கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125 ஆண்டு விழா கொண்டாட்ட முதலாம் நாள் நிகழ்வுகளின் முதலாம் அமர்வு கல்லூரி வளாகத்தில் இன்று வியாழக்கிழமை(01-08-2013) மிகக் கோலாகலமாக ஆரம்பமாகியது.
கல்லூரி அன்னைக்கு மகுடம் சூட்டி அன்னையை மகிமைப் படுத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருவிழா இன்றும் நாளையும் இரு தினங்களில்(ஆகஸ்ட்1,2) மூன்று அமர்வுகளாகக் கொண்டாட விழாக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை நடைபெறும் 125 ஆண்டு விழா கொண்டாட்ங்களின் இதயம் எனக் கருதப்படும் முதலாம் அமர்வில் கல்லூரியின் நிறுவுனர் தினமும் சயம்பு மலர் வெளியீடும் நடைபெற்றது.
இவ் அமர்விற்கு பிரதம விருந்தினராக கனடாவிலிருந்து கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும்; பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணருமாகிய மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். கனடாவின் பிரபல குழந்தை மருத்துவ நிபுணரான மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான முதன்மை அனுசரணையினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினராக வடமாகாண பிரதிக் கல்விச் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரனும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.வ.இராதாக்கிருஷ்ணன், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், காரைநகர் அபிவிருத்தி சபைத் தலைவர் திரு.தி.சிவாமகேசன், பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை உப-தலைவர் திரு.சி.நேசேந்திரன், நிறுவுனர் முத்து சயம்பு அவர்ளின் பேரன் திரு.அ.கனகரத்தினம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
காலை 8:30 மணிக்கு அயலில் உள்ள மடத்துக்கரை அம்மன் கோவிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளுடன் விழா ஆரம்பமானது. அதிபர் திருமதி. வாசுகி தவபாலன், பிரதம விருந்தினர் டாக்டர் வி.விஜயரத்தினம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சகிதம் மங்கல வாத்தியங்கள் முழங்க, பான்ட் வாத்திய இசை மற்றும் இன்னியம் வாத்திய இசையுடன் பிரதான வீதி வழியாக கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர்.
வழிபாடுகளைத் தொடர்ந்து புதிதாக புனரமைக்கப்பட்ட நிறுவனர் ஸ்ரீமான் முத்து சயம்பு சிலையை நோக்கி அணிவகுப்பு நகர்ந்து சம்பிரதாயபூர்வமாக திருவுருவச்சிலை பிரதம விருந்தினர் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டு மலர்மாலை அணிவித்து நிறுவுனரைக் கௌரவித்தார். பழைய மாணவர் சங்க கனடாக் கிளை உறுப்பினர் தொழிலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவனின் உதவியினால் அண்மையில் மேற்படி சயம்பு சிலை புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபம் நோக்கி நகர்ந்து மண்டப முன்றலில் கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களினால் ஏற்றி வைக்கப்பட்ட கல்லூரிக் கொடி பட்டொளி வீசிப்பறந்தது. தொடர்ந்து அனைவரும் மண்டபத்தினுள் சென்று அமர மாணவிகளால் தேசியகீதமும், கல்லூரிக் கீதமும் இசைக்கப்பட்டன. மங்கல விளக்கினை விருந்தினர்கள் ஏற்றினர்.
இறைவணக்கத்தினைத் தொடர்ந்து எமது கல்லூரிச் சமூகத்துடன் ஆதரவாக இருந்து அண்மையில் அமரத்துவமடைந்த அமரர்.கலாநிதி.சபாரத்தினம், அமரர்.சின்னத்தம்பி தம்பிராசா (மாஸ்ரர்) ஆகியோரையும் ஏனையோரையும் நினைவு கூர்ந்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து கல்லூரியின் ஆசிரியை திருமதி. சி.வாகீசன் தனது வரவேற்புரையில் விருந்தினர்களையும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். திரு.கு.சண்முகராஜா குருக்கள் அவர்கள் ஆசியுரை வழங்கினார். வாழ்த்துரைகளை ஓய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு.வேலாயுதபிள்ளை, ஒய்வுநிலை அதிபர் திரு.கா.குமாரவேலு, ஆசிரியர் திரு.அ.மனோகரசர்மா, ஆசிரியை திருமதி.ப.அமுதசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
அடுத்ததாக கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது தலைமையுரையில் தான் பதவி ஏற்று ஆறுமாத காலத்தில் கல்லூரிச் சமூகம் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். கல்லூரி சிறப்பான கல்வியை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு சமூகத்தின் மத்தியில் இருப்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். கல்லூரியின் கல்வி வளர்ச்சி விரைவு படுத்தவேண்டும் என சமூகம் எதிர்பார்த்து உதவியை வழங்குவதால் அதனை நிறைவு செய்ய வேகமாகப் பணியாற்ற வேண்டி உள்ளதாகத் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ்விழாவில், நிறுவுனர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியரும், விளையாட்டுத்துறைப் பயிற்றுநரும், பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் போசகருமான திரு.எஸ்.கே. சதாசிவம் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது நினைவுப் பேருரையில் ஸ்ரீமான் முத்து சயம்பு ஸ்தாபகர், அதிபர், முகாமையாளர் என்பதைவிட கல்வியை திட்டமிட்டு செயற்படுத்திய கல்வியாளர் எனக் குறிப்பிடல் பொருத்தமானது என்றார். ஸ்ரீமான் சயம்பு அவர்களின் பணியை நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தின் ஆவணங்களின் உதவியுடன் எடுத்தியம்பினார். காரைநகர் மக்கள் பெருங்குடி மக்களாகவும் விவேகமும் அறிவும் உள்ள மக்களாக திகழ்வதற்கு அமரர்.சயம்புவின் பணிதான் எனவும் காரைநகர் மக்களுக்கு ஸ்ரீமான் சயம்பு மாபெரும் தியாகம் செய்தார் எனவம் குறிப்பிட்டார்.
