சென்ற செவ்வாய்க்கிழமை (13.08.2013) அன்று ஸ்காபுரோவில் சிறியரக பாரஊர்தியும், பயணிகள் பேரூந்தும் அசாதாரணமாக மோதுண்டபோது ஏற்பட்ட கோரமான விபத்தில் எம்மில் ஒருவராக இருந்த ‘ரஞ்சனா அக்கா’ என்று எல்லோரும் அன்போடு அழைக்கும் திருமதி. மனோரஞ்சனா கனகசபாபதியை இழந்துவிட்ட செய்தியை இன்னும் எம்மால் நம்ப முடியவில்லை.
கனடிய பிரதான ஊடகங்கள் எல்லாவற்றிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ள இந்தத் துன்பியல் விபத்து பற்றிய செய்தி ரொன்Nhhவில் எல்லோர் மனதிலும் அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களும் நண்பர்களும் அன்னாரின் இல்லத்திற்கு சென்று தமது அநுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
ரோரன்ரோ நகரபிதா, ரொரன்ரோ பொதுப் போக்குவரத்து பணிப்பாளர், கனடியத் தமிழர் பேரவை ஆகியோர் உள்ளிட்ட பலர் அநுதாபச் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் உறவினர்களும் நண்பர்களும் மலர்செண்டுகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ரொரன்ரோ நகர பிதா றொப் ஃபோர்ட் விடுத்துள்ள செய்தியில் இந்த துன்பியல் செய்தியை அறிந்து தான் மிகுந்த கவலை அடைந்துள்ளதாகவும் ரொன்ரோ நகர சபையின் சார்பிலும், ரொரன்ரோ பொதுமக்களின் சார்பிலும் திருமதி. மனேரஞ்சனாவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அநுதாபத்தை இந்தக் கடினமான நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
ரொன்ரோ பொதுப் போக்குவரத்து நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.அன்டி பைபோர்ட் குறிப்பிடுகையில் இது ஒரு மிகப்பாரதூரமான அதிர்ச்சியான சம்பவம் என்றும் தனது முதல் கவனம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீதே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளையில் கனடியத் தமிழர் பேரவையும் தமது செய்திக் குறிப்பில் இது ஒரு துன்பியல் செய்தி என்றும் திருமதி. ரஞ்சனா கனகசபாபதி சென்ற ஆண்டு Omni தொலைக்காட்சி நிலையத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘ஊரான ஊர்’(My Country) என்ற விவரணப் படத்தின் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்ததாகவும் இவரின் இரு சகோதரர்கள் திரு. கனகராசா (கனெக்ஸ்), மற்றும் திரு.பஞ்சலிங்கம்(சிவமணி, கனடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) ஆகியோரின் சமூகப் பங்களிப்பினையும் நினைவுகூர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அநுதாபத்தையும் தெரிவித்திருந்தது.
‘ஊரான ஊர்'(My Country) என்ற விவரணப் படத்தின் இயக்குநர் திருமதி.லலிதா கிருஷ்ணா வெளியிட்ட செய்தியில் இந்தத் துன்பியல் சம்பவம் வேறு யாருக்குமல்ல நாம் எல்லாம் அறிந்த திருமதி. ரஞ்சனா கனகசபாபதிக்கே நிகழ்ந்துள்ளதை அறிந்து தான் மிகவும் இடிந்துபோயுள்ளதாகவும் அவர் தம்முடன் பணியாற்றிய நினைவுகளையும் பதிவு செய்தார்.
மிகவும் வெளிப்படையாக தனது கதைகளையும் தாயக நினைவுகளையும் அவர் தம்முடன் பகிர்ந்து கொண்டதாகவும் திரைப்படம் திரையிடப்பட்ட பின்னரும் தம்முடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும் திருமதி. ரஞ்சனா பெருந்தன்மையும் பேரார்வமும் உள்ளவர் என்றும் அவரது வாழ்க்கை தனது பிள்ளைகளை மையப்படுத்தியதாகவே இருந்ததாகவும் அவர்களுக்கு எல்லாம் கிடைக்கச் செய்ய கடினமாக உழைத்தார் எனவும், 51 வயது மட்டுமேயான இவருக்கு இன்னும் ஆக்கபூர்வமான எதிர்காலம் இருந்ததாகவும் அவரின் குடும்பத்தினர் எவ்வாறு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளப்போகின்றனர் என்பதை தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘ஊரான ஊர்'(My Country என்ற விவரணப்படம் இலங்கையின் இனச் சிக்கல் பற்றிய வரலாற்றையும் உள்நாட்டுப் போரிற்கு தமிழர் கொடுத்த விலைபற்றியும் விபரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற இயக்குநர் லலிதா கிருஷ்ணாவின் இவ்விவரணப்படம்ReelWorld திரைப்பட விழாவில் ஏப்பிரல் 2012இல் திரையிடப்பட்டிருந்தது.
‘ஊரான ஊர்’ விவரணப் படத்தின் முன்னோட்டத்தினை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
No Responses to “ரொன்ரோவில் அதிர்ச்சியையும் அநுதாபத்தையும் ஏற்படுத்திய திருமதி.மனோரஞ்சனா கனகசபாபதியின் அகால மரணம்”