பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் போசகராகப் பணியாற்றி சிறந்த ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்து வருபவரும், கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவரும் ‘அன்புநெறி’ என்ற சைவத்தமிழ் மாத இதழின் ஆசிரியரும், சைவசமய குரவர் பாடசாலையின் அதிபரும், ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கமாக ஆரம்பிக்கப்பட்ட தற்போதய கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், தாயகத்தில் பிரபல்யம் மிக்க கணிதப் பட்டதாரி ஆசிரியராக விளங்கியவருமாகிய சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் சங்கத்தின் 5 ஆண்டுகள் பூர்த்;தியை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியை இங்கே தருகின்றோம்.
காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (கனடா கிளை) ஆரம்பித்து ஐந்து ஆண்டுகாலம் (01.09.2012 – 01.09.2017)நிறைவுஎய்தி ஆறாவது ஆண்டு தொடங்குகின்ற காலகட்டத்தில் அதன் பணிகளை எண்ணிப் பார்க்கும் பொழுது வியந்து போற்றுதற்குரிய அரும் பணிகளைச் செய்திருக்கிறது என்பதை யாவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்குச் சாதனை படைத்ததை போற்றி இறைவனை வேண்டி வணங்கிப் பாராட்டி உளமார வாழ்த்துகிறேன்.
இச் சங்கத்தை ஆரம்பிப்பதற்கான காரணங்களைக் கலந்துரையாடி முறையாகவும் கட்டுக்கோப்பாகவும் வலுவாகவும் ஆரம்பிப்பதற்கு முன்னின்று பெரும் பணியாற்றிய பெருமக்களான திருவாளர்கள் சி. தம்பிராசா, கனக. சிவகுமாரன், மு. வேலாயுதபிள்ளை, ஆ. சோதிநாதன், க. அம்பலவாணர், திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் போன்றோர் சங்கத்தின் வரலாற்றில் நிலைபெற்று இருக்கவேண்டியவர்கள் ஆவர். இச்சங்கம் ஆரம்பமாவதற்கு அன்றைய கல்லூரி அதிபர் திரு. பொ. சிவானந்தராசா, தாய்ச் சங்கப் போசகர் திரு எஸ். கே. சதாசிவம் அவர்களின் பணிகளும் போற்றப்படவேண்டியனவாகும்.
இம்மன்றத்தை வளர்ப்பதற்கு அனுசரணையாக இருந்தவர்களுக்கும், நிதி உதவி அளித்தவர்களுக்கும், சிறப்பு நிகழ்ச்சிகளாக இசைக்கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குப் பேராதரவு அளித்தவர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் கூறுவதோடு, தொடர்ந்து அவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் என்றும் பெருகவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
காலத்திற்குக் காலம் இருந்துவந்த நிர்வாகக் குழுவினர் சிறப்பாகச் செயற்பட்டமையால் சங்கப் பணிகளை திறம்பட ஆற்ற முடிந்தது. இனிவரும் காலங்களிலும் அவர்கள் பணிகள் சிறப்புற்று விளங்க இறைவனை வேண்டுகிறேன்.
கல்லூரியில் கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கல்லூரியின் பௌதிகவளம் சார்ந்த பணிகளுக்கு அவ்வக் காலங்களில் இருந்த அதிபர்கள் சபைக்கு அளித்த பங்களிப்புகளுக்கும் கல்லூரியின் தேவைகளைக் குறித்து நிர்வாகக் குழு ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பதற்கு ஒத்துழைத்தமைக்கும் பாராட்டி நன்றி கூறுகிறேன்.
கல்லூரியின் பரிசளிப்பு விழா மாணவர்களின் உள்ளங்களில் பெரும் கனவுகளை உருவாக்கவும் ஊக்கத்துடன் கற்று உயரவும் வழி வகுக்கின்றது. அந்தவகையில் எம் கல்லூரி பரிசளிப்பு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்றுவர “மருத்துவக் கலாநிதி வி. விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்” பெரும் பங்காற்றிவருகிறது. அதை உருவாக்கிய மருத்துவக் கலாநிதி வி. விஜயரத்தினம் அவர்கள் கல்லூரி, சங்க வரலாற்றில் என்றும் போற்றப் படுபவராவார். இதுபோன்ற பணிகளை மற்றவர்களும் முன்வந்து பணியாற்றவேண்டுகிறேன்.
