கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 125வது ஆண்டு விழாவின் முதலாம் நாள் (01.08.2013) அன்று முதலாம் அமர்வில்(நிறுவுனர் தினமும் மலர் வெளியீடும்) நிறுவுனர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியரும், விளையாட்டுத்துறைப் பயிற்றுநரும், பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் போசகருமான திரு.எஸ்.கே. சதாசிவம் அவர்கள் நிகழ்த்தினார். ஸ்ரீமான் சயம்பு அவர்களின் பணியை நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தின் ஆவணங்களின் உதவியுடன் எடுத்தியம்பினார். அதன் முழு வடிவத்தையும் இங்கே பார்வையிடலாம்.
நிகழ்வின் தலைவர் அவர்களே,
பிரதம விருந்தினர் அவர்களே,
கௌரவ விருந்தினர்களே,
கல்லூரி ஆசிரியர்களே, பழைய மாணவர்களே, நலன்விரும்பிகளே, வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த அன்பர்களே, மாணவர்களே, அனைவருக்கும் வணக்கம்.
நிறுவுனர் உரை நிகழ்த்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்து நிறுவுனர் தின உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன்.
நாவலர் பெருமான் வழியில் தோன்றிய அறிஞர்களில் ஸ்தாபகர் சயம்பரும் ஒருவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்ற ஸ்ரீமான் சயம்பர் காரைநகரை வளப்படுத்த சிந்தை கொண்டு தேர்ந்து எடுத்தார். தனது ஆரம்பக் கல்வியை நல்லூர் சாதனா பாடசாலையிலும் ஆங்கிலக் கல்வியை யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியிலும் கற்றார். ‘பெரியாரைப் பேணித் தமராகக் கொளல்’ எனும் வாக்கிற்கு இணங்க சயம்பு உபாத்தியாயரின் பணிகளை ஏற்று தம்மவராக போற்றி பெருமை படைத்தது காரைநகர் மண்.
சயம்பர் பாடசாலை, சயம்பு வீதி என்று 125 ஆண்டுகளைக் கடந்த மக்கள் மனதில் இடம்பிடித்து நிற்பது இதனை எடுத்துக் காட்டுகின்றது.
கந்தர் இலட்சுமணர் காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்தவர். இலட்சுமணரின் மனைவி கந்தர்மடத்தை சேர்ந்தவர். இலட்சுமணரின் மனைவியின் மூத்த சகோதரியின் மகனே ஸ்தாபகர் சயம்பர். இவ்வழி வந்த உறவே சயம்பரை காரைநகருக்கு அழைத்து வந்தது.
ஆங்கிலக் கல்வியை போதிக்க வந்த மிசனரிமாரின் மரக்கலங்களை தென்னிலங்கையில் தரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் யாழ்ப்பாணம் வந்து ஆங்கிலக் கல்வியை போதிக்கலாயினர். கல்வியுடன் மதமாற்றத்திலும் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் கண்டனர். அந்த வெற்றியை நிலைகொள்ள விடாது வெற்றி கண்டவர் நாவலர் பெருமான். நாவலர் பெருமான் வழி பணி செய்தவர் ஸ்தாபகர் சயம்பர். மதமாற்றத்தில் விருப்பமில்லையே தவிர ஆங்கிலேயர் மேல் காழ்ப்புணர்வோ அன்றி ஆங்கிலக் கல்விமேல் வெறுப்புணர்வோ கொண்டிருக்கவில்லை.
சைவசமயத்தை எதற்காக கைவிட்டுச் செல்கின்றனர்? செல்லும் வழி யாது? அதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என நாவலர் பெருமான் சிந்தித்து செயற்பட்டவாறு ஸ்தாபகர் சயம்பரும் செயற்பட்டார்.
மதவெறியை வளர்க்கவில்லை, வெறுமனே பேசிக்கொண்டு வாளாவிருக்கவில்லை, கல்விக்காகவே சமயத்தை கைவிட்டுப் போவதைத் தடுக்க சைவப் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்தினர்.