125 ஆண்டு கால தளர்வில்லா கல்விப்பணியாற்றிய கல்லூரி அன்னைக்கு விழா எடுக்கும் இந்நேரத்தில் வரலராற்றுப் பதிவான சிறப்பு சயம்பு மலரினை விழாவின் மலர்க்குழுவினர் ஆக்கியிருந்தனர். இச்சிறப்பு சயம்பு மலரினை வெளியிட்டு வைத்து வெளியீட்டு உரையை கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், வடமாகாண பிரதிக் கல்விச் செயலாளருமான திரு.ப.விக்கினேஸ்வரன் நிகழ்த்தினார். 125 ஆண்டு விழா கொண்டாடுவதன் மூலம் கல்லூரியுடன் சமூகம் ஒன்றிணையவும். ஒத்துழைப்பு வழங்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். விழாக்கள் கொண்டாடுவதன் மூலம் சமூகத்ததை விழிப்படையச் செய்து கல்விபால் அக்கறை செலுத்த வழிபிறக்கும் என்றார். 125 ஆம் ஆண்டு விழா புலம்பெயர் நாடுகளில் கொண்டாடப்பட்டு அச்சமூகத்தின் ஆதரவும் கிட்ட வழி செய்தது என்றார்.
இச்சிறப்பு சயம்பு மலர் பற்றிய மதிப்பீட்டு உரையை கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சயம்பு மலர் குறுகிய காலத்தில் மிகச் செம்மையாக மலர்ந்துள்ளது என்றார். காரைநகர் தொடர்பான பல தரமான ஆக்கங்களைத் தாங்கி மலர் வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்தார். ‘2500 ஆண்டு கால வரலாற்றில் காரைநகர்’ என்ற தலைப்பில் திரு.பொ.இரகுபதி காரைநகர் தொடர்பான பல தகவல்களை ஆராய்ச்சி மூலம் தெரிவித்துள்ளார். மிகப்பெறுமதிமிக்க கட்டுரைகளை உள்ளடக்கிய இம்மலர் எல்லோரினதும் இல்லங்களிலும் பேணப்பட வேண்டிய ஆவணம் என்றார்.
மலரின் முதல் பிரதியை பிரதம விருந்தினர் டாக்டர்.வி.விஜயரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை கல்லூரிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் பழைய மாணவர்களும், அயல் பாடசாலை அதிபர்களும், கல்லுரியின் ஆசிரிய மணிகளும், கல்வி சாரா ஊழியர்களும் பெற்றுக் கொண்டனர். மலர் வெளியீட்டினைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
அடுத்ததாக இன்றைய அமர்வின் பிரதம விருந்தனர் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர்.வி.விஜயரத்தினம் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தான் கல்லூரியின் பழைய மாணவன் என்றும் தன்னை அழைத்து கௌரவித்தமைக்கு நன்றி தெரிவித்தார். விழா திறமையாக ஒழுங்கு செய்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். 125 ஆம் ஆண்டு விழா சரித்திரத்தில் இடம்பெற வேண்டிய விழா சிறப்புற நடைபெற்றமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று கூறினார். ஒரு கல்லூரியின் தரத்தை பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள், ஆய்வுகூடங்கள், மைதானங்கள், ஆசிரியாகள், அதிபரின் தரம் என்பனவற்றை வைத்து மதிப்பீடு செய்யுமிடத்து கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் தராதரம் உள்ள கல்லூரி எனத் தெரிவித்தார். இக்கல்லூரிக்கு வெளிப்படையாக பல தேவைகள் உள்ளன எனவும் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் வழங்கிய 1 மில்லியன் ரூபாவையும் நினைவுக் கேடயத்தையும் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அதிபர், திருமதி.வாசுகி தவபாலன் அவர்களிடம் கையளித்தார். பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் வழங்கிய நோக்கத்தின் அடிப்படையில் இந்நிதி சேர்க்கப்பட்டு செலவு செய்யப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிறுவுனர் சயம்பு அவர்களின் பேரன் திரு.அ.கனகரத்தினம் அவர்கள் தான் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் காரை இந்த ஆங்கில வித்தியாசாலையில் கற்று யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றதாகக் கூறினார்.
தொடர்ந்து கல்லூரியின் ஆசிரியை திருமதி. தா.ஜெகன்நாதனின் நன்றியுரையுடன் விழாவின் முதலாம் நாள் நிகழ்வின் முதலாம் அமர்வு இனிதேநிறைவேறியது.
No Responses to “காரை இந்து அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழும் 125 ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் இன்று கோலகலமாக ஆரம்பம்”