மனிதனை மனிதனாக மாற்றுகின்ற சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள்இ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகின்றனர். அத்தகைய மகத்துவம் மிக்க ஆசிரியர்களை நினைவு கூரும் வகையிலும் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்ற வகையிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தினம் சென்ற ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் அனுசரணையுடன் உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் பெருங்காப்பாளரும் அதிபருமாகிய திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.
உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் கதிர்காமநாதன் கஐந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திரு.கார்த்திகேசு குமாரவேலு அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பொன்னம்பலம் ஆறுமுகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்திருந்தனர்.
மாணவர்களுக்கு அறிவு என்னும் ஞானச் சுடரினை ஏற்றி வைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துப்பா மூலமாக வாழ்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்ததுடன் பசுமையை நிலைநாட்டும் முகமாக மரக் கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் அதிபரும் ஆசிரியர்களும் விருந்தினர்களுடன் கலந்துகொண்டு அகமகிழ்ந்திருந்தனர். இந் நிகழ்விற்கான முழுமையான அனுசரணையை வழங்கிய கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு மனமார்நத நன்றியை அதிபர் தமது உரையின்போது தெரிவித்திருந்தார்.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு பழைய மாணவர் சங்கம் அனுசரணை வழங்க வேண்டும் என்ற சங்கத்தின் கொள்கைக்கு அமைவாக 4 வது ஆண்டாக ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்கான அனுசரணையினை இவ்வாண்டும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.”