ஆங்கிலக் கல்வியையும் அதனுள் பொதிந்திருந்த அறிவாற்றலையும் தமிழ் மக்கள் சைவச் சூழலில் பெற்றிட வேண்டும் என்ற வேட்கையுடன் பணியாற்றி வெற்றி கண்டனர். ஆங்கிலம் மேற்கத்தேய அறிவியல் நுழைவதற்கான சாரளம் என பிற்காலத்தில் பாரதப் பிரதமர் ஜவர்கலால் நேரு கூறியது நோக்கற்பாலது.
காரைநகர் மக்களுக்கு கல்வி அறிவூட்டி, அவர்தம் வாழ்விற்கு ஒளியூட்டியவர் அமரர் சயம்பு. பொருளாதார வளத்தை பெருக்க, பார் எங்கும் பரந்து வாழ்ந்து பணிபுரிய காரை மாதாவின் கலங்கரை விளக்கானவர் முத்து சயம்பு.
ஸ்தாபகர் சயம்பரின் பணியால் பெருங்குடி மக்களும், அறிவும், விவேகமும் மிக்க அறிஞர்களும் காரைநகரில் பிற்காலத்தில் தோன்றினர்.
1888ம் ஆண்டு ஆவணித் திங்களில் பெரியார் முத்து சயம்பு அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை சிறப்பான கல்வியையும் ஒழுக்க போதனையும் வழங்கியமையைக் கண்ணுற்ற அன்பர்கள் ஒரு மண்டபத்தையும் இரண்டு அறைகளையும் அமைத்துக் கொடுத்தனர். 1905ம் ஆண்டு யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த சேர்.துவைனம் அவர்களால் இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 1869ல் காரைநகருக்கும் குடாநாட்டிற்கும் இடையே பாலம் அமைக்கும் பொழுது Sir.W.Twynham அரசாங்க அதிபராக இருந்தார். இந்நிகழ்வுகளை குறிக்கும் பளிங்குக் கல், இக்கட்டிடத் தொகுதியில் பதிக்கப்பட்டிருந்தது.
சயம்பு உபாத்தியாயர் ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க அவருக்கு உறுதுணையாக தமிழ்க்கல்வியைப் போதித்தவர் அம்பலச் சட்டம்பியார். கையில் கடிகாரம் கொண்டு கடமையில் ஒரு நொடியும் பிந்தாது காலத்தை வீண்போக்காது கல்வி ஊட்டிய ஆசிரியர் அம்பலச் சட்டம்பியார் என காரைநகர் பெற்ற தமிழ் அறிஞர்களில் ஒருவரான திரு.F.X.C.நடராஜா குறிப்பிடுகிறார்.
ஸ்ரீமான் சயம்பர் தன் சமய விசுவாசத்தை வாழ்வின் மூலம் எடுத்துக் காட்டினார். தினமும் காலையில் ‘கந்தர் அலங்காரத்தை’ தன் இல்லத்தில் பாடினார். ஈழத்துச் சிதம்பரத்தில் பஜனை மழை பொழிந்து இறைவனை மகிழ்வித்தார். தன் மாணாக்கரை அவ்வழியே பயணிக்கத் தூண்டினார். சமூக மாற்றத்திற்கு கல்வியே திறவுகோல் என்பதை செயலி;ல் காட்டினார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தையில் தோன்றிய ஸ்ரீமான் சயம்பர் காரைநகர் மக்களின் நல்வாழ்விற்காக மாபெரும் தியாகம் செய்தார்.
இக்கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபரு-மான ஆங்கில புலமை மிக்க அறிஞர்களில் ஒருவரான திரு.N.சபாரத்தினம் அவர்கள சைவ அறிஞன் சயம்பர் மிகப்பெரிய ஸ்தாபனத்தின் தந்தை என் குறிப்பிடுகிறார். (Mr.Sayamboo a Saiva Savant who is now regarded as the father of this great enterprise) சயம்பரின் மாணாக்கர் பற்றி குறிப்பிடும் பொழுது (Worked as efficient administrators, educators, men on the railways and hospitals, who made trains run on time and enabled the sick for speedy recovery). சிறந்த நிர்வாகிகளாகவும், கல்வி போதனையாளர்களாகவும் புகையிரத் திணைக்களத்தில் கடமையாற்றியவர்கள் புகையிரதங்கள் உரிய நேரங்களில் பயணிக்கவும் வைத்தியசாலைகளில் கடமையாற்றியவர்கள் நோயாளர்கள் விரைவாகக் குணம்பெறவும் திறமையாகப் பணியாற்றினார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீமான் சயம்பர் எதனையும் நேரில் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனுடையவர். பொறுமை-யற்றவர், முன்கோபக்காரர், மாணவர்களை அடக்கியாள்பவர் என்ற பெயரையும் கேட்கத் தவறவில்லை.
