காரைநகர் இந்துக் கல்லூரியில் கடந்த ஜுலை 4, 2017 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவனர் தினமும் நிகழ்வில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
முழுமையான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை இங்கே தருகின்றோம்.
2017 ஆம் ஆண்டு பரிசில் தினத்தில் நடைபெறுகின்ற கல்லூரியின் நிறுவுநர் தின உரை
ஈழத்துச் சிதம்பரம் என்னும் தொன்மையும், மகிமையும் வாய்ந்த திருத்தலத்தைத் தன்னகத்தே கொண்டு பல அறிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், கல்வியியலாளர்களையும், அரசியல்வாதிகளையும் வியாபார விற்பன்னர்களையும், விவசாயிகளையும், திரைகடல் ஓடி திரவியம் தேடுபவர்களையும் எமக்களித்த இப்புண்ணிய பூமியின் ஈசான மூலையில் அமைந்து கல்வி ஒளியை உலகெங்கும் வீசும் காரைநகர் இந்துக் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான பரிசில் தின நிகழ்வில் நிறுவுநர் தின உரை ஆற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகின்றேன். இச் சந்தர்ப்பத்தை எனக்களித்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் பாடசாலைச் சமூகத்துக்கும் முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நிறுவுநர் தின உரை என்பது கடினமான, சவால் நிறைந்த ஒன்று. இவ் உரையை ஆற்றுவதற்குக் கடினமான தேடல்களும், சமகால, எதிர்கால நோக்குகளும் மிக முக்கியமானவை. இக் கல்லூரி நிறுவப்பட்ட சந்தர்ப்பத்தில் காணப்பட்ட கல்வி நிலமைகள், சமூகக் கட்டமைப்புக்கள், அக்காலக் கல்விக்கான சவால்கள் என்பன தொடர்பாகவும் அறியப்படல் வேண்டும். இயன்றளவில் சில நூல்களிலிருந்தும், மூத்த குடிமக்களிடம் இருந்தும், சடையாளியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் திரு. குமாரசாமியிடம் இருந்தும் பெற்றவற்றை சுருக்கி இவ் உரையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
1888 ஆம் ஆண்டு காலப்பகுதி காரைநகர் மக்கள் பலர் அமெரிக்க மிஷனரிமாரால் நடாத்தப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலம் கற்று கிறிஸ்தவர்களாக மாற்றம் பெறத் தொடங்கினர். இதனை அவதானித்த அருணாசலம் உபாத்தியாயர் அது போன்றதொரு சைவ ஆங்கிலக் கல்லூரி நமது ஊரிலே உருவாக வேண்டும் என்று அவாக் கொண்டார். இவரது முயற்சியால் மாப்பாணவூரியைச் சேர்ந்த அமரர் கோவிந்தபிள்ளையின் நிலம் பாடசாலைக்காக இனங்காணப்பட்டது. மாப்பாணவூரியைச் சேர்ந்த அமரர்களான கந்தப்பர் இலட்சுமணபிள்ளை, சிதம்பரப்பிள்ளை கந்தப்பு, கோவிந்தபிள்ளை ஆகியோருக்கு அருணாசலம் உபாத்தியாயர் வழங்கிய ஆங்கிலப்பாடசாலை என்ற எண்ணக்கரு சிறு கிடுகுக் கொட்டிலாக சைவ ஆங்கிலப்பாடசாலை ஆரம்பமானது. அமரர் இலட்சுமணப்பிள்ளை அவர்களால் நல்லூரைச் சேர்ந்த உயர்திரு முத்து சயம்பு வரவழைக்கப்பட்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அவரே ஆரம்பத்தில் மேற்பார்வையாளராகவும் ஆசிரியராகவும் கடமையாற்றினார். அப்பகுதி மக்கள் பிடியரிசி சேர்த்து சயம்பு உபாத்தியாயரை ஊக்கப்படுத்தினார்கள்.
சயம்புவின் மேற்பார்வையில் நீண்ட காலம் வளர்ந்தமையினால் இப்போதும் இப்பாடசாலை “சயம்பற்ற பாடசாலை” என அழைக்கப்படுவதுண்டு. இப்பாடசாலையில் திரு. சயம்பு அவர்கள் ஆங்கிலக் கல்வியோடு, சமயக் கல்வியையும் கற்பித்தார். இவரது காலத்தில் இப்பாடசாலையில் ஆங்கிலம் கற்றவர்கள் பிற்காலத்தில் மலாயா சென்று தொழில் புரிந்தார்கள். பின்னர் இவர்கள் ஊர் திரும்ப மலாயன் பென்சனியர் என அழைக்கப்பட்டனர். எமது ஊரில் அதிகளவு மலாயன் பென்சனியர் வாழ்ந்தது இக்கல்லூரியை அண்மித்த பகுதியிலாகும். அக்காலத்தில் வேறு ஆங்கிலப்பாடசாலைகளும் காரைநகரில் இல்லை. இப்படியாக வளர்ந்த பாடசாலை பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரி என மாற்றம் பெற்றது. அருணாசலம் உபாத்தியாயர் இத்துடன் நின்றுவிடாது வியாவில் சைவ வித்தியாசாலையை பிரம்மஸ்ரீ வேதக்குட்டி ஐயரின் துணையோடும், சுப்பிரமணிய வித்தியாசாலையை சுப்பிரமணியம் என்பவரின் துணையோடும் ஆரம்பித்து இப்பாடசாலைக்கு வலுச் சேர்த்தார்.
திரு. முத்து சயம்பு அவர்கள் சமயப் பாரம்பரியத்தை பேணுவதற்காக ஈழத்துச் சிதம்பரத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பஜணை வழிபாடுகளிலும் ஈடுபட்டார். திரு. முத்து சயம்பு அவர்களுக்கு பனங்கிழங்குத் துவையல் மிகவும் பிடித்தமானது என அறியக்கிடைத்தது. இவ்வாறு சயம்பு அவர்கள் ஆங்கில, சமயக் கல்வியைத் திறம்படப் போதித்தும், மேற்பார்வை செய்தும் வந்தமையால் எமது ஊரில் ஒரு கல்வி மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது மறக்க முடியாத உண்மை.
இன்றும் கனடாவில் வசித்து வரும் சயம்பு அவர்களின் பேரப்பிள்ளைகளும், பூட்டப்பிள்ளைகளும் இலங்கை வரும் சந்தர்ப்பங்களில் இப்பாடசாலைக்கு விஜயம் செய்து நிதி உதவி செய்து மன மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வர். அவர்களும் இப்பாடசாலையின் மேல் மரியாதை வைத்திருப்பது மகிழ்ச்சிகரமானதொன்று.
திரு. சயம்பு அவர்கள் இக்கிராமத்துக்கு ஊட்டிய சமய, ஆங்கிலக் கல்வியை நினைவு கூருமுகமாக அமரர் தியாகராஜா (அதிபர்), அமரர் நமசிவாயம் ஆகியோர் மலாயா சென்று நிதி திரட்டி உள்ளுர் மக்களின் உதவியுடன் சயம்பு மண்டபத்தை அமைத்தனர்.
அமரர் சயம்பு அவர்கள் ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் ஸ்தாபகராக, ஆசிரியராக, அதிபராக, முகாமையாளராக, இப்பாடசாலையின் வளர்ச்சியில் பெரும்பணியாற்றியமையை இன்;றைய நாளில் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.
சயம்பு அவர்களது கல்வி, சமயப் பணியை நினைவு கூர்ந்து காரைநகர் மான்மியம் இரண்டாம் பதிப்பை சயம்பு அவர்களுக்குச் சமர்ப்பித்து பின்வரும் கவிதையைத் தந்தது.
“இயம்பிடு ஆங்கிலக் கல்வியை
வியன்மிகு காரைநகர் தனி;ல்
நயம்பெற உரைத்த நல்லாசான்
சயம்பர்க்கே இந்நூல் சமர்ப்பணம்”
இப்பாடசாலையின் வரலாற்றை நோக்கும் கால்
1. சீதாராமசாஸ்திரிகள், ஸ்ரீநிவாசன், மு. P. சர்மா போன்றவர்கள் இந்தியாவிலிருந்து வந்து கற்பித்த ஆசிரியர்கள்.
2. சயம்புவே போற்றி போற்றி எனக் கவிதை எழுதிய அமரர் கவிஞர் பொன்னம்பலம் ஆசிரியர்.
3. அமரர் பொன்னம்பலம் அவர்களின் பெருமுயற்சியால் சயம்பு சிலை அமைக்கப்பட்டமை.
4. 1912 இல் அர சநன்கொடை பெறும் பாடசாலை
5. 1918 இல் நிர்வாகம் இந்து அதிகார சபையிடம்.
6. 1931 இல் பெரியார் சயம்பு அவர்கள் ஓய்வு.
7. 1946 ஆம் ஆண்டு தொடக்கம் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் திரு ஆ. தியாகராசா அதிபராகக் கடமையாற்றினார்.
