வரலாற்றில் பதிவாகியுள்ள பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அங்குரார்ப்பணக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய, சங்கத்தின் தோற்றத்திற்கு உழைத்தவரும் யாழ்.சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் முன்னைநாள் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியையும் கனடா-காரை கலாச்சார மனறத்தின் முன்னைநாள் செயலாளரும் கனடிய பல்கலாச்சார வானொலியில் கடந்த 10 ஆண்டுகளாகச் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவரும், பொறியியல் நிறுவனமொன்றில் தர உத்தரவாத மேலாளாளராகப் பணியாற்றி வருபவரும் karaihinducanada.com இணையத்தள சேவையின் நிர்வாகியுமாகிய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் நிகழ்த்தியிருந்த தலைமையுரை அதன் சிறப்புக் கருதி இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா
அமைப்புப் பொதுக் கூட்டம்
தலைமை உரை
காரை மாதாவின் மடியிலும், அதன் அயற்கிராமத்திலும் பிறந்து, காரை இந்து அன்னையின் கையில் தவழ்ந்து, இன்று மேபிள் மர நிழலில் கூடியிருக்கின்றோம்.
காரைநகர் இந்துக்கல்லூரி 125 ஆண்டு கால பழைமை வாய்ந்த பல சாதனைகளைப் படைத்த யாழ் மாவட்டத்திலுள்ள பிரபல கல்லூரிகளுக்கு இணையான ஒரு முதன்மைப் பாடசாலை.
காரை இந்துவின் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான நாள்.
காரை இந்துவின் புதல்வர்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மலேசியாவிற்குச் சென்றிருந்தனர்.
அதன் பின்னர். 70 களில் தரப்படுத்தலில் உயர் கல்வி வாய்ப்பு குறைக்கப் பட்ட நிலையில் உயர் கல்விக்காக இலண்டன் மாநாகருக்குச் சென்றிருந்தனர்.
அதன்பின்னர் 1977, 1983 ஜுலை இனப்படுகொலைகளை அடுத்து பெருமளவில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
ஆக ஒரு நூற்றாண்டு காலமாக காரை இந்துவின் புதல்வர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கல்லூரி வளர்ச்சிப் பணிகளில் அவ்வப் போது உதவி வந்திருக்கின்றார்கள். கொழும்பில் பழைய மாணவர் சங்கத்தின் கிளை இருக்கின்றது, இருந்த போதிலும் எந்த ஒரு வெளி நாட்டிலும் பழைய மாணவர் சங்கத்தின் கிளை அமைக்கப்படவில்லை.
புலம்பெயர் நாடொன்றில் கனடாவிலேயே முதன் முதலில் அதன் கிளை அமைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய நாள் காரை இந்துவின் வரலாற்றில் மிகமுக்கியமான நாள்.
எவ்வாறு ஒரு அழகிய சிலையை வடிக்கும் போது உளியின் வலியை ஒரு சிற்பக் கலைஞன் தாங்குகின்றானோ. அவ்வாறே எத்தனையோ சவால்கள், எத்தனையோ தடைக் கற்கள், எவ்வளவோ வேதனைகள், எல்லாவற்றையும் தாண்டி இன்று இந்த இலக்கை அடைந்திருக்கிறோம்.
கல்லூரி அதிபர் திரு. பொன். சிவானந்தராசா அவர்கள் ஒரு தனித்துவமான சுதந்திரமான பழைய மாணவர் சங்கத்தின் கிளை கனடாவில் அமைக்கபட வேண்டும் என்று எம்மை வேண்டிக் கொண்டதுடன் அதில் தொடர்ந்து உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். தாய்ச்சங்கத்தின் போசகர் திரு. எஸ்.கே. சதாசிவம் ஆசிரியர் அவர்கள் தொடர்ச்சியாக எம்முடன் தொடர்பில் இருந்து பொறுப்புடனும் நிதானத்துடனும் எம்மை வழிநடத்தினார். தாய்ச்சங்கத்தின் உறுப்பினர்களும் அதில் குறிப்பாக பட்டதாரி இளைஞர்கள் மிக விழிப்புடனும் உற்சாகத்துடனும் இருந்து பொறுமை காக்க வேண்டிய இடத்தில் பொறுமையாகவும், விரைந்து முடிவெடுக்க வேண்டிய இடத்தில் விரைந்தும் இந்த விடயத்தைக் கையாண்டு எமக்கு ஒத்துழைத்தார்கள்.
