புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்தும் தான் பிறந்த காரை மண்ணை மறவாது நேசித்து அம்மண்ணின் மக்களின் சமூக நலனிலும் கல்வி மேம்பாட்டிலும் இறுதி மூச்சுவரை அக்கறையோடு செயலாற்றிய தன்னலங்கருதாத உன்னதமான சேவையாளர் கலாநிதி; சபாபதி சபாரத்தினம் அவர்களின் மறைவு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது காரைநகர் மக்களிற்கும் பேரிழப்பாகும்.
பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஓருவராக விளங்கும் கலாநிதி சபாரத்தினம் அவர்கள் அச்சங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து அதன்; வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி காரை மண்ணிற்கும் தனக்கு கல்வியை ஊட்டிய காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் அளப்பபரிய பணிகள் புரிந்தவர். லண்டன் வாழ் காரை மக்களால் சபா அண்ணை என அன்பாக அழைக்கபட்டு வந்த கலாநிதி சபாரத்தினம் அவர்கள் சேவையுணர்வும் தமிழ்ப்பற்றும் கல்வியறிவும் மிக்க பாரம்பரியத்திலிருந்து வந்தவர். அதே பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த மருத்துவ கலாநிதி மங்கையர்க்கரசி அவர்களை வாழ்கைத் துணையாக பெற்ற பாக்கியத்தினை உடையவர். சொந்த வாழ்வில் மட்டுமல்லாது பொது வாழ்விலும் வெற்றியுடன் பயணித்து மனநிறைவோடு வாழ்ந்து வந்தமைக்கு அவரது துணைவியாரும் பக்கபலமாக இருந்து வந்தார் என்றால் மிகையாது. காரைநகர் இந்துக் கல்லூரியில் நீண்டகாலம்; அதிபராகச் சேவையாற்றி அக்கல்லூரியை உன்னதமான நிலைக்குக் கொண்டுவர உழைத்த உத்தமர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் அன்பு மகளே இவரது துணைவியார் மருத்துவ கலாநிதி மங்கையர்க்கரசி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்ற டிசம்பர் மாதம் கலாநிதி சபாரத்தினம் அவர்களும் குடும்பத்தினரும் அன்னாரது மாமனார் ஞாபகார்த்தமாக கலாநிதி ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளையை ஆரம்பித்து வைத்து அதனூடாக காரைநகர் பாடசாலை மாணவர்களிற்கு கல்வி ஊக்கிவிப்பு புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது பெரும் வரப்பிரசாதமாக அமைந்து காரைநகர் கல்வி வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது எனக் கருதப்படுகிறது. இப்பூவுலகில் பிறந்தோர் என்றோ ஒரு நாள் இறப்பது திண்ணம் என்கின்ற நியதிக்கேற்ப அன்னார் மறைந்து விட்டாலும் .காரை மக்களிற்கு ஆற்றிய சமூக கல்விப் பணிகள் மூலமாக அன்னாரது பெயர் அம்மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.
காரை இந்து அன்னைக்கு புகழ்சேர்த்து அன்னையின் சிறப்பு மிக்க புதல்வர்கள் வரிசையில் வைத்து போற்றத்தக்க கலாநிதி சபாரத்தினம் அவர்களின் மறைவினால் ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கு காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றது.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்து சிதம்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்ற சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசப் பெருமானை இறைஞ்சுவோமாக.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
(காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “காரை இந்து அன்னைக்கு புகழ் சேர்த்த கலாநிதி சபாபதி சபாரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் கண்ணீர் அஞ்சலி”