ஸ்தாபகர் சயம்பர் ஒரு நிறுவுனர் என்பதைவிட கல்வி நிருவாகத்தை திறம்பட திட்டமிட்ட கல்வியாளர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட சயம்பு மலரில் அந்த நாள் ஞாபகம் எனும் கட்டுரையில் திரு.ந.செல்லையா பழைய மாணவன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மூன்றாம் வகுப்பு சித்தியடைந்த பிள்ளைகளைத்தான் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்க முடியும். ஆகவே தமிழ் சைவப் பாடசாலைகள் இல்லாததை உணர்ந்த சயம்பு உபாத்தியாயர் எங்கள் ஆங்கிலப் பாடசாலைக்கு “feeding School” மாணவர்களுக்கு ஒரு சைவ தமிழ் தேர்ச்சிப் பாடசாலை ஆரம்பிக்க சயம்பர் திட்டமிட்டார்.
தமிழ்ப் பாடசாலை கீற்றுக் கொட்டிலில் அம்பலச் சட்டம்பி;யார் தலைமையில் ஆரம்பமானது. சயம்பர் ஆரம்பித்த தமிழ் ஆங்கிலப் பாடசாலைதான் பின் இலகடிக்கு மாற்றப்பட்டு நல்லதம்பி மாஸ்டர் தலைமையில் சிறப்புப்பெற்றது. இலகடி இ.த.க. பாடசாலை என்ற பெயருடன் இயங்கியது.
திரு.ந.செல்லையாவின் கூற்று பின்வரும் பத்திரிகைச் செய்தி மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
26.03.1936 – இந்து சாதனப் பத்திரிகையில் காரைநகர் இலகடி தமிழ் கலவன் ஆதாரப் பாடசாலை பெற்றோர் தினக் கொண்டாட்டம் 21.03.1936 சனிக்கிழமை பி.ப. 6 மணிக்கு இந்து ஆங்கில வித்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பாடசாலையின் தொடருறு கல்விச் செயற்பாட்டிற்கு ஊட்டப்பாடசாலையின் (Feeder School) அவசியத்தை உணர்ந்து தீர்க்கமான நிருவாக நடவடிக்கையை ஸ்ரீமான் முத்து சயம்பு மேற்கொண்டார் என்பதற்கு மேலே சொல்லப்பட்டவை சான்று பகருகின்றன.
காரை இந்து ஆங்கில வித்தியாசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் தமது மேற்படிப்பை தொடர்ந்து இடையூறு இன்றி கற்பதற்காகவும், தனக்குப் பின் பாடசாலை சிறப்புற நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலையை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பணிப்பாளர் சபையின் கீழ் கொண்டு வந்தார்.
28 செப்டம்பர் 1910 இந்து சாதன பத்திரிகையில் 17 செப்டம்பர் 1910ல் நடைபெற்ற யாழ்ப்பாண இந்து கல்லூரி பரிசளிப்பு வைபவத்தில் கல்லூரி அதிபரினால் வாசிக்கப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
20.07.1936 – இந்துசாதனப் பத்திரிகையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Thirugnana Sambanda Murthi Nayanar Vidyalayam Karativu.
This school which was placed under the management of the Jaffna Hindu College about two years ago by Mr.M.Sayampu has been registered by the Department of Public Instruction as an elementary school. The union in aid of the school in the Federal Malaya states which has been maintaining the Head Master for the last two years has under taken to continue its aid for another year in order to enable the school authorities to place it on a sound form.
