எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி கனடா கந்தசுவாமி கோயிலின் புதிய கலை அரங்கில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகி வருகிறது. சுப்பர் சிங்கர் R.P. ஷ்ரவண் வழங்கவுள்ள ‘இசை அருவி’ இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற விஜே தொலைக்காட்சியின் யூனியர் சுப்பர் சிங்கர் போட்டியின் 2வது தொடரில் இடம்பெற்ற போட்டியில் 13வயதாகவிருந்த ஷ்ரவண் பங்குபற்றி தனது அசாத்தியமான இசைத் திறமையினை நிரூபித்து பல இலட்சக்கணக்கான ரசிகர்களை தனதாக்கிக்கொண்டவர். இறுதிப் போட்டியின் 2வது வெற்றியாளரான இவருக்கு Ford Figo கார் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது இப்போட்டித் தொடரின் தலை சிறந்த பாடகர், நட்சத்திரப் பாடகர், பலதரப்படட திறமைகளைக்கொண்ட பாடகர்(Versatile Singer)ஆகிய விருதுகளையும் பெற்றுக்கொண்டவர்.
இன்று சிறந்த பாடகராக மிளிர்ந்து திரைப்படங்களுக்கும் பின்னணிப் பாடல்களைப் பாடி வருகின்றார். அது மட்டுமல்லாது இந்தியாவின் சிறப்பாக சென்னையின் புகழ்பெற்ற சங்கீத சபாக்கள் உள்ளிட்டு பல இசை அரங்குகளிலும் 1500 க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை வழங்கி சாதனை படைத்தவர். பல்வேறு இசை அமைப்புக்களினால் வழங்கப்பட்ட ‘யுவ கலா பாரதி’, ‘காந்தர்வ ஞான சுந்தரம், ‘மதுரை மணி ஐயர் விருது’, ‘சிறந்த ஆண் பாடகர் விருது’ உள்ளிட்டு பல விருதுகளை இளம் வயதிலேயே பெற்றுக்கொண்ட பெருமைக்குரியவர். தமிழகத்திலிருந்து வெளிவரும் சஞ்சிககைளும் நாளிதழ்களும் ஷ்ரவணின் இசை ஆற்றலைப் புகழ்ந்து கட்டுரைகளும் செய்திகளும் வெளியிட்டிருந்தன.
அகில இந்திய அளவில் தேசியரீதியாக நடைபெற்று வருகின்ற பிரபல்யம் மிக்க இசைப் போட்டியாகக் கருதப்படும் Indian Idle Season 7 போட்டித் தொடரில் பங்குபற்றி முதல் ஏழு போட்டியாளர்களுள் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டது மட்டுமல்லாது இப்போட்டியின்போது இவரால் பாடப்பட்ட கர்நாடக இசைப்பாடல் ஒன்றிற்கு நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று சிறப்பான பாராட்டினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் என்பதுடன் இத்தொடரின் சிறந்த பாடகருக்கான விருதினையும் இப்பாடல் பெற்றுக்கொடுத்தது. இலண்டன், அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், சிறீலங்கா, துபாய், சுவீடன், ஜப்பான், டொகா, குவைத் ஆகிய நாடுகளுக்குப் பயணம்செய்து இசை நிகழ்ச்சிகளை வழங்கி சிறு வயதிலேயே பெரும்புகழ்பெற்று விளங்குகின்றார்.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இளம் பாடகர் R.P.ஷ்ரவண் கனடாவின் முன்னணி பக்கவாத்தியக் கலைஞர்களின் பின்னணி இசையுடன் வழங்கவுள்ள அற்புதமான இசை நிகழ்ச்சியாக ‘இசை அருவி’ விளங்கவுள்ளது. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் தமிழிசைப் பாடல்கள், திரைப்படங்களில் வந்து இசைப் பிரபலங்களினால் பாடப்பட்டு உள்ளங்களைத் தொட்ட பக்திப் பாடல்கள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவுசெய்கின்ற வகையில் பலதரப்பட் இசைப் பாடல்களின் சங்கமமாக ‘இசை அருவி’ அமைந்து இசை ரசிகர்களுக்கு பெரு விருந்தாகவும் அரியவாய்ப்பாகவும் அமையவுள்ளது.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக சுப்பர் சிங்கர் ஷ்ரவணின் ‘இசை அருவி’ இடம்பெறவுள்ளது.”