இச்சபையின் இணையத்தள நிர்வாகி திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்கள் கல்லூரி மற்றும் சங்க நிகழ்வுகளை உடனுக்குடன் இணையத் தளத்தில் பிரசுரித்து சங்கம் மற்றும் கல்லூரி சார்ந்த தகவல்களை, சாதனைகளை நல்ல ரசனை உணர்வுடன் பிரசுரித்து பரப்புரை செய்து பெரும் பணி ஆற்றிவருகின்றார். அவர்தம் பணிகளை பாராட்டுவதோடு தொடர்ந்தும் இப்பணிகளைச் சிறப்போடு செய்துவரவேண்டுகிறேன்.
திரு. ஆ. சோதிநாதன் அவர்கள் ஆரம்பத் திட்டமிடலில் உறுதியாக ஈடுபட்டமையால் அமைப்புக் குழுவில் நியமிக்கப்பட்டதுடன் சங்கத்தின் முதலாவது பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டு இரண்டு தவணைகள் சிறப்பாகப் பணியாற்றியபோது பாடசாலைக்கும் பயணம் செய்திருந்தார். தொடக்க காலத்திலிருந்து திரு சோதிநாதன் அவர்கள் ஆற்றிய பணிகள் மிகவும் போற்றப்பட வேண்டியவையாகும்.
தற்போது திரு. மா. கனகசபாபதி பொருளாளராக சங்கப் பணிகளில் பெரும்பங்கு ஆற்றி வருகிறார். திரு. ந. பிரகலாதீஸ்வரன் சிலகாலம் பொருளாளராக இருந்தார். இப்போது உபபொருளாளராகப் சிறப்பாகப் பணி ஆற்றி வருகிறார. அவர்களைப் பாராட்டுவதோடு, தொடர்ந்தும் இப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டுகிறேன்.
இச்சங்கத்தின் ஆணிவேராக இருந்து நாள்தோறும் சங்கம் பற்றிய சிந்தனையோடு வாழ்ந்துவருபவர் செயலாளர் திரு. கனக.சிவகுமாரன் அவர்கள். அவர் மனம் தளராது உறுதியோடு நின்று பணியாற்றுபவர். அவர் பணிகளை வியந்து பாராட்டுவதோடு தொடர்ந்தும் நற்பணிகளை ஆற்றிவருமாறு வேண்டுகிறேன்.
திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்கள் ஆரம்பத்திட்டமிலில் ஈடுபட்டு அமைப்புக்குழுவில் நியமிக்கப்பட்டு சங்கத்தின் யாப்பினை வரைந்ததுடன் முதலாவது போசகராகவும் பின்னர் இரு தடவைகள் தலைவராகவும் பணி செய்ததுடன் இன்று வரை சங்கத்தின் பணிகளுக்கு ஆலோசனைகள் கூறி வழநடத்தி வருகின்றமையை நயந்து பாராட்டுகின்றேன்.
இச் சங்கம் இனிவரும் காலங்களிலும் சென்ற காலத்தைப்போல மேலும் சிறப்போடு செயற்பட்டு கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளில் தன்பங்கை தொடர்ந்து வழங்க, சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், அனுசரணையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டுமென பணிவுடன் வேண்டி, இறைவன் திருவருளைப் பணிந்து வணங்கி, சங்கம் ஓங்கி உயர்ந்து வளரவும், சங்கப் பணிகள் மேன்மேலும் சிறந்து விளங்கவும், உளமார வாழ்த்துகிறேன்.
என்றும் வேண்டும் இன்பஅன்பு.
அன்பே சிவம்.
திரு. தி. விசுவலிங்கம்.
கீழே படங்களில் சிவநெறிச் செல்வர் அவர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் (01.09.2012)பாடசாலை அதிபரின் வாழ்த்துச் செய்தியை வாசிப்பதனையும் சங்கத்தின் முதாலாது நிர்வாக சபையினையும் காணலாம்
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு தி.விசுவலிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்து.”