8. 1950 இல் வைரவிழா.
9. 1950 இல் நடராசா மண்டபம் திறப்புவிழா.
1959 இல் சயம்பு மண்டபம் திறக்கப்பட்டது. நினைவுக்கல்லில் சயம்பு பற்றிப் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.
“நிறுவுனர், நிர்வாகி, சமய ஆசாரசீலர், சயம்புவின் தன்னலமற்ற சேவை நினைவு கூர்வதற்காக இம் மண்டபம் அமைக்கப்பட்டது.”
நிறுவுனர் தின உரையில் அடுத்ததாக,
கல்வியின் வரலாற்றிலே காலவரையறைகள் வந்து போவதும் ஏற்றத்தாழ்வுகள் உண்டாவதும் இயற்கையே எனினும் எந்தக் கல்வி முறையும் தோற்றுப் போனது அல்ல. கல்வி பல்வேறு சமூகக் காரணிகளைக் தோற்றுவிப்பதோடு தானே அப்பால் வேறு காரணிகளின் தனித்தனி தாக்கத்தாலும் ஒன்றோடொன்று உறழ்ந்த தாக்கத்தாலும் உருவாகின்றது. இன்றைய உலகில் விரைந்து மாறி வரும் சமூகத்திலே பாரம்பரியத்தினால் திட்டவட்டமாக தீர்மானிக்கப்படும். இறுக்கமானதோர் அமைப்பினுள் கல்வியை சிறை செய்தல் இயலாது அவ்வாறு செய்வது விரும்பத்தக்கதல்ல. கருத்திற்கெட்டாத தொலைவிலுள்ள எதிர்காலத்துக்கெனத் திட்டம் வகுத்தலும் ஆகாது. இன்றுள்ள நிலைமையை விரைந்து மாறும் இயல்புடையது. விரைவான போக்குவரத்துத் தொடர்புகளும் மனிதன் எல்லா அறிவுத் துறையிலும், எல்லா அனுபவத் துறையிலும், எல்லா முயற்சித் துறையிலும் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கவல்ல விரிவான ஆராய்ச்சிகளும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுமாகிய இவையாவும் சேர்ந்து சாலவும் சிக்கலான ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளன.
இத்தகைய கல்வியானது இக்கால சமூகத்தின் வளர்ச்சி வேகத்தோடு ஒத்துப்போவது கடினமாகியுள்ளது. கல்வியானது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் மாபெரும் பணியை நிறைவேற்ற வேண்டியுள்ளது. சிக்கனம் மிக்க இக்கால உலகில் சீரும் சிறப்புமாய் வாழ்வதற்கு வேண்டிய அறிவு அளவிட முடியாத அளவு வளர்ந்துள்ளது. இன்று பாடசாலை செல்லும் மாணவர் ஒவ்வொருவரும் தம் பெற்றோர் இதே வயதில் கற்றவற்றை காட்டிலும் எவ்வளவோ அதிகமான விடயங்களை அறிந்திருத்தல் வேண்டும். அறிவு மென்மேலும் ஆழமாகி வருவதால் இன்றைய மாணவனின் நோக்கெல்லை பெரும்பாலும் சுருங்கியுள்ளது.
இன்றைய உலகில் எம் கண்களையும், காதுகளையும் ஓயாது பெருகி வரும் காட்சிகளும் ஒலிகளும் உறுத்தித் தாக்கி வருகின்றன. புதினப்பத்திரிகைகளும், வானொலியும், சினிமாப் படங்களும், குறுநாடகங்களும், கைத்தொலைபேசிகளும் ஒவ்வொருநாளும் ஒவ்வொருகணமும் எமது புலன்கட்கு எத்தனையோ வகையான செய்திகளை விருந்தாக வலித்துத் தருவதால் மிக மந்தமான பிள்ளைகளையும் அறிவைப் பெறாமல் இருத்தல் இயலாது. ஆகவே இக்கருpகள் யாவும் மிகப் பரந்த பொருளில் கல்வியூட்டும் நிலையங்களாய் நன்மை, தீமைகளை ஆக்கும் அளப்பெரும் சக்தி வாய்நதனவாய் உள்ளன. தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு கருத்துக்களை திணிக்கவோ இக்கருவிகளை பயன்படுத்துவதை தவிர்க்க கல்வி ஒரு பெரும் பொறுப்பு உண்டு. எமத கல்வி முறையும் சில கூறுகளை வலியுறுத்தி மற்றவற்றை கருதாமலேனும் தவிர்த்தேனும் விடுமாயின் அந்தக் கல்வி முறையை திருப்தியானதென்று கொள்ளமுடியாது. அத்தகையதொரு முறை இருப்பின் இளம் தலைமுறையினர் சமநிலையான வளர்ச்சி பெறாது வாழ்க்கை வாழ்வாங்கு வாழவும் வகையறியாது இடர்ப்படுவர். எத்தனையோ வகையான வாழ்க்கை வசதிகள் மலிந்துள்ள இக்கால சமூகத்திலே இயன்றவரை வாழ்க்கை இன்பங்களைப் பெற வேண்டும் என்பதே எல்லோரினதும் இலக்கும். இலட்சியமுமாய் இருக்கையில் செம்iயான வழியில் வாழ்க்கை நடத்துவதற்கு துணையாகக் கல்வியை நன்கு திட்டமிட்டளித்தல் வேண்டும். ஒழுக்க நியமங்கள் வலியுறுத்தப்படல் வேண்டும். ஆலயங்களாலும் சமய அறிவை புகட்டுவதாலும் சமூகத்தோடு நெருங்கிய தொடர்பாலும் ஒழுக்க உணர்வு ஊட்டப்படுகின்றது.
புவியியல் நேரமும் தூரமும் ஒழிக்கப்பட்டுள்ளது. புவியின் எல்லையைத் தாண்டி அண்டப் பெருவெளியில் மனிதன் சென்று உலாவுகின்றான். கணினிகள் மூளையின் முயற்சியைக் குறைத்து மனிதனுக்கு துணை புரிகின்றன. வேலை நாள் சுருங்கிவிட்டது. முறையாக திட்டமிட்டு நல்லறிவோடு செயற்படுத்தும் கல்வியினால் மட்டுமே எந்தவொரு நாடும் தனது எதிர்காலம் பற்றிய தனது எதிர்காலம் பற்றிய கனவை நனவாக்கலாம். எனவே இன்றைய மாணவர் புது உலகில் புகுவதற்கு சேர்ந்தாற்கு உதவுவதற்கு ஏற்ற செயற்றின்மையோடும் உறுதியான உடலோடும் நல்லனவே எண்ணி, நல்லனவே சொல்லி, நல்லனவே செய்வதற்கான தூய மனத்தோடு புது உலகில் அடியெடுத்து வைக்கலாம்.
அடுத்ததாக…..
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மேம்பட வேண்டுமாயின் ஆசிரியர்கள் தம்மை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும் அத்துடன் தேவையான தொழினுட்ப அறிவையும் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் ஆசிரியர்கள் அதிகரித்த சுமைக்கு உட்படுகின்றனர். நிர்வாக வேலைகள், அதிக பரீட்சைகள், அதிக மதிப்பீடுகள், பகுப்பாய்வுகள், அலுவலகத் தொடர்புகள், செயலமர்வுகள், பல்வேறுபட்ட போட்டிகள் காரணமாக கற்பித்தலுக்கான சந்தர்ப்பம் குறைவாகக் காணப்படுகின்றது. இவை சீர் செய்யப்பட வேண்டும். தொழினுட்ப அறிவை மாணவர்களுடன் ஆசிரியர்களும் கற்றுக் கொள்வதற்காக மஹிந்தோதயா ஆய்வுகூடம் நிறுவப்பட்டு வருகின்றது. இவை அயற்பாடசாலைகளும் பயன்படுத்தக்கூடியதான திட்டமிடல் மேற்கொள்ளப்படல் வேண்டும். மாணவர்கள் நேரடி அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கும் சிந்தனையைத் தூண்டுவதற்கும் களப்பயணங்கள் அவசியம். யாவும் கற்றலுடன் தொடர்பட்டதாக இருத்தல் வேண்டும். பொழுதுபோக்காக அமையக்கூடாது. எமது மாணவர்களின் துரதிஷ்டம் எமக்கு அண்மித்த பிரதேசங்களில் தொழிற்சாலைகள் இல்லை. பாரிய தொழிற்சாலை ஒன்றை மாணவன் ஒருவன் நேரடியாக சென்று பார்ப்பவனாக இருந்தால் அவனது சிந்தனை நிச்சயம் சிறைப்படும். அனுபவத்துடனான கற்றல் மேம்படும். இன்று க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு எமது பிரதேச பல்கலைக்கழகமே தெரியாத நிலை இக்குறை ஆசிரியர்களையே சாரும். எனவே மாணவர்களை வகுப்பறையில் விலங்குகளைப் போன்று அடைத்து வைத்து கல்வியை திணிக்காமல் சுதந்திரமான கற்றல் நடவடிக்கையைத் தூண்டத்தக்க களப்பயணங்களை அதிகளவில் மேற்கொள்வது அதிகளவில் விரும்பத்தக்கது. இவ்வாறான கற்றல் மூலமே தனக்கான இலக்கினை தீட்டமுடியும். மேலைத்தேய நாடுகளில் இடைநிலைக் கல்வியிலேயே மாணவனின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுவிடும். ஆனால் இங்கு பல்கலைக்கழகம் முடிந்து வெளியேறினாலும் இலக்கு இல்லை. உதாரணமாக மாணவனின் ஆற்றலை இனங்கண்டு அந்தத் துறையில் பயிற்சியளித்து அவனுக்குரிய இலக்கை தீர்மானித்து இந்த இலக்கை நோக்கிய மாணவனை மேலைத்தேய கல்வி முறையை இடைநிலையிலிருந்து அழைத்துச் செல்லும். எதிர்கால இலக்கை அடைவதற்காக பாடசாலைகளில் தொழில்வழிகாட்டல் ஆலோசனைச் சேவைகள் வினைத்திறன் உள்ளதாக மாற்றப்படல் வேண்டும். களப்பயணம் ஊடாக மாணவன் வெளியே சென்று பல்வேறுவட்டதை அவதானிப்பதன் மூலமாகவே அவன் தனது எதிர்கால இலக்கை தீர்மானித்து ஆசிரியரின் உதவியுடன் அவ் இலக்கை அடைய முடியும். எனவே தற்கால ஆசிரியர்களாகிய நீங்கள் ஒவ்வொரு மாணவனையும் இனங்கண்டு அம்மாணவனின் எதிர்காலம் சுபீட்சமடையக்கூடிய பாதையைத் தெளிவாகக் காட்ட வேண்டும் என உங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன். விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஓரளவு மாணவர்களை இனங்கண்டு வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இக்கல்லூரியிலும் சர்வதேச புகழ்பெற்ற வீரர்கள் உருவாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு ஒரு சிறந்த ஆசிரியரை மாணவர்களே உருவாக்குகின்றனர். இந்த வகுப்பறையில் மாணவர் – ஆசிரிய தொடர்பாடல் மூலம் ஏற்படுகின்றது. மாணவர்கள் ஆசிரியர்களது சிந்தனையைத் தூண்ட வேண்டும். (வினாக்கள் மூலம்) ஆசிரியர்கள் செயற்பாடுகள் மூலம் மாணவர்களது சிந்தனையைத் தூண்ட வேண்டும். இப்பரஸ்பர உறவு மூலம் நல்ல ஆசிரியர்களும் நல்ல மாணவர்களும் உருவாக்கப்படுகின்றனர்.
மாணவர்களது சிந்தனையைத் தூண்டினால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி இலகுவானதாக மாற்றமடையும். ஆனால் சிந்தனையைத் தூண்டுவதற்கு ஆசிரியர்கள் கடினமாக முயற்சிக்க வேண்டும்.
அன்பான மாணவர்களே…..
முயற்சி செய்து தோற்றவரும் இல்லை. முயற்சி செய்யாமல் வெற்றிபெறுபவரும் இல்லை. எனவே நீங்கள் முயற்சித்தால் உங்கள் இலக்கை அடையலாம். முயற்சிக்கும் போது தடைகள் ஏற்படுமாயின் இலக்கை மாற்றாது பாதையை மாற்ற வேண்டும். என்ற அப்துல் கலாமின் வாசகத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன். இப்பாடசாலை ஏனைய பாடசாலைகளோடு ஒப்பிடும் போது ஓரளவு வளம் மிக்க பாடசாலையாகும். எனவே இப் பாடசாலையினூடாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பாடசாலைக்கும் சமூகத்துக்கும் எமது ஊருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அடுத்து அன்பான பெற்றோர்களே…..
உங்களது பிள்ளைகயின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க வேண்டுமெனில் பிள்ளைகளைத் தினமும் அவதானித்து அவர்களுடன் தினமும் சிறிது நேரம் கலந்துரையாடி அவர்களின் அபிலாஷைகளை அறிந்து வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்குண்டு. பிள்ளைகளின் ஒழுக்கத்தில் உங்களுக்கு பங்குண்டு. ஆசிரியர்களுடன் பிள்ளைகளைப் பற்றி மனம் விட்டுப் பேசி பிள்ளைகளை சரியான பாதையில் விட்டுச் செல்ல வேண்டும். அதற்கு நிச்சயம் ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். அவர்களின் கடமையும் அதுவே.
இறுதியாக,
மதிப்பார்ந்த பழையமாணவர்களே,
2013 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். திரு கனக. சிவகுமாரனின் அயராத முயற்சியினால் கனடாவில் ஓர் பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்தது, ஆரம்பத்தில் பல தடைகளை சந்தித்தது. பல சவால்களை சந்தித்தது. அச்சங்கம் ஆரம்பிக்கப்படுவதற்கு அப்போது அதிபராக இருந்த நானும் சில கசப்பான உணர்வுகளை சந்தித்தேன். ஆனால் இன்று கனடா பழைய மாணவர் சங்கம் மிகவும் சுறுசுறுப்பாக, ஆக்கபூர்வமாக இயங்குவதையிட்டு உங்களுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியடைகின்றேன். அச்சங்கம் பாடசாலையின் வளர்ச்சியில் காட்டும் அக்கறை இத்தருணத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
உங்களைப் பின்தொடர்ந்து கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை, ஆலோசனைகளை, அதிபரூடாக வழங்குவதற்கு நீங்கள் பின்நிற்கக் கூடாது. உங்களை உங்கள் ஆளுமையை விருத்தி செய்த பாடசாலைக்கு நீங்கள் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இறுதியாக,
இப்பாடசாலை கடந்த கால அதிபர் ஆசிரியர்களாலும், நிகழ்கால அதிபர் ஆசிரியர்களாலும் ஒரு வலுவானதொரு நிலையில் இருப்பது மகிழ்ச்சி தருகின்றது. இந்த நிலை மென் மேலும் வளர்ந்து உலகெங்கும் பாடசாலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் அதற்கு எல்லாம் வல்ல ஆண்டவனின் அருள் கிடைக்க வேண்டும் எனக் கூறி பாடசாலையின் வளர்ச்சியில் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.
இப்பாடசாலையானது வித்துவான் சபாரத்தினம், வித்துவான் முருகேசு, புலவர் பூரணம் ஏனாதிநாதன், பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை போன்ற தமிழ் சைவ அறிஞர்களை உருவாக்கி அவர்கள் கற்பித்த பாடசாலையாகும். அவர்களின் அயராத முயற்சியினால் இன்று காரைநகரில் சைவமும் தமிழும் உலகம் போற்றும் நிலையிலுள்ளது. தொடர்ந்தும் அந்த நிலையில் பேண வேண்டியது எம் ஒவ்வொருவரின் தார்மீகக் கடமையாகும் என வலியுறுத்துகின்றேன். இன்னும் இந்த சந்தர்ப்பத்தில் இப்பாடசாலையின் விளையாட்டு மைதானம் பல ஆளுமை மிக்க காற்பந்தாட்ட, குறுந்தூர ஓட்ட வீரர்களை உருவாக்கியதுடன் காரை விளையாட்டுக்கழகம் எனும் புகழ்பூத்த கழகத்தின் பயிற்சித் திடலாகவும் அமைந்தது, எமது ஊரின் விளையாட்டுத் துறைக்கு மைதானம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது எனக் கூறுவதில் உங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைகின்றேன். எதிர்காலத்திலும் இப்பாடசாலையானது எமது ஊரின் கல்வியறிவை மேம்படுத்த அயராது உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன் முக்கியமாக எமது ஊரின் கலை, பண்பாடுகளையும், கமயப் பழக்கவழக்கங்களையும் பேணிப்பாதுகாத்து நல்லதோர் காரைநகர் சமுதாயத்தை வளர்த்தெடுக்க ஆக்கமும் ஊக்கமும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் சமுதாயத்தின் வளர்ச்சியானது பாடசாலையிலும் ஆலயங்களிலுமே தங்கியுள்ளது.
எனவே என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இப்பெரிய கைங்கரியத்தை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து எல்லாம் வல்ல ஆண்டவனுக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.
வணக்கம்.
பொ.சிவானந்தராஜா
ஓய்வுநிலை வேலணை
கோட்டக் கல்விப் பணிப்பாளர்.
04.07.2017
நினைவுப் பேருரையின் PDF வடிவத்தை இங்கே காணலாம்.
FOUNDERS DAY SPEECH-2017
No Responses to “ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை – திரு பொன். சிவானந்தராசா அவர்கள்”