மணி விழாக் காணும் அதிபர், ஆசிரியர் திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களை காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியராகவும் நிர்வாகத் திறனும் ஆளுமையும் மிக்க அதிபராகவும் பதவிகள் வகித்து அளப்பரிய கல்விப் பணியாற்றிய திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் மணி விழாக் காண்பதையிட்டு காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
ஆசிரியத்துவம் என்பது வெறும் தொழிலாக மட்டுமல்லாது சமூக மாற்றத்தினை ஏற்படுத்த வல்ல கருவியாகவே பார்க்கப்படுகிறது. இந்த புனிதமான எண்ணத்தினை நெஞ்சில் சுமந்துகொண்டு மகத்தான கல்விப் பணியாற்றி ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய உன்னதமான ஆசிரியரே திரு.முருகமூர்த்தி அவர்களாவார். ஒரு சிறந்த ஆசிரியரிடத்திலே இருக்கவேண்டிய பண்புகள், குணங்கள் அனைத்தும் இவரிடத்திலே அமைந்து விளங்கின என்றே கூறலாம்.
இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய ஆசிரியர் முருகமூர்த்தி அவர்களுடைய ஆசிரிய சேவையினை எமது கல்லூரியான காரைநகர் இந்துக் கல்லூரி ஒரு தசாப்த காலத்திற்கு பெற்றுக்கொண்டமை குறித்து அதன் பழைய மாணவர்கள் என்ற வகையில் பெருமையடைகின்றோம். உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தூய கணிதத்தையும் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்தையும் திறம்படப் போதித்து அவர்கள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். அது மட்டுமல்லாது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராகவும் கடமையாற்றி கல்லூரியின் பௌதிக வள மேம்பாட்டிலும் பங்குகொண்டவர். கல்லூரியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திலும் இவர் ஊக்கமுடன் செயற்பட்டிருந்தார். இவரது தந்தையாரான அமரர் வேலுப்பிள்ளை அவர்களும் எமது கல்லூரியில் சிறப்பான ஆசிரியப் பணியாற்றியவர் என்பதும் இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கதாகும்.
சேவையாளர்கள் வாழும்பொழுதே மதிப்பளிக்கப்படும்போது அவர்களைப் போன்ற பலர் சமூகத்தில் உருவாக வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு ஆசிரியர் முருகமூர்த்தி அவர்களுக்கு மணி விழாவினை ஏற்பாடு செய்தும் அதனையொட்டி அவரின் சேவைகளின் பதிவாக சிறப்பு மலரினை வெளியிட்டும் பணியாற்ற முன்வந்த மணி விழா ஏற்பாட்டுக் குழுவினையும் பாராட்டி நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
தம்பையா அம்பிகைபாகன் கனக சிவகுமாரன்
தலைவர. செயலாளர்.
No Responses to “காரை.இந்துவின் முன்னைநாள் ஆசிரியரும் அயற் பாடசாலையான யாழ்ற்றன் கல்லூரியின் அதிபருமாகிய திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் மணிவிழா காண்பதையிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது”