பிரான்ஸ்-காரை நலன் புரிச் சங்கத்தினர் 12வது ஆண்டாக வழங்குகின்ற ‘காரை ஸ்வரங்கள்’ கலை விழா பொலிவுபெற்று விளங்க காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துவதில் பேருவகை அடைகின்றது.
இந்து மகா சமுத்திரத்தின் முத்தான இலங்கைத் தீவின் கொத்தாக அமைந்துள்ள சப்த தீவுகளுள் ஒன்றான காரைநகர் வரலாற்றுத் தொன்மை மிக்கது என்பதுடன் எந்த ஊருக்கும் இல்லாத பல்வேறு தனிச் சிறப்புக்களைக் கொண்டுள்ள பெருமைக்குரிய ஊராகும். காரைநகருக்கான சிறப்பான கல்விப் புலமைப் பாரம்பரியமும் பண்பாட்டு அடையாளமும் உண்டு. இங்குள்ள மக்களின் கலைத்துறை ஈடுபாடு வியந்து போற்றுதற்குரியதாகும்.
பல்துறை சார்ந்த சாதனை மிக்க கலைஞர்களை தந்ததன் மூலம் தமிழ் உலகமே காரை மண்ணை திரும்பிப்பார்த்தது. ஈழத்துக் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களை வளர்த்து விட்ட வகையில் காரை மண்ணுக்கு பெரும் பங்கு உண்டு. இசை வேளாளர்கள் பலரின் கலைத்துறை வளர்ச்சியுறவும் வாழ்கைத்தரம் மேம்படவும்; காரைநகர் மக்கள் ஆற்றிய பங்கு மகத்தானது என ஈழத்தின் புகழ்பூத்த தவில்க் கலைஞர் ஒருவர் ஒருமுறை பதிவிட்டிருந்தமை இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய பெருமையைக் கொண்டுள்ள காரைநகர் மக்கள் புலம்பெயர் தேசங்களில் மண்ணின் பெயரைத்தாங்கிய மகுடத்துடன் கலை விழாக்களை நடத்தி மண்ணின் உணர்வுடன் சங்கமித்து மகிழ்கின்றனர். அத்தகைய கலை விழாக்களின் வரிசையில் பிரான்ஸ்-காரை நலன் புரிச் சங்கத்தினர் ஆண்டுதோறும் வழங்கிவருகின்ற் கலை விழாவான காரை ஸ்வரங்களை சிறப்புப் பொருந்திய விழாவாகப் பார்க்கமுடியும்.
எதிர்வரும் 6-05-2018 ஞாயிற்றுக்கிழமை 12வது ஆண்டாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள ‘காரை ஸ்வரங்கள்’ பொலிவுற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துவதுடன் இவ்விழாவின் வெற்றிக்காக உழைத்து வருகின்ற நேச அமைப்பான பிரான்ஸ்-காரை நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகிகளையும் ஏனைய செயற்பாட்டாளர்களையும் பாராட்டி நன்றி கூறுகின்றது.
No Responses to “பிரான்ஸ்-காரை நலன்புரிச் சங்கம் வழங்கும் ‘காரை ஸ்வரங்கள்’ மேன்மையுற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகிறது”