காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா தனது ஐந்தாவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிடும் இந்நாட்களில், எமது சங்கத்தின் ஆரம்பத்தையும், ஐந்து ஆண்டுகளில் ஆற்றிய சேவைகளையும்; அதன் வளர்ச்சியையும் எண்ணிப் பெருமிதமடைகின்றேன்.
சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் விவசாயம், வியாபாரம், மீன்பிடித்தொழில், அரசாங்க உத்தியோகம் ஆகியவற்றில் தங்கியிருந்த எம்மூர் (காரைநகர்) மக்களில் படித்த சிலர் மலேசியாவுக்கு வேலைவாய்ப்புத் தேடி குடி பெயர்ந்தார்கள். அவர்கள் தாம் பிறந்த ஊரையும் படித்த கல்லூரியையும் மறவாமல், தம் ஊருக்கும் உறவினர்களுக்கும் உதவிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் உதவியால் ஓலைக் கொட்டில்களாக இருந்த எம் கல்லூரி வகுப்பறைகள் பல ஓட்டுக் கட்டிடங்களாக மாற்றம் பெற்றன.
இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பின் 1956இல் சிங்களம் மாத்திரம் சட்டம் இயற்றப்பட, தமிழர்கள் அரசாங்க சேவையில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், நன்றாகப் படித்த தமிழர்கள் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் குடிபெயரத் தொடங்கினர்.
1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாகவும் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தாம் பிறந்த நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படியாக இடம்பெயர்ந்து கனடாவில் குடியேறிய ஆயிரக்கணக்கான காரைநகர் மக்கள் தாம் பிறந்த காரைநகர் மண்ணை மறக்காமல் தம் ஊருக்கும் அங்கிருக்கும் மக்களுக்கும், ஆலயங்கள், பள்ளிக்கூடங்களஇ; மருத்துவமனை போன்றவற்றிற்கும் உதவி செய்யும் நோக்கில் ஒரு அமைப்பை சுமார் 27 வருடங்களுக்கு முன் நிறுவி இன்றும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், கனடா வாழ் காரைநகர் மக்களிடமிருந்தும் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்தும் கல்லூரித் தேவைகளுக்குப் போதிய நிதி உதவி கிடைப்பதில்லை என்ற குறை பாடசாலைச் சமூகத்தின் மத்தியில் இருந்து வந்துள்ளது. காரைநகருக்கான பொது அமைப்பினால், இந்துக் கல்லூரிக்கென தனிப்பட்ட முறையில் கூடிய அளவில் உதவிகள் செய்ய முடியாத நிலையில், இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலர் தற்போது கனடாவில் வசிப்பதால், அவர்கள் பழைய மாணவர் சங்கக் கிளையொன்றை அங்கு அமைத்து தாம் படித்த கல்லூரிக்கு உதவி செய்யவேண்டும் என்ற வேண்டுகோள் காரைநகரில் இருந்து பள்ளிக்கூடச் சமுகத்தால் விடுக்கப்பட்டது. இவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட காரை இந்துவின் பழைய மாணவர்களினால் 2011 – 2012 ஆண்டுகளில் ஆலோசிக்கப்பட்டு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பழைய மாணவர்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்டதுதான் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையாகும்.
இச்சங்கத்தின் ஆரம்பகாலத் திட்டமிடலில் தம்பிராசா மாஸ்டர், கனக சிவகுமாரன், ஆறுமுகம் சோதிநாதன், திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன், கந்தப்பு அம்பலவாணர் ஆகியோருடன் இணைந்து பங்குபற்றியவன் என்ற வகையிலும், எம் சங்கத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் போசகராகவும் பின்னர் தலைவராகவும் பணியாற்றியிருந்தவன் என்ற வகையிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம் சங்கம் கல்லூரித் தேவைகளில் அதிகளவு பங்கு பற்றித் பூர்த்தி செய்திருக்கிறது என்ற வகையிலும் எனது வயது முதிர்ச்சி உடல் நிலை காரணமாக சங்கத்தின் முக்கிய பதவிகளில் இருந்து விலகி இருக்கவேண்டிய நிலையிலும் இப்போதும் எம் சங்க நடவடிக்கைகளை தூர இருந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன் என்ற வகையிலும் பெருமை அடைகின்றேன்.
1948 – 1955 ஆம் ஆண்டுகளில் எம் கல்லூரி எனக்கு அளித்த படிப்பறிவுதான் 1956 – 1999 ஆண்டுகளில் அரசாங்க சேவையில் ஈடுபடச் செய்து, என் வாழ்க்கையில் என்னை முன்னேற்றியது என்பதை நினைத்துப் பூரிப்படைகின்றேன்.
எமது பழைய மாணவர் சங்கம் மேலும் செழிப்புற்று கலலூரிக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்யவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
மு. வேலாயுதபிள்ளை
ஓய்வுபெற்ற பிரதி நில அளவை அதிபதி
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றத்திற்கு உழைத்தவரும் சங்கத்தின் போசகராகவும் பின்னர் தலைவராகவும் பணியாற்றியிருந்தவரும் ஓய்வுநிலை பிரதி நில அளவை அதிபதியுமாகிய திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி”