கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் முதலாம் நாளின் இரண்டாம் அமர்வில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வருடாந்த பரிசளிப்பு விழா 01-08-2013 அன்று பிற்பகல் 2:30 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
இவ்வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்கியிருந்தது. இதன்பொருட்டு ஒரு இலட்சம் ரூபாவினை தாய்ச் சங்க நிர்வாகத்திற்கு கனடா கிளை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் நகர முன்னணிப் பாடசாலைகளுக்கு நிகரானதாக இம்முறை இப்பரிசளிப்பு விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.வ.செல்வராஜாவும் சிறப்பு விருந்தினராக வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.இராஜேந்திரமும் கௌரவ விருந்தினர்களாக கனடாவிலிருந்து கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும்; பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணருமாகிய மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களும் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
பிற்பகல் 2:30 மணிக்கு அதிபர் திருமதி. வாசுகி தவபாலன், விருந்தினர்கள் சகிதம் பான்ட் வாத்திய இசையுடன் நடராசா ஞாபாகார்த்த மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். மண்டப முன்றலில் தமிழர் பாரம்பரியமுறையில் கல்லூரியின் ஆசிரியர் திரு.நா.கேதாரநாதன் அவர்கள் விருந்தினர்களை தாம்பூலத்துடன் வரவேற்றார். மங்கல விளக்கினை விருந்தினர்கள், பெற்றோர், மாணவர் பிரதிநிதிகள் ஏற்றினர்.
இறைவணக்கத்தினைத் தொடர்ந்து கல்லூரியின் ஆசிரியை திருமதி. சா.சிவராஜ் தனது வரவேற்புரையில் விருந்தினர்களையும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பரிசில் தின அறிக்கையை வாசித்தார்.
கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் உரையாற்றும்போது, இக்கல்லூரி யாழ்ப்பாண நகரின் ஒரு கிராமத்தில் அமைந்திருந்தாலும் சிறப்பான பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். நாட்டில் உள்ள 54 மத்திய மகா வித்தியாலயங்களில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் நற்பண்புகளைக் கொண்டிருப்பதாகவும் நிறுவுனர் முத்து சயம்பு, அதிபர் கலாநிதி.ஆ.தியாகராசா ஆகியோரின் சேவையால் பாடசாலைக்கு உரமூட்டப்பட்டுள்ளது என்றும் 1000 பாடசாலைகள் திட்டத்தில் முதலாவது பாடசாலையாக தீவக வலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
சிறப்ப விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.இராஜேந்திரம் உரையாற்றுகையில் மாணவர்களின் கல்வி கற்கும் காலம் மிக முக்கியமானது. பெற்றோரினதும், ஆசிரியரினதும் அறிவுரை வழிகாட்டலின்படி வாழ்க்கையில் முன்னேற மாணவர்கள் முயல வேண்டும். கல்லூரியின் ஆசிரியர்களின் பணிதான் கல்வியையும் கல்லூரியின் தரத்தையும் பேண உதவும் என்றார்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.வ.செல்வராஜா உரையாற்றும்போது 125 ஆவது ஆண்டு விழா வரலாற்றில் குறிப்பிடக் கூடியதாக அமைந்துள்ளது என்றார். இப்பிரதேச மாணவர்கள் இக்கல்லூரியில் கற்பதன் மூலம் இக்கல்லூரி மேலும் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார்.
அடுத்து மாணவர்களுக்குரிய பரிசில்களை விருந்தினர்கள் வழங்கினர். சிறப்புப் பரிசாக க.பொ.த.(சாதாரணம்) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மூவருக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது. பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் அமரர் தம்பிராசா மாஸ்டர் தமக்கு கணிதபாடத்தினை கற்பித்த அமரர் மு.அம்பலவாணர் அமரர் க.வே.நடராசா ஆகிய இரு ஆசிரியர்களின் நினைவாக இச்சிறப்புப் பரிசிலினை வழங்கி உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்னொரு சிறப்புப் பரிசாக க.பொ.த.(உயர்தரம்) பரீட்சையில் சங்கீத பாடத்தில் முறையே A,B தர சித்திபெற்ற இருவருக்கு தலா ஜயாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது. பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உறுப்பினர்களான திரு. திருமதி. சச்சிதானந்தம் சுந்தரேஸ்வரி தம்பதியினர் தமது தாயார் அமரர் திருமதி சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்களது நினைவாக இச்சிறப்புப் பரிசிலினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் 125 ஆவது ஆண்டு விழாவினைக் குறிக்கும் கலை நிகழ்வுகளை மாணவர்கள் வழங்கியிருந்தனர். கல்லூரியின் ஆசிரியர் திரு.ச.அரவிந்தன் அவர்கள் விழாவில் கலந்து கொண்ட பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்ப்பண், கல்லூரிப் பண் இசைக்கப்பட்டு கொடியிறக்கப்பட்டதுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் முதலாம் நாளின் இரண்டாம் அமர்வு இனிதே நிறைவேறியது,
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் 2 ஆம் அமர்வாக கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது”