ஒரு பாடசாலையின் வளர்ச்சியில் அதனை முகாமைத்துவம் செய்யும் அதிபர்களின் சேவை பிரதான பங்கு வகிப்பதுடன் வரலாற்றில் இடம்பெறக்கூடியனவுமாகும். அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் அதன் தோற்றகாலத்திலிருந்து இன்று வரைக்கும் பணியாற்றிய அதிபர்களை என்றென்றும் நினைவுகூரும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களை கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காட்சிப்படுத்தும் செயற்பாடு சென்ற 01-09-2023 காலை 8.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வைபவரீதியான நிகழ்வில் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.
காரை.இந்துவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பினை செய்திருந்து மாணவர்களது நெஞ்சங்களிலும் கல்லூரியின் வரலாற்றிலும் இடம்பிடித்துக் கொண்டுள்ள முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரும் விஞ்ஞான ஆசிரியருமாகிய திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு குறித்த செயற்திட்டத்தினை தொடக்கி வைத்திருந்தமை சிறப்பானதாகும்.
ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளைத் தலைவர் திரு.சி.நேசேந்திரன், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.சதாசிவம், கல்லூரியின் பழைய மாணவனும் ஓய்வுநிலை கிராமசேவை அலுவலருமாகிய திரு.இ.திருப்புகழூர்சிங்கம், பழைய மாணவர்களான பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் உப-தலைவர் திரு.வி.நாகேந்திரன், செயலாளர் திரு.ப.தவராசா ஆகியோரும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன், திரு.அ.சோமாஸ்கந்தன், பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, திரு.எஸ்.கே.சதாசிவம் ஆகியோர் தமது உரையில் கல்லூரியின் வரலாற்றில் பணியாற்றியிருந்த அதிபர்கள் ஒவ்வொருவரினதும் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மிக்க சேவைகளையும் சாதனைகளையும் குறிப்பிட்டு உரையாற்றியிருந்தார்கள்.
தற்போது ஒன்பது முன்னாள் அதிபர்களது திருவுருவப்படங்கள் நடராசா மண்டபத்தின் சுவரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலக்கிரமத்தில் மிகுதியாகவுள்ள ஏனைய அதிபர்களதும் கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியர்களதும் திருவுருவப் படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார். காட்சிப்படுத்தும் செயற்பாட்டிற்கு பூரணமான அனுசரணையினை வழங்கி உதவிய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினருக்கும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். கல்லூரியின் பரிசளிப்பு தினத்தின்போது பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் முன்னாள் அதிபர்களின் பெயர்களும் அவர்களின் சேவைக்கால விபரமும் பதியப்பட்ட பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் முன்னாள் அதிபர்களின் திருவுருவப் படங்களை காட்சிப்படுத்தும் செயற்பாடு சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.”