ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனையினால் நடத்தப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் நோய் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலையை தெரிவு செய்வதற்கான போட்டியில் முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட காரைநகர் இந்துக் கல்லூரிக்கு பாராட்டு விருதும் ஐயாயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் நிர்வாக எல்லைக்குட்பட்டு வருகின்ற காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன. நாடளாவிய ரீதியில் பரவி வருகின்ற டெங்கு காய்ச்சல் நோய்; தடுப்பு தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டின் ஓர் அங்கமாக இப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.
சுகாதாரத்தைப் பேணி நோய்கள் வராது தடுப்பது தொடர்பில் ‘நிலைபேறான அபிவிருத்தி’ என்கின்ற திட்டம் நாடுதழுவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்துள் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டு அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையிலான ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு குறித்த திட்டச் செயற்பாடுகளை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்டக் குழுவின் உப-குழுவே மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பிலான அறிவினை ஏற்படுத்தி அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தெரியப்படுத்தி டெங்கு காய்ச்சல் அற்ற பாடசாலையாக எமது பாடசாலை விளங்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
அந்தவகையில் இவ் உப குழுவின் தலைவரான அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் உப குழுவின் உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்களான திரு ச. அரவிந்தன், திரு ஞா. கிரிதரன், திருமதி க. சுபத்திரா, திருமதி க. சந்திரமோகன், செல்வி வி. தாட்சாயினி, செல்வி சி. கிருபாலினி ஆகியோரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
பாடசாலையின் சார்பில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்ட விருதினையும் சான்றிதழையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்:
No Responses to “டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.”