காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை புனரமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு செய்யப்பட்ட வெள்ளி விழா சென்ற சனிக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் தொழிலதிபர் சிதம்பரப்பிள்ளை நேசேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. காரை.இந்துவின் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இவ்விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்த பிரபல்யம் மிக்க பட்டிமன்றப் பேச்சாளரான ‘சொல்லின்செல்வர்’ பி. மணிகண்டன் அவர்களது ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றிருந்தது.
காரை.இந்துவின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு கல்லூரியின் அண்மைக் காலத்து சாதனைளை எடுத்துக் கூறியிருந்ததுடன் கல்லூரியின் முக்கியமான தேவைகளையும் சிறப்பாக சயம்பு நினைவு மண்டபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சேதம் திருத்தியமைக்கப்படவேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு உரையாற்றினார். கல்லூரி விளையாட்டு மைதானத்தின் எல்லைகளில் சுற்று மதில்கள் அமைப்பதற்கான பெரிய பிரித்தானியா-காரை நலன் புரிச் சங்கத்தினரின் உதவி, இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட மாடிக்கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு பொன்னகவையினை நிறைவுசெய்த கல்லூரியின் பழைய மாணவர்கள் இணைந்து வழங்குகின்ற உதவி என்பவற்றை தமது உரையின் போது குறிப்பிட்டதுடன் கல்லூரியின் செயற்பாடுகளுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கி வருகின்ற பாரிய பங்களிப்பின் முக்கியத்துவத்தினையும் முன்னுதாரணத்தினையும் எடுத்துக் கூறியிருந்தார்.
ஜனாதிபதி றனில் விக்கிரமசிங்கவின் மேலதிகச் செயலாளரான திரு.இ.இளங்கோவன் இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் சிறப்புக் கௌரவங்களையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
காரை.இந்துவின் பழைய மாணவனும் ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சைவத்தமிழ்ப் பணியிலும் சமூகப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவருமாகிய சைவமணி சண்முகரத்தினம் அவர்களினால் மணிகண்டன் அவர்களுக்கு ‘மணிமொழி வாரிதி’ என்ற கௌரவ விருதும் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த கரிசனையுடன் பங்களித்து வருகின்ற கொழும்புக் கிளைத் தலைவர் திரு.சி.நேசேந்திரன் அவர்களுக்கு ‘கல்வி அறக்கொடை வள்ளல்’ என்ற கௌரவ விருதும் வழங்கப் பெற்று கௌரவிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தில் பணியாற்றும் இராமச்சந்திரன் செந்தில்நாதன் அவர்கள் ‘சமூக சஞ்சீவி’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
கொழும்புக் கிளையின் செயலாளரும் ஸ்ரீலங்கா கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஓய்வுநிலைப் பணிப்பாளர் நாயகமுமாகிய Dr..ஆறுமுகம் சிவசோதி அவர்கள் நன்றி தெரிவித்து உரையாற்றியிருந்தார்.
கல்லூரியின் பழைய மாணவர்களான தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியர் திரு.தேவதாசன் செந்திவேல், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிக்கட்டுப்பாட்டாளரும் பொதுநிர்வாக அமைச்சின் உதவிச் செயலாளருமாகிய திரு.வேலுப்பிள்ளை தவராசா, கணக்காளர் குழந்தைவேலு அன்புச்செல்வன், முன்னாள் ஓய்வுநிலை ஆசிரியர்களான திரு.இ.தர்மராசா, திருமதி புஸ்பதேவி சிவசோதி, இசை ஆசிரியை திருமதி உமா சிவகுமார் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.இளையதம்பி தயானந்தா, காரை.இந்துவின் ஆசிரியரும் தாய்ச் சங்கத்தின் பொருளாளருமாகிய திரு.சுகந்தன்,மற்றும் கல்லூரியின் நலன் விரும்பிகளான நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன், “காரைக்கவி” கந்தையா பத்மானந்தன் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளரான திரு.செந்தூரன் அவர்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இ.செந்தில்நாதனும் நிகழ்வுகளை சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தனர்.
கீழே உள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் நிகழ்வின் காணொளிப் பதிவினையும் தொடர்ந்து சில புகைப்படங்களையும் கீழேபார்வையிடலாம்
No Responses to “வெகு சிறப்பாக நடைபெற்ற காரை.இந்து பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் 25வது ஆண்டு நிறைவு விழா.”