பிரசித்திபெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி கல்வியாலும் அபிவிருத்தியாலும் உயர்வடைய வேண்டுமென்ற அடிப்படை நோக்கத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்ப்பட்ட கனடா காரைநகர் இந்து பழைய மாணவர் சங்கம் அதன் பயணத்தில் வெற்றி கண்டுள்ளதையிட்டு காரைநகர் இந்துக்கல்லூரியின் மூத்த பழைய மாணவன் என்ற வகையில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
அன்று இச்சங்கத்தை தோற்றுவிக்க முன்னின்றவர்கள் எதிர்கொண்ட எதிர்;ப்புகளையும். தடைகளையும் கனடா வாழ் மக்கள் நன்கு அறிவர்
இத்தடைகளையும் தாண்டி முன்னின்று உழைத்த அமரர் சி.தமபிராசா (முன்னாள் காரை இந்து துணை அதிபரும்;-பழையமாணவரும்) திரு. வேலாயுதபிள்ளை,திரு.அம்பலவாணர் திரு.கனக.சிவகுமாரன், திரு.ஆறுமுகம் சோதிநாதன், திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் மற்றும் பலர் முன்வந்து ஆரம்பித்த காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விருட்சம்போல் வளர்ந்து வருகிறது. எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.
புலம் பெயர்ந்து வாழும் காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர்களை இணை உறுப்பினர்களாக ஒன்றிணைக்கும் சங்கமாக பரிணாம வளர்ச்சியடைந்து வருவது பாராட்டத்தக்கது.
சுயநலமற்ற நிர்வாகிகள் அர்பணிப்புடன் செயற்பட்டு வருவதனால் இச்சங்கத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு என வாழ்த்துகின்றேன்.
ஏனைய பழைய மாணவர் சங்கங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சங்கம் நிறுவி செயற்படுகின்றனர்.
ஆனால் கனடா காரை இந்து பழைய மாணவர் சங்கம் ஒரு முன்னோடியான வழியைக் கடைப் பிடிப்பது பாராட்டத்தக்கது. கனடா பழைய மாணவர் சங்கத்தை மையமாக வைத்து ஏனைய நாடுகளிலுள்ள பழைய மாணவர்களை இணைப்பு உறுப்பினராக இணைத்து செயற்படுவது பாராட்டத்தக்கது. நாம் எங்கு வாழ்ந்தாலும் ஒன்றுபடுவோம் எனபதை இது உறுதிசெய்கின்றது. கல்லூரியின் வளர்ச்சியை இதயத்தில் கொண்டவர்கள் ஒன்றுபட்டு உழைப்பர்.
சங்கத்தின் வளர்ச்சிக்கு இணையத்தளம் முக்கியமான பிரசாரக்கருவியாக விளங்குகின்றது. பாடசாலை தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் வெளியிடுவதால் பலநாடுகளிலும் வாழுகின்ற காரைமக்கள் செய்திகளை அறிந்து கொள்வதோடு பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் முன்வருகின்றனர். இந்த இணையத் தளத்தைத் திறமையாக நிருவகிப்பவர்; பாராட்டுக்குரியவர்.
நான் இக்கல்லூரியில் 1948-1957 வரையும் கல்விகற்கும் பாக்கியம் பெற்றவன். களபூமியிருந்து இக்கல்லூரிக்கு கால்நடையாக வரும் வல்லமையும் இருந்தது. நானும் காரை சுந்தரம்பிள்ளையும் களபூமியிலிருந்து வலந்தலைச் சந்திவரையும் உரையாடியபடியே நடந்து வருவோம். அவர் விக்ரோரியா போவார் நான் இந்துக் கல்லூரிக்கு போவேன்.
நடந்து வந்த இருவரும் கல்லூரிக்கு பெருமை தேடியவர்கள். கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை ஒரு கல்விமானாக இந்துக்கல்லூரியின் அதிபராகி கல்லூரியின் வளர்ச்சிககு பெரும் பணியாற்றியவர்.
1952ல காரைநகர் சைவமகா சபை நடத்திய அகில இலங்கை சர்வோதய பேச்சுப்போட்டியில் இந்துக் கல்லூரி மாணவனாக பங்கு பற்றினேன். அப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று கல்லூரி அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் அபரிமிதமான பாராட்டைப் பெற்றேன். நான் ஒரு பேச்சாளனாக வருவதற்கு அதிபரின் பாராட்டே காரணம்
அதிபர் தியாகராசா அவர்கள் “தமிழ் இராஜ்சியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து பொதுத் தேர்தலில போட்டியிட்டபோது ஒரு மாணவனாக தேர்தலில் பங்குகொள்ள எனது பேச்சே காரணம்.
கனடா காரை இந்து பழைய மாணவர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவின்போது எனது பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்வதில் பெருமை அடைகின்றேன்
காரை இந்து பழைய மாணவர் சங்கம் – கனடா மேன்மேலும் வளர எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்
அன்புடன்
ஐ.தி.சம்பந்தன
காரை இந்துக் கல்லூரி பழைய மாணவன்
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி.”