கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் மூன்றாம் அமர்வாக இரண்டாம் நாள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கலை விழா 02-08-2013 அன்று காலை 9.00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக் கழக உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் ச.சத்தியசீலன், யாழ். பல்கலைக் கழக கல்வியற்துறைத் தலைவர் கலாநிதி.திருமதி.அ.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக் கழக நுண்கலைப்பீட சிரேஸ்ட விரிவுரையாளாரும் கல்லூரியின் பழைய மாணவியுமான செல்வி.பரமேஸ்வரி கணேசனும் கௌரவ விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ச.பாஸ்கரன், தீவக வலய ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.க.கணபதி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
காலை 9:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, பான்ட் வாத்திய இசை, மற்றும் இன்னியம் வாத்திய இசையுடன் கல்லூரி அதிபர் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டனர். விருந்தினர்களை கல்லூரி மாணவர்கள் மலர்மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்றனர்.
தேசியக் கொடியினை பிரதம விருந்தினரும் கல்லூரிக் கொடியினை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் ஏற்றினர். மங்கல விளக்கினை விருந்தினர்கள், அதிபர், ஆசிரியர், பெற்றோர், மாணவ பிரதிநிதிகள் ஏற்றினர்.
இறைவணக்கம், தமிழ்மொழி வாழ்த்தினைத் தொடர்ந்து மாணவர்களின் அழகிய வரவேற்பு நடனம் நடைபெற்றது. கல்லூரியின் ஆசிரியை திருமதி. சர்வாம்பிகை உலககுருநாதன்; தனது வரவேற்புரையில் விருந்தினர்களையும், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பங்குபற்றி தமது கலைத் திறமைகளை வெளிப்படுத்திய இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் உள்ளடக்கிய கலை விழாவாக இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் பங்குபற்றிய ‘வடமிழுப்போம் வாரீர்’ என்ற கவியரங்கத்திற்கு கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.ந.கணேசமூர்த்தி தலைமைவகித்திருந்தார். இன்றைய சமூகத்தில் மக்கள் எவ்வழிகளில் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதை நகைச்சுவையுடன் வெளிப்படித்திய ‘பொம்மலாட்டம்’ என்ற சமூக நாடகம் அரங்கேறியபோது ரசிகர்களின் சிரிப்பொலியும் கரவொலியும் அரங்கத்தில் எதிரொலித்தன.
ஆதிவாசிகளின் நடனம் ரசிகர்களை ஆதிகாலத்திற்கு அழைத்துச் சென்றது. கிராமிய உடை உடுத்தி சிறுவர்கள் தாம் முறைப்படி கற்ற தமிழிசையை இசைத்தபோது ரசிகர்கள் அமைதியாக தாளம் போட்டு ரசித்தனர். மிகச் சிறப்பான முறையில் நெறிப்படுத்தப்பட்டிருந்த கோலாட்டதில் வந்த கண்ணன் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டான்.
இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய ‘தசாவதாரம்’ என்ற நாட்டிய நாடகம் நல்லதொரு கலைப்படைப்பைக் கண்டு களித்த திருப்தியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. இறுதியாக ஆசிரியர்களும் கல்விசாரா ஊழியரும் இணைந்து படைத்த இன்னிசை மழையில் நனைந்து ரசிகர்கள் தம்மை மறந்திருந்தனர்.
அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் தனது உரையில் இவ்விழா வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கல்லூரியின் ஆசிரியர் திரு.நா.கேதாரிநாதன் கற்பித்தல் தவிர்ந்த ஏனைய நேரங்களிலும் பாடசாலையின் ஒழுங்கு கட்டுபாட்டைப் பேணுவதற்கும் பாடசாலை முன்னேற்றத்திற்கும் தன்னை அர்ப்பணித்து சேவை செய்வதாகவும் பாடசாலை ஆண்கள் பான்ட் இற்கான சீருடையை தனது செலவில் அன்பளிப்பு செய்திருந்தாகவும் அதற்காக அதிபரினால் பிரத்தியேகமாக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
சிறப்பு விருந்தினனராகக் கலந்து கொண்டகல்லூரியின் பழைய மாணவியும், இசைப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரும், யாழ். பல்கலைக் கழக நுண்கலைப் பீட விரிவுரையாளருமாகிய செல்வி.பரமேஸ்வரி கணேசன் உரையாற்றும் போது தனது பள்ளிக் கால நினைவுகளை மீட்டியதோடு வழிபாட்டின்போது தான் அன்று பாடியதற்கும் இன்று பாடுவதற்கும் உள்ள வேறுபாட்டை ஒரு பாடலை இசைத்துக் காட்டி தொடர்ந்து கற்பதனால் எவ்வாறு ஒருவர் தனது திறமையை வளர்த்துக் கொள்கின்றார் என்றும் கூறினார்.
பிரதம விருந்தினர் யாழ் பல்கலைக் கழக உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் ச.சத்தியசீலன் உரையாற்றும்போது தரமான கலைப் படைப்புகளைக் கண்டு களித்த திருப்தி தமக்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கல்லூரியின் ஆசிரியர் திரு.நா.கேதாரிநாதன் அவர்கள் விழாவில் கலந்து கொண்ட பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
கொடியிறக்கப்பட்டதுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வான இரண்டாம் நாளின் மூன்றாம் அமர்வு இனிதே நிறைவேறியது.
காரை இந்து அன்னைக்கு மகுடம் சூட்டி மூன்று அமர்வுகளாகக் கொண்டாடிய வரலாற்று முத்கியத்துவம் வாய்ந்த இப்பெருவிழாவின் வெற்றிக்கு உழைத்த கல்லூரிச் சமூகத்தினரும் தாம் பதவியேற்றுக் குறுகிய காலத்தில் சிறந்த முறையில் விழாவினை நெறிப்படுத்திய கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் உண்மையில் பாராட்டுக்கும் நன்றிக்குமுரியவர்கள். விழா நிகழ்ச்சிகளின் படங்களை கீழே காணலாம்.
No Responses to “கல்லூரியின் கலைமாணவர்களுக்கு சிறந்த களமாக அமைந்திருந்த கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் 3 ஆம் அமர்வாக அரங்கேறிய கலைவிழா”