அறிவுடைமைக்கு அழகு துணிவுடைமை என்பார்கள். கல்லூரியின் தாய்ச்சங்கத்தினால் நியமிக்கப்பட்ட அமைப்புக் குழுவின் எட்டுப் பேரில் ஐந்து பேர் மிகவும் துணிவுடனும் நிதானத்துடனும் பயணித்தார்கள். அதில் குறிப்பாக கல்லூரியின் முன்னாள் உப-அதிபர் தம்பிராசா ஆசிரியர் அவர்கள் இடைக்கால நிர்வாக சபையின் ஆலோசகர் என்ற வகையில் மிகவும் பொறுமையுடனும் தெளிவுடனும் இருந்து உறுதியாக வழிகாட்டினார். நாம் கலங்கி நிற்கும் போது ஆறுதல் கூறி சாந்தமாக இருங்கள் என்று அமைதிப்படுத்துவார். அவர் எமது ஊர் சார்ந்த இனம் சார்ந்த எமது சைவசமயம் சார்ந்த பல விடயங்களில் ஆர்வமாக இருந்து தன்னால் இயன்றளவு சமூகமளித்து தனது பங்களிப்பை வழங்கி வந்தாலும் காரை இந்துக் கல்லூரி விடயத்தில் மட்டுமே தனது முழுமையான பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
அடுத்து கல்லூரியின் பழைய மாணவரும் இளைப்பாறிய நிலஅளவையாளர் நாயகமும் ஆகிய திரு. வேலாயுதபிள்ளை அவர்கள். வயதில் மூத்தவர் ஆனாலும் எமது தளபதி அவர்தான் என்று கூறலாம். உணர்ச்சி வசப்படாமல் கருத்துக்களை கருத்துக்களால் மோதுபவர். தர்க்க ரீதியாக கேள்விக் கணைகளைத் தொடுத்து சொல்லம்புகளை ஏவுவதில் வல்லவர். பல மணிநேரங்களைச் செலவிட்டு சங்கத்தின் யாப்பினை வரைந்தவர். பல சிரமங்களுக்கு மத்தியிலும் இந்தப் பணியில் உறுதியாக, ஈடுபட்டவர்.
அடுத்து இணைப்பாளர் திரு. கனக. சிவகுமாரன் அவர்கள். அவர் ‘காரை இந்து பழைய மாணவர் சங்கம்’ என்ற கருத்துருவாக்கம் வந்த நாளில் இருந்து பசி நோக்காது, கண்துஞ்சாது கடும் தவம் செய்தார் என்றே சொல்ல வேண்டும். காய்த்த மரம் கல்லடி படுவது வழமை. இவர்போன்ற தன்னலமற்ற மக்கள் செயற்பாட்;டாளர்கள் சொல்லடிகளுக்கு தவறிவிடுவதில்லை. அவற்றை எல்லாம் துணிவோடும், பொறுமையோடும் எதிர்கொண்டு இன்று இந்த இலக்கை அடைந்ததில் அவருக்குப் பெரும் பங்கு இருக்கின்றது.
மற்றும் திரு. அம்பலவாணர், திரு. சோதிநாதன் ஆகியோரும் தொடர்ச்சியாக உறுதியாக ஒத்துழைத்தார்கள். அவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.
இறுதியாக, ஒர் இனத்தின் இருப்பு காக்கப்பட வேண்டுமாக இருந்தால், அந்த இனத்தின் ஊர்கள் காக்கப்பட வேண்டும். ஊர்கள் காக்கப்பட வேண்டுமாக இருந்தால் ஊர்மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்;. அதற்கு கல்விக் கூடங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் கல்விக் கூடங்கள் வளர்ச்சி அடைவதற்கு இவ்வாறான பழைய மாணவர் சங்கம் அவசியம். அதுவும் 125 ஆண்டு கால பழமை வாய்ந்த எத்தனையோ கல்விமான்களை உருவாக்கிய யாழ் மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான ஒரு முதன்மைப் பாடசாலைக்கு மிக மிக அவசியமாகிறது.
அமையப் போகின்ற பழைய மாணவர் சங்கம் காரை இந்து அன்னையின் துதி பாடும், தூக்கி விடும் என்று திடமான நம்பிக்கை இருக்கின்றது.
இந்த நேரத்தில், காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா வாழ் காரைநகர் மக்களை ஒன்றிணைத்து கடந்த 23 ஆண்டு காலமாக இயங்கி வரும் ஒரே ஓரு மன்றம் கனடா-காரை கலாச்சார மன்றம் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இதில் நாம் எல்லோரும் உறுப்பினர்களாக இருக்கின்றோம்.
கனடா-காரை கலாச்சார மன்றமும், காரை இந்து பழைய மாணவர் சங்கம் கனடாவும் ஒன்றுக் கொன்று புரிந்துணர்வுள்ள சகோதர உறவுடன் இருக்கும். ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தாது. என்பதைத் தெளிவு படுத்த விரும்புகின்றேன். இங்கு வந்திருக்கும் காரைநகரைச் சேர்ந்த காரை இந்துவின் பழைய மாணவர்கள் கனடா-காரை கலாச்சார மன்றத்திலும் உறுப்பினர்களாக இன்னும் சேராதவர்கள் சேர்ந்து கொள்ள வேண்டும் அதன் அனைத்து நிகழ்வுகளிலும் பொதுக் கூட்டத்திலும் பங்கு பற்ற வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
இறுதியாக காரை இந்து பழைய மாணவர் சங்கம்- கனடாவானது எமக்கு அறிவையும் பண்பையும் ஊட்டி வளர்த்த காரை இந்து அன்னையின் புகழ் வானுயர வளர்வதற்கும் தன்மானமுள்ள தமிழ் மகளாக தலை நிமிர்ந்து நிற்பதற்கும் உறுதுணையாகப் பணியாற்ற எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானை வேண்டி எனது உரையை முடிக்கின்றேன்.
திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன்
செப்ரம்பர். 1. 2012
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் நிகழ்த்தியிருந்த தலைமையுரை”