20.07.1936ல் வெளியிடப்பட்ட இந்து சாதனப் பத்திரிகைச் செய்தி மூலம் சயம்பரின் கல்வி நிருவாக நடவடிக்கைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திரு.மு.சயம்பு அவர்கள் பாடசாலையை யாழப்பாணம் இந்துக் கல்லூரி நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தார். பொதுப் போதனா திணைக்களத்தில் ஆரம்பப் பாடசாலையாக பாடசாலை பதிவுசெய்யப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக அதிபர் வேதனத்தை வழங்கி உதவிய மலாய் யூனியன் பாடசாலை நிருவாகத்தின் உறுதியான செயற்பாட்டைக் கருதி மேலும் ஓர் ஆண்டுக்கு அதிபர் வேதனத்தை வழங்க முன்வந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் அரிய பொக்கிஷமாக பேணப்பட்டு வரும் இந்து சாதனப் பத்திரிகைகளின் மூலம் மேற்படி தகவல்கள் பெறப்பட்டன. பத்திரிகைகளைப் பார்வையிடவும், பிரதியெடுக்கவும் அனுமதி வழங்கிய யாழ் பல்கலைக்கழக நிருவாகத்திற்கு எனது மனமார்ந்த நன்றி.
ஸதாபகர் சயம்பு பாடசாலையின் வளர்ச்சிக்கு சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்திருந்தார். அந்த சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் எவரிடம் உறவுகொள்ள வேண்டும் என்பதற்கு பின்வரும் வள்ளலாரின் வரிகளை கடைப்பிடித்து வாழ்ந்தார்.
‘ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியா திருத்தல் வேண்டும்’
பாடசாலையின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள் அக்கறையுடன் செயற்பட்டு உதவியமை. திரு.ஆ.அரசரத்தினத்தால்; தொகுக்கப்பட்ட“Your Country & Your College” எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
.
1919ல் கல்லூரி பழைய மாணவர்கள் முதலாவது காரை மலாய் யூனியனை அமைக்க முன்னோடியாக எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு மலாய் நாட்டு அரசாங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. புதுறோட்டைச் சேர்ந்த திரு.அருளையா பானபாஸ் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாங்கள் கற்ற பாடசாலைக்கு நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் காரைநகர் மக்களை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாக காரை மலாய் யூனியனின் யாப்பு குறிப்பிடுகின்றது. தனது எடுத்துக்காட்டான வாழ்வின் மூலம் காரைநகரின் மேன்மையையும் பொதுநலனையும் கருத்தில் கொண்டு தாங்கள் கற்ற பாடசாலைமேல் கரிசனை கொள்ள மாணவர்களிற்கு ஸ்தாபகர் மு.சயம்பு உணர்த்தியிருந்தார்.
காரை மலாயா யூனியனின் 23 சரத்துக்களை கொண்ட யாப்பில் 1வது சரத்தில் கல்வி முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.
125 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட கல்வி நிருவாக நடவடிக்கைகளை ஆய்வு செய்யுமிடத்து ஸ்ரீமான் சயம்பு தீர்க்கதரிசனம் மிக்க ‘கல்வியியலாளர்’ என்று குறிப்பிடல் மிகையாகாது.
ஸ்ரீமான் முத்து சயம்பு காரைநகர் மக்களின் நல்வாழ்வு கருதி இந்து ஆங்கில
வித்தியாசாலையை ஆரம்பித்து அதன் எதிர்காலம் கருதி ஆதாரப் பாடசாலையை நிறுவினார்.
காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை மாணவர்கள் ஆங்கிலக் கல்வியை தொட-ர்ந்தும் சைவ சமய சூழலில் கற்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஊட்டப் பாடசாலையாக ஆக்கினார்.
எதிர்காலத்தில் பாடசாலையின் சுமுகமான செயற்பாட்டை கருதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபையின் நிருவாகத்தின்; கீழ் கொண்டுவந்தார்.
பொது போதனா திணைக்களத்தில் ஆரம்பப் பாடசாலையாக பதிவுசெய்தார்.
உதாரண புருஷராயிருந்து பழைய மாணவர்களினதும் மலாய யூனியனின் ஆதரவையும் பெற்றார்.
