“தாய்மலரடிபணிவோம் – நம் கல்லூரி
தமிழெனும் அமுதினைப் பருகிடநிலைகொண்ட…..…..”
எனும் கல்லூரித் தாயின் கீதத்திற்கமைய தித்திக்கும் அமுதினைப பருகித் திளைத்த கனடாவாழ் கல்லூரியின் புதல்வர்கள் அணிதிரண்டு 2012 புரட்டாதித் திங்களில் கால்கோளிட்ட பழைய மாணவர் சங்கம் இன்றுடன் ஐந்தாண்டு அகவையைப் பூர்ததிசெய்யும் இந்நன்னாளில் பல்லாண்டு வாழ வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
இவ் ஐந்து வருடகாலத்துள் கனடா பழைய மாணவர் சங்கம் கல்லூரி வளர்ச்சிக்காக மகத்தான பங்களிப்பை வழங்கியமையால் கல்லூரி துரித கதியில் வளர்ச்சி கண்டு வலயம், மாகாணம், தேசியம் என்றவகையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி இலங்கைத் திருநாட்டின் பேசப்படும் ஒருபாடசாலையாக தடம பதித்துள்ளது என்றால் மிகையாகாது.
அவ்வகையில் முதன்முதலில் சங்கத்தை தலைமை தாங்கி நெறிப்படுத்திய திரு.சி.தம்பிராசா மாஸ்ரர், அதனைத் தொடர்ந்து திரு த.அம்பிகைபாகன், திரு.மு. வேலாயுதபிள்ளை ஆகியோரும், செயலாளர் திரு.கனக.சிவகுமாரன், பொருளாளர்களாக செயற்பட்ட திரு.ஆ.சோதிநாதன், திரு.ந. பிரகலாதீஸ்வரன் திரு. மா.கனகசபாபதி ஆகியோரும் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களும் சங்கத்தை சீரியமுறையில் செயற்படுத்தி கல்லூரி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளார்கள். குறிப்பாக செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் பாடசாலையுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி. கல்லூரி வளர்ச்சிக்குஆக்கமும் ஊக்கமும் வழங்கிய வண்ணம் இருந்தார்கள. எல்லாவற்றுக்கும் மேலாக கனடாவாழ் காரை.மக்களின் ஒத்துழைப்பும் அனுசரணையும் அளப்பரியது என்றே கூறவேண்டும். சங்கத்தின் போசகர்களாக செயற்பட்ட திரு.வி.விஸ்வலிங்கம், திரு.மு.வேலாயுதபிள்ளை ஆகியோர் சங்கம் நெறிமுறை தவறாது செயற்பட உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கியமையும், இணையத்தள நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் பாடசாலை மற்றும் சங்க நிகழ்வுகளை உடனுக்குடன் இணையத்தளத்தில் தனக்கேயுரிய சிறந்த விமர்சனக்கண்ணோட்டத்தில் பிரசுரித்து கல்லூரியின் சாதனைகளை பறைசாற்றியதுடன் தேவைகளை பூர்த்திசெய்யவும் உறுதுணைபுரிந்தார். இச்சந்தர்ப்பத்தில் கனடா பழைய மாணவர் சங்கம் கருக்கொள்ள அடிகோலிய, அன்றைய அதிபர் திரு.பொ.சிவானந்தராசா அவர்களையும் அன்றைய தாய்ச் சங்கப் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களையும், மறக்கமுடியாது.
சங்கத்தினால் மேலதிகமின் தொலைபேசிக் கட்டணம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான நிதிஉதவி முதல் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்கான காணிக் கொள்வனவு, மாணவர் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் எனப் பல்வேறு பரிமாணங்களில் பாடசாலைச் செயற்பாடுகளுக்கான அனுசரணைகளை வழங்கியவண்ணம் இருந்தார்கள். அவ்வகையில் கனடா பழைய மாணவர் சங்கம் ஆரம்பித்து கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்லூரி, அபிவிருத்தி நோக்கி வீறுநடைபோட தன்னாலான பூரண ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தார்கள்.
அவ்வகையில் கல்லூரியின் அக்காலப் பகுதி அதிபர் என்றவகையில் கல்லூரியை சிறப்பாக அபிவிருத்திப் பாதையில் முன்னகர்த்த உறுதுணை புரிந்த கனடா பழைய மாணவர் சங்கத்திற்கு நன்றிகளையும், அவர்களது மகத்தான சேவைக்கான பாராட்டுகளையும் வழங்குவதுடன் கல்லூரி அன்னை வாழும் வரை சங்கமும் சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகின்றேன்.
திருமதி வாசுகி. தவபாலன்
(முன்னாள் அதிபர், காரைநகர் இந்துக் கல்லூரி)
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கம் வாழ்க நீடூழி! முன்னாள் அதிபர் திருமதி வாசுகி. தவபாலன்”