க சபையூடாக முன்னெடுக்கப்பட்டு 50% மான வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
2. வைத்தியசாலைக்குரிய 3.2 பேர்ச்சு காணித்துண்டை மைதானக் காணியுடன் இணைத்தல் தொடர்பாக தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
3. தூண்கள் வெடித்த நிலையிலுள்ள சயம்பு மண்டபத்தை திருத்தம் செய்தற்குரிய முன் முயற்சிகள் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இதை விரைவுபடுத்தும் நோக்குடன் வடமாகாண பிரதம செயலாளரை எமது பரிசளிப்பு விழாவிற்கு பிரதவிருந்தினராக அழைத்து இதைப்பற்றி விரிவாக அளவளாவி மகஐரைக் கையளித்துள்ளதாக அதிபர் குறிப்பிடார்.
4. வடக்கு வளாகத்தில் தெற்குப்புற பிரதான வீதிப்பக்கம் மதிற் சுவர் அமைக்கும் வேலையை கொழும்பு OSA தலைவரும் பிரபல தொழிலதிபரும் எமது கல்லூரின் பழைய மாணவனுமான திரு சி.நேசேந்திரம் அவர்கள் தனது செலவில் செய்து கொண்டிருப்பதாகவும் 50% மான வேலைகள் பூர்த்தியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
5. அரச நிதியுதவியுடன் கடந்த 3 வருடங்களாக பல்வேறு பௌதீக வள அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பௌதீக வள அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக குறிப்பிடுகையில்
1. வடக்கு வளாகத்தில் வடக்கு, கிழக்கு மாடிக் கட்டடத்தை இணைக்கும் வகையில் 30×26 பரிமாணத்தில் மாடிக் கட்டடம் அமைத்தல் வேண்டும்
தற்போது சயம்பு மண்டபம் பாவிக்க முடியாத நிலையில் இருப்பதால் பாரிய வகுப்பறைக் பற்றாக்குறை நிலவுகின்றது. நடராசா மண்டபத்தின் முன்புறம, மகிந்தோதயா ஆய்வு கூடம், பல்லூடக அறை, 13 ஆண்டு கல்வித்திட்ட கட்டடம் என்பவற்றில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன எனவும் இக் கட்டடத்தை இணைத்தல் மூலம் 2 வகுப்பறைகள் கிடைக்கும் எனவும், குறிப்பிட்டார்.
2. மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் சூரியப் படல்கள் கட்டடக் கூரைகளில் பொருத்தப்படல் வேண்டும்.
3. கடற்படையினர் அண்மையில் விடுவித்த காணியைச் சுற்றி மதில் அமைக்கப்படல் வேண்டும்.
4. நடராசா மண்டபத்தின் கிழக்குப்புறமாக மைதானம் வரையுள்ள மொந்திபுலம் வீதிக்கு மதில் அமைத்தல் வேண்டும்
5. வடக்கு தெற்கு என இரு வளாகங்கள் உள்ளன. ஒரு இரவு நேரக் காவலாளியினால் இரு பக்கத்தையும் காவல் செய்தல் கடினமாக உள்ளது. எனவே CCTV கமராக்கள் பொருத்தப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இவற்றைச் செவிமடுத்த ’73 பழைய மாணவர் அணியினர் தாம் தமது முழுச் செலவில் வடக்கு வளாகத்தின் வடக்கு, கிழக்கு மாடிக் கட்டடங்களை இணைத்துத் தருவதாக சம்மதம் தெரிவித்தனர். இதற்கு 2022 நவம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட உத்தேச செலவு மதிப்பீட்டின் படி ரூபா 77 லட்சம் தேவைப்படும் எனவும் இதை OSA பொறுப்பேற்று செய்தால் இத்தொகையின் 60%-70% செலவில் செய்யலாம் எனவும் அதிபர் குறிப்பிட்டார்.
உலகெங்கும் பரந்து வாழும் காரை இந்துவின் 1973 அணியினர் இவ் வேலையைச் செய்து தரவுள்ளனர் எனவும் OSA இன் வங்கிக்கணக்கிற்கு பணம் வந்து சேரக் கூடியதாக தாம் வேலை செய்யவுள்ளதாகவும் நிதி நடைமுறைக்களுக் கேற்ப செயற்படும்படியும் இந்த அணியினர் வேண்டிக் கொண்டனர். தேவையேற்படின் மீள விலை மதிப்பீடு செய்யப்பட்டு கல்வித் திணைக்களத்தின் அனுமதியைப் விரைவாகப் பெற்றுத் தருவேன் என அதிபர் குறிப்பிட்டார்.
மேலும் அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் வெளிநாடுகளிலோ அல்லது உள்நாட்டிலேயோ நிதி வசூலிக்க தான் எவருக்கும் அனுமதி வழங்கவில்லை எனவும். 1973 அணியினர் தவிர வேறு எவரிடமும் OSA கணக்கிற்கு மேற்படி வேலையை அமுற்படுத்த பணம் அனுப்புமாறு கோரக்கூடாது எனவும் 1973 அணியினரின் செயற்பாடு எமது கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையக் கூடாது எனவும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் அன்றாட இயக்கத்திற்கும் கனடா பழைய மாணவர்சங்கத்தின் உதவிகள் அளப்பெரியன எனவும் அதன் செயலாளர் திரு கனக சிவகுமாரன் அவர்களுடைய அரப்பணிப்பான சேவைக்கு எந்த வகையிலும் குந்தகமாக இருக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டார். இவ் வேண்டுகோளை 1973 அணியினர் ஏற்றுக்கொண்டதுடன் இவ் வேலைத்திட்டத்திற்கு திரு திரவியநாதன் பிரமேந்திரதீசன், திரு அம்பிகைபாகன் சிவபாதசுந்தரம், திரு சண்முகநாதன் நவரத்தினராசா ஆகியோர் தலா ரூபா 5 லட்சம் வீதம் வழங்கவுள்ளதாகவும் OSA கணக்கிற்கு இப் பணத்தை வைப்பிடுவதாகவும் தமது சக பாடிகளின் உதவியுடன் மீதிப்பணத்தை OSA கணக்கிற்கு வைப்பிலிடவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இவ் வேலையை மேற் பார்வை செய்ய 1973 பழைய மாணவர் அணியில் உள்ளுரில் உள்ள திரு கந்தசாமி சண்முகநாதன் உள்ளிட்ட மூவர் தெரிவு செய்யப்பட்டனர்.
சமூக வலைத்தளங்கல் கல்லூரி தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது அதிபர் ஆகிய என்னுடனும் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு க.நிமலதாசனுடனும் கலந்துரையாடி தனது அனுமதியுடனேயே செய்திகளை பிரசுரிக்க வேண்டும் எனவும் அதிபர் கேட்டுக் கொண்டார்.
கட்டடம் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்டதுடன் இன்று வருகை தந்த 1973 அணியின் ஒரு பழைய மாணவனான பொறியியலாளர் திரு இராமச்சந்திரன் விக்கினேஸ்வரன் அவர்கள் வேண்டிய ஆலோசனைகளையும் தெரிவித்தார்.
இறுதியாக வங்கி முகாமையாளர் திரு க.விஐயகுமார் அவர்களின் நன்றியுரையுடன் இச் சந்திப்பு நிறைவடைந்தது.
No Responses to “இரு அடுக்கிலான இரண்டு வகுப்பறைகளை நிர்மாணிக்கும் பணிக்கு உதவ முன்வந்த 50 அகவையினை பூர்த்தி செய்த பழைய மாணவர்களின் அணியினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டி நன்றி கூறுகிறது.”