இந்தியாவில் இருந்து வருகை தந்த திரு.ஈ.கே.சிவசுப்பிரமணி ஜயர், சிவத்திரு.எஸ்.இராமகிருஸ்ண ஜயர் அதிபர்களாக பதவி வகித்ததை தொடர்ந்து திரு.பொன்னுடையார் வேலுப்பிள்ளை சாமிபள்ளிக்கூடம், யாழ்ப்பாண கல்லூரி ஆகியவற்றின் தலைமை ஆசிரியராக கடமை ஆற்றியவர், தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
திரு.ந.கந்தையா, சிவத்திரு.ஆ.சீதாராம ஐயர், திரு.அ.சரவணமுத்து, திரு.K.S.இராசரத்தினம், சிவத்திரு.ஆ.சீதாராம ஐயர் அதிபர்களைத் தொடர்ந்து திரு.A.கனகசபை B.A. அவர்கள் 10 ஆண்டுகள் அதிபராக கடமையாற்றினார். திரு.கனகசபையின் பத்தாண்டு கடுமையான உழைப்பு கனிஷ்ட பாடசாலையை சிரேஷ்ட பாடசாலை எனும் தரத்திற்கு உயர்த்தியது. அவரினால் தேர்ந்து எடுக்கப்பட்ட பொருத்தமான ஆசிரியர்களின் கடின உழைப்பினால் இலங்கைத் தீவின் வரைபடத்தில் பாடசாலை ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டது. (He was able to get the right graduate teachers who laboured to put this small school to the Country’s map) மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
உயர் நீதிமன்ற நீதியரசர் திரு.ந.நடராஜாவுடன் தொடர்பை ஏற்படுத்தி பாடசாலைக்கு ஒரு மண்டபம் தேவை என்பதை வேண்டிக் கொண்டார்.
அன்றைய காலகட்டத்தில் உதவிபெறும் பாடசாலைகளில் இருபாலாரும் கற்பதாயின் ஆசிரியைகளும் கற்பித்தல் வேண்டும் என நியதி இருந்தது. மாணவிகள் பாடசாலையில் கற்காது இருந்த நிலையை மாற்றுவதற்காக செல்வி.செல்வநாயகி நாகரத்தினத்தை காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலையில் கற்பிப்பதற்கு ஆவன செய்ததன் மூலம் திரு.கனகசபை மாணவிகளும் கற்பதற்கான வசதியை ஏற்படுத்தினார்.
திரு.ஏ.கனகசபை அவர்களின் சேவை பொன் எழுத்துக்களால் குறிக்கப்படவேண்டியது.
திரு.ஆ.தியாகராசா M.A M. Lit 25 ஆண்டுகள் வெள்ளிவிழாக்கண்ட அதிபராக பணியாற்றினார். தியாகராசாவின் காலத்தில் பௌதிக வளம் விருத்தி கண்டது. ஆங்கில புலமை மிக்க ஆசான்கள் கடமையாற்றினர். கல்லூரி கல்வியில் புகழ் பெற்று இருந்தது.
திரு.தியாகராசா பாடசாலையை கல்லூரி அந்தஸ்திற்கு உயர்த்திய சிற்பி என திரு.N.சபாரட்ணம் குறிப்பிடுகின்றார்.. Principal Thiyagarajah M.A. M.Lit (Later. Ph.d) was architect of its collegiate status.
திரு.தியாகராசாவின் தீர்க்கதரிசனமான பார்வை, விசுவாசமான சேவை, மக்கள் பால் கொண்ட உளமார்ந்த அக்கறை திரு.தியாகராசாவை வரலாற்று அதிபர் எனும் அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளது.
திரு.தியாகராசாவிற்குப் பின்
திரு.P.S.குமாரசாமி B.A திரு.A.நடராஜா B.A, திரு.K.சுப்பிரமணியம் B.Sc, திரு.K.K.நடராஜா B.Sc. திரு.V.தர்மசீலன் B.Sc., திரு.காரை.சுந்தரம்பிள்ளை M.A, திரு.S.பத்மநாதன் B.Sc., சிவத்திரு.A.K.சர்மா B.Sc. திரு.S.பத்மநாதன் B.Sc., ஆகியோர் முறையே அதிபர்களாகக் கடமையாற்றினர்.
திரு.K.K..நடராசா அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் கல்லூரி கல்வி நிலையில் உச்சம் பெற்றிருந்தது. மருத்துவம், பொறியியல் என்பனவற்றுடன் ஏனைய பீடங்களுக்கும் மாணவர்கள் அதிகளவில் அனுமதி பெற்றனர். க.பொ.த உயர்தர வகுப்பில் 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். அயற்கிராம மாணவர்கள் கற்பதற்கு கல்லூரிக்கு வருகை தந்;தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.தியாகராசாவின் உதவியுடன் கல்லூரிக்கு புகழ்சேர்த்த செயற்றிறன் மிக்க பெருமைக்குரியவர் அதிபர் திரு.K.K.நடராஜா.
திரு.M.திருநீலகண்டசிவம் B.A. அதிபராகவும் காரைநகர் கொத்தணி அதிபராகவும் இருந்து 1991ம் ஆண்டு இடப்பெயர்வினைச் சந்தித்து பல இன்னல்களையும் சவால்களையும் அவர்தம் ஆளுமையின் சிறப்பினால் வெற்றிகொண்டு காரைநகர் பாடசாலைகளை காரைநகருக்கு வெளியே வெற்றிகரமாக நடாத்திய பெருமகன். நூற்றாண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாட பல திட்டங்களை வகுத்தும் சூழ்நிலை காரணமாக அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடியவர்.
திரு.S.R.S.தேவதாசன் B.A தொடர்ந்து அதிபராகவும், காரைநகர் கொத்தணி அதிபராகவும் கடமையாற்றினார். திருமதி.தே.பாலசிங்கம் B.Sc. இடப்பெயர்வின்போது கல்லூரி ஆவணங்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்சென்று பேணியதுடன் மீண்டும் சொந்த இடத்தில் இயக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் கல்லூரியின் வரலாற்றில்; முக்கித்துவம் பெற்றுள்ளது. அதிபர் பண்டிதர் M.S..வேலாயுதபிள்ளை கல்லூரியின் வடக்கு வளாக பௌதிக வளர்ச்சியை தேவைக்கேற்றவாறு திட்டமிட்டு வளப்படுத்தினார். கல்வி வளர்ச்சிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும,; கல்வியியல் கல்லூரிக்கும் அனுமதி பெற்றனர். திரு.கா.குமாரவேலு அதிபராகக் கடமையாற்றியதைத் தொடர்ந்து திரு.A.K.குமரேசமூர்த்தி M.A, Sp.Tr.Sc, B.A.(Hons), M.A (Hons), M.E.D.M.Phil, .PGDE(Merit), SLPS Grade2 Class Iஅதிபராகக் கடமையாற்றினார். திரு.பொ.சிவானந்தராஜாSc.Tr.B.Ed(Hons) Dip.In.School MGT (NIE)அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் அமைப்பதில் உறுதியாகச் செயற்பட்டதன் பலனாக இன்று கல்லூரியில் பல கல்வி விருத்திச் செயற்பாடுகளையும,; பௌதிக வள அபிவிருத்தியினையும் செய்வதற்கான ஆதரவுத்தளம் ஒன்றை உருவாக்கினார்.
ஆறு மாதங்களுக்கு முன் இக்கல்லூரி அதிபராக பொறுப்பேற்ற திருமதி.வாசுகி தவபாலன் Sp.Trd (Science), B.Sc. (Hons), PGED. (Distinction with Gold Medal), M.Ed., M.Phil. தனது பதவிக்காலத்தில் இக்கல்லூரியின் மகிமைக்கும் கீர்த்திக்கும் மெருகூட்ட வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
To Thine own self be True
உனக்கு உண்மையாய் இரு.
எனும் கல்லூரியின் மகுட வாசகம்
ஸேக்ஸ்பியரின் கம்லற்றில் இருந்து எடுக்கப்பட்டதற்கு அமைவாக செயற்படுவோமாயின் சாதனைகள் மிக்க வரலாறு மீண்டும் எழும். என்று கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்.
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125 ஆண்டு விழாவின் முதலாம் நாள் முதலாம் அமர்வில் நடைபெற்ற நிறுவுனர் சயம்புவின் நினைவுப் பேருரை திரு.எஸ்.கே.சதாசிவம்”