பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றத்திற்கு வித்திட்டவரும் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் முன்னைநாள் வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு. பொ.சிவானந்தராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி.
காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவையொட்டி வாழ்த்துச் செய்தி வழங்குவதில் முதலில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதோடு எனக்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தினைப் பெரும் பேறாகக் கருதி மகிழ்கின்றேன்.
நேற்றுப் போல இருக்கிறது! கனடா பழைய மாணவர் சங்கத்தினுடைய தோற்றமும் வளர்ச்சியும் நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியம் அகல விரிகின்றது. ஐந்து வருடங்கள் என்பது எண்களின் ஆரம்பம் தான். ஆனால் பல பேர் கூடி சங்கம் அமைத்து வெளிப்படையான உண்மைத் தன்மையுடன் எல்லோரும் ஒரு நேர் கோட்டில் ஒன்று கூடி நகர்த்திச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இச் சங்கத்தினுடைய பிரசவத்திற்கு வேராய் இல்லாவிட்டாலும் விழுதாய் இருந்தவன் என்ற உரிமையோடு ஒன்று மட்டும் கேட்கின்றேன். உங்கள் தொடர் சேவைகளையும் பல பழைய மாணவர்களின் நினைவுகளையும் தாங்கிய பதிவுகளை வெளிக்கொண்டுவரும் வகையிலான பணி வருடந்தோறும் தொடரவேண்டும்.
இச் சங்கத்தின் ஆரம்பத் தொட்டில் தங்கத்தால் கட்டப்பட்டு செங்கம்பளம் விரிக்கப்பட்டது அல்ல. மாறாக தடைக்கற்கள் போடப்பட்டு தொடர் இடர்கள் கொடுக்கப்பட்டதே.
காய்க்கும் மரத்திற்குத்தான் கல்லெறி விழும் என்பர். ஆனால் காய்க்கப் போகின்ற மரம் கல்லெறி வேண்டிய கதை கனடா பழைய மாணவர் சங்கத்திற்கே உரியது.
தடைக் கற்களையே படிக்கற்களாக்கி விமர்சனங்களை விமோசனங்களாக ஏற்று வீரியம் கொண்டு விருட்சமாகி நிற்கும் இச் சங்கத்தைக் கண்டு அன்று எதிர்த்து எழுந்தவர் எல்லோரும் இன்று எழுந்து அணைத்தே நிற்கின்றனர். இப்போது மட்டுமல்ல இனி எப்போதும் எம் கல்லூரித் தாயின் கல்வி வளர்ச்சியில் உங்கள் பங்கு தொடர்ந்தே வளரட்டும் என்று வேண்டி எனது வாழ்த்துக்களை இதய சுத்தியோடு கூறிக்கொள்கிறேன். கல்லூரிக்கும் அப்பால் உங்களை தன் மடிமீது சுமந்த எம் ஊர்த் தாய்க்கும் உங்கள் சேவை வேண்டி, ஆன்மீகத்தையும் தொட்டு அது வளரவேண்டும் எனக்கேட்டு எனது வாழ்த்துரையை நிறைவு செய்கின்றேன்.
வளர்க எம் கல்லூரி அன்னை
வாழ்க காரை இந்துக் கல்லூரி.
பொ. சிவானந்தராஜா
முன்னாள் அதிபர்
காரைநகர் இந்துக் கல்லூரி
முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்
வேலணை
No Responses to “திரு. பொ.சிவானந்தராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி.”