இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காரைநகர் புலவர்களால் இயற்றப்பட்ட சைவதமிழ் இலக்கியம் ஏட்டிலிருந்து இன்று நூல் வடிவில்
காரைநகரில் தன்னை யமக அந்தாதி நூல் வெளியீடு
காரைநகரிலுள்ள மிகப் பழைய கோயில்களில் ஒன்றான களபூமி தன்னைப் பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான் மீதுஇரு நூற்றாண்டுகளுக்குமுன்னர் பாடப்பெற்ற நூல் தன்னை யமக அந்தாதி ஆகும். இந்நூல் இயற்றியவர்கள் மேருகிரி ஐயர் மரபில் வந்த முத்தமிழ் வித்தகராக விளங்கிய முருகேசுஐயர் அவர்களும், அவரின் புதல்வர் கார்த்திகேயப் புலவர் ஆவர்களும் ஆவர். சிறந்த புலவராகிய முருகேசுஐயர் நாவலரின் ஆசிரியராகிய இருபாலை சேனாதிராய முதலியாரின் நண்பர். ஆறுமுகநாவலர் காலத்தில் வாழ்ந்த கார்திகேயப் புலவர் காரைநகரில் சைவமும் தமிழும் வளர்த்த பெரும் புலவர்.
ஓல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் காரைநகரில் வாழ்ந்த முருகேசையரின் பாட்டனரான சங்கீத சுப்பையரினால் காரைநகரில் சைவத் தமிழ் இலக்கிய மரபு தொடங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இவரது சந்ததியினரான முருகேசையரையும் கார்த்திகேயப் புலவரையும் தன்னை யமக அந்தாதி பாடவைத்து இந்த இலக்கிய மரபை தொடரச் செய்ததினால் காரைநகரில் சைவத் தமிழ் இலக்கிய மரபு தழைத்தோங்கச் செய்தவர் தன்னையம்பதியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் என்றால் மிகையாகாது. தமிழ் நாட்டில் வெளிவந்த அந்தாதி இலக்கியம் என்னும் நூலில் தன்னை யமக அந்தாதி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளமை, இதன் சிறப்பை நன்கு எடுத்துக் காட்டும்.
மிக நீண்டகாலமாக ஏட்டுச் சுவடியிலிருந்த தன்னை யமக அந்தாதியை உரையுடன் வெளியிடவேண்டும் என்று கார்த்திகேயப் புலவரின் வழித்தோன்றலும் காரைநகரில் தோன்றிய பழைய இலக்கிய நூல்கள் புத்தகவடிவில் காண்பதற்குக் காரணமாக இருந்தவரும் ஆகிய சிவத்திரு. க. வைத்தீசுவரக்குருக்கள் விழைந்தார்கள்.
பல ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்ற தன்னைப் பிள்ளையார் ஆலயமுன்றலில் 15-10-2017 அன்று இந்நூல் அறிமுகம் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட உள்ளது.
தன்னை யமக அந்தாதியை அறிமுகம் செய்து யாழ் உதயன் பத்திரிகையில் நூல்வரிசை என்ற பகுதியில் சைவப் புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எழுதிய கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.
தன்னையமகஅந்தாதி
கலாபூஷணம் சைவப் புலவர் சு. செல்லத்துரை
களபூமி காரைநகர் தன்னையம்பதி விநாயகப் பெருமான் மீது இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்டது இந்நூல். சிவத்திரு முருகேசையரால் தொடங்கப் பெற்றுக் குறையாயிருந்த இந்நூலை அவர்மகன் கார்த்திகேயப்புலவர் தனது பதினெட்டாவது வயதில் பூர்த்தி செய்தார் என அறியமுடிகிறது. இதுவரை காலமும் ஏட்டில் கையெழுத்துப் பிரதியாயிருந்த இந்நூல், காரைநகர் களபூமியைச் சேர்ந்த தம்பிராசா தம்பதியினரால் அச்சேற்றி வெளியிடப் பெற்றிருக்கிறது.
இந்நூலுக்குப் புலவர்மணி பண்டிதர் கலாபூஷணம் வட்டுக்கோட்டையூர் க. மயில்வாகனனார் உரையெழுதியுள்ளார். வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் கனதியான அணிந்துரை வரைந்துள்ளார். உரையாசிரியரின் முன்னுரையும், இவ்வணிந்துரையும் நூலைப் படிப்போரை நூலின்பால் வழிப்படுத்தவல்லனவாக அமைந்துள்ளன.
மொழியைச் சாணக்கியத்துடன் கையாளும் ஆளுமையும், ஆற்றலும் வாய்ந்த வித்துவம் நிறைந்த புலவர்களால் பாடப்படுவது “யமகஅந்தாதி”. இது மடக்கு எனவும் சொல்லப்பபடும்.
அந்தாதி என்பது தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகும். அது ஒரு செய்யுளின் இறுதியில் நின்றசீராவது, சீரின் உறுப்பாவது அடுத்துவரும் செய்யுளுக்கு முதலாகவரச் செய்யப்படுவதாகும். (முதற் பாடலின் அந்தம் அடுத்தபாடலில் வருவதாகும்)
யமகஅந்தாதி என்பதுமுதல் எழுத்துத் தொடங்கி அடுத்துவரும் பத்தெழுத்து ஈறாக ஓர் அடிபோல் நான்குஅடிகளும் பாடப்படுவதாகும். ஓர் அடியில் வந்தபொருள் மற்றோர்அடியில் வருதலும் கூடாது. ஒவ்வோர் அடியிலும் பொருள் வேறுபட்டு இருத்தல் வேண்டும்.
நமது ஈழத்திலக்கிய பாரம்பரியத்திலே மரபுவழிப் பாடல்களைப் புலமையாக்கம் எனவும் இக்காலப் பாடல்களை எளிமையாக்கம் எனவும், இலக்கிய ஆய்வாளர்கள் கூறுவர். புலமையாக்கத்தின் பண்புக் கூறுகளாக வித்துவம், சமக்காரம், புலமை, இலக்கணம், கொள்கைப் பிடிப்பு, மரபுமீறாமை, பண்பாடுணர்வு என்பன இடம் பெறுகின்றனஎன்பதற்கு இந்நூல் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
பாட்டுடைத் தலைவராகிய தன்னைவிநாயகப் பெருமானின் மூர்த்தி,தல, தீர்த்த விசேடங்களைக் கருப்பொருளாக்கி ஆலயவரலாற்றுப் பெருமையை அகப்பொருள் துறையில் வைத்து, மரபு வழிதவறாது பாடப்பட்ட இந்நூல் புலமைக்கு அணிகலனாகும்.
இத்தகு புலமை வாய்ந்தோர் இன்றும் வாழ்கிறார்கள் என்பதற்கு இந்நூலின் உரையாசிரியர் புலவர்மணி மயில்வாகனனார் வகுத்துள்ள உரையே சான்றாகும். அவர்கள், மூலபாடம், சந்திபிரிப்பு, கொண்டு கூட்டுபதவுரை, குறிப்புரை என ஐவகைப்பட்ட நோக்குநிலைநின்று விளங்கக் கூறியுள்ளமை படிப்போர்க்கு உபகாரமாயுள்ளது.
தமிழ் இலக்கியமரபுவழிச் செழுமைக்கும்,தமிழ்ப் புலவர்களின் அளவிடற்கரிய புலமைக்கும், பக்திமேன்மைக்கும் வளந்தரும் இந்நூலை ஏட்டுருவிலிருந்து அச்சேற்றிய வெளியீட்டாளர்களின் பணியும் போற்றுதற்குரியது.
No Responses to “இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டு ஏட்டிலிருந்த சைவத் தமிழ் இலக்கியம் ‘தன்னையமக அந்தாதி’ நூல் வடிவில் வெளியீடு! காரை.இந்துவிலிருந்து உருவான இரு சைவத் தமிழ்ப் பெரியார்களின் பெரு முயற்சியின் விளைவு!”