காரைநகர் இந்துக் கல்லூரியின் 1989 க.பொ. சாதாரண தரம், 1992 க.பொ.த. உயர்தரம் பயின்ற மாணவ அணியினரின் ஐம்பதாவது அகவையைப் பூர்த்தி செய்யும் இவ்வாண்டில், கல்லூரியின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள இரு மாடிகளை (வடக்குப்புற, கிழக்குப்புற) ஒன்றிணைத்து இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தை (பொன்னகவைக் கட்டிடம்) நிர்மாணிக்கும் பெரும்பணியினை பொறுப்பேற்றிருந்தனர்.
இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு 23.08.2023 புதன்கிழமை காலை 7.00 மணியளவில் கல்லூரியின் முதல்வாரன திரு அ. ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 1973ஆம் ஆண்டு பிறந்து தற்போது 50 வயதை அடையும் பழைய மாணவர்களான அராலி முருகமூர்த்தி வித்தியாலய அதிபர் திரு தி. தவரத்தினம், இலங்கை வங்கி முகாமையாளர் திரு க. விஜயகுமார், திரு சி. கோபாலகிருஸ்ணன் (VSCO சந்திரன்-பிரான்ஸ்), திரு ச. நவரட்ணராஜா (நவம் ரெக்ஸ்), திரு சோமசுந்தரம், திரு மகாலிங்கம் (மூளாய்), திரு அ. சிவபாதசுந்தரம், திருமதி வ. இந்திராணி உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி அரூபா ரமேஸ் அவர்களும், ஆசிரியர்களான திரு செ. அருள்செல்வம், திரு பா. இராமகிருஸ்ணன், திரு அ. மனோகரன், திரு ச. தவக்குமார், திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன், திருமதி தயாளினி ஜெயகுமார், திருமதி ஜெயந்தினி சத்தியானந்தன், திருமதி கமலவாணி மனோகரன், திருமதி சிவரூபி சிவரங்கன், திருமதி தர்சினி நகுலன், திருமதி சுபாஜினி வேற்கரன், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை, பொருளாளரான ஆசிரியர் ச.சுகந்தன் ஆகியோருடன் தரம் 10, 11 மாணவர்களும் பழைய மாணவர் சங்க உப தலைவரும் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமான பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு தெ. லிங்கேஸ்வரன் அவர்களும், ஓய்வு நிலை கிராம சேவையாளர் திரு இ. திருப்புகழூர்சிங்கம் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அடிக்கல் நாட்டுவதற்கான ஆரம்ப பூசை வழிபாடுகளை கல்லூரியின் ஆசிரியரான திரு கு. சரவணபவானந்தசர்மா அவர்களும், அவரது சகோதரரான பிரம்மஸ்ரீ கு. சண்முகராஐக்குருக்குள் அவர்களும் நிகழ்த்தினர். இக்கட்டிடத் தொகுதியின் முதல் அத்திவாரக் கல்லினை கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களும், அவர்களைத் தொடர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களும் நாட்டி வைத்திருந்தனர்.
இக்கட்டிடத்தினை நிர்மாணிக்கும் பணியினை திரு ந. தம்பிராசா குழுவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிகழ்வின் போது 1992 பழைய மாணவர் அணியைச் சேர்ந்த திரு தி. தவரத்தினம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாம் தரம் 6 இல் கல்வி கற்கும் போது ஒரு வகுப்பில் நான்கு பிரிவுகள் காணப்பட்டன எனவும், மாணவர்கள் மூளாய், சுழிபுரம், வட்டுக்கோட்டை போன்ற வெளிப் பிரதேசங்களிலிருந்து கல்வி கற்க எமது கல்லூரிக்கு வருகைதந்திருந்தனர் எனவும், தன்னோடு கல்வி பயின்ற மாணவர்கள் பலர் பல்வேறு கௌரவ பதவிகளை வகிப்பதுடன், உலகின் பல்வேறு நாடுகளிலும் வசித்துவருவதாகவும்; இவர்கள் பற்றிய தகவல்களை ஒன்று சேர்த்து ஒரு நூலாக வெளியிட்டு அதனை எதிர்கால சந்ததயினர் பார்வையிடும் வகையில் நூலகத்திற்கு வழங்கப்பட வேண்டுமெனவும் கருத்துத் தெரிவித்தார். பண்டிதர் திரு மு. சு வேலாயுதபிள்ளை அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் தான் இந்தக் கல்லூரியில் ஐந்தாவது அத்திவாரக்கல்லை நாட்டி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன் இக்கல்லூரியானது மேலும் பல பௌதீக வள அபிவிருத்தியுடன், சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுத் திகழவேண்டுமெனவும் வாழ்த்தினார். திரு க. விஜயகுமார் அவர்கள் நன்றி தெரிவித்து உரையாற்றகையில் தமது ஐம்பதாவது அகவையினை பூர்த்திசெய்யும் மாணவர் அணியினர் இணைந்து தாம் கல்வி கற்ற வகுப்பறைகளைப் புணர்நிர்மாணம் செய்து கொடுப்பதாக தீர்மானித்திருந்த போதும், கல்லூரியின் தேவைப்பாடு பற்றி அதிபருடன் கலந்துரையாடும் போது அவர் முன்வைத்த இக்கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான பொறுப்பினை நாம் அனைவரும இணைந்து ஏற்றுக்கொண்டோம். இதற்காக பல்வேறு வழிவகையிலும் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எமது பணிகளில் 50 வீதமான பணிகளை நிறைவு செய்துள்ளோம் எனவும் ஏனையவற்றை விரைவாக முடித்துத் தருவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் பூசை வழிபாடுகளை நிகழ்த்திய சிவாச்சாரியார்களுக்கும், கட்டிட நிர்மாணப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட காந்தி அவர்களுக்கும், இந்நிகழ்விற்கு பல வகையிலும் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இக்கட்டிட நிர்மாணப் பணிக்கான நிதிப்பங்களிப்பினை மேற்கொண்ட அனைவருக்கும் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதுடன், வருகை தந்த அனைவரும் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே பார்வையிடுகின்ற அதேவேளையில் முழுமையான புகைப்படத் தொகுப்பினை கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்.
https://photos.app.goo.gl/1DKkTHR2QWfJ2RAK9
No Responses to “50 அகவையை பூர்த்தி செய்த பழைய மாணவர் அணியின் உதவியுடன் இரண்டு வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.”