சென்ற ஆண்டு பொன்விழாக் கண்ட பழைய மாணவர் அணியினரின் உதவியுடன் சுமார் எழுபது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரு வகுப்பறைகளைக் கொண்ட இரு மாடிக் கட்டடத்தின் திறப்பு விழா சென்ற 05ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றிருந்தது.
மடத்துக்கரை அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசையைத் தொடர்ந்து விருந்தினர்கள் அனைவரும் ஆலயத்திலிருந்து கல்லூரி மாணவர்களின் பாண்ட் அணியினர் அணி வகுத்து வர மங்கள வாத்திய இசையுடன்; அழைத்து வரப்பட்டனர். கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் அதன் வளர்ச்சியில் பங்காற்றியவரும் வடமாகாணத்தின் ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள் நடாவினை வெட்டி கட்டடத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.
மங்கள விளக்கேற்றல், பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் என்பவற்றை அடுத்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றிருந்தன. விருந்தினர்கள் அனைவரும் பொன்னகவை அணியினரின் முன்னுதாரணமான பணியினை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் கல்லூரியின் ‘பௌதிக வளக் கட்டமைப்பு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியதுடன் பொன்னகவை அணியினரின் சார்பில் திரு.தீசன் திரவியநாதன் அவர்கள் உரையாற்றியிருந்தார். பொன்னகவை அணியினர் கௌரவ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கட்டடத்தினை நிர்மாணித்தவர்களும் கௌரவிக்கப்பட்டு அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.
விழா ஞாபகார்த்தமாக சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. இறுதியில நடைபெற்றிருந்த கல்லூரி நடன ஆசிரியையின் நெறியாள்கையில் மாணவர்கள் பங்கேற்ற சிறப்பான நடன நிகழ்வு அனைவரையும் கவர்ந்து பாராட்டைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கீழுள்ள சில புகைப்படங்களின் பின்னே உள்ள இணைப்பினை அழுத்தி விழாவின் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பார்வையிடலாம்.
கீழுள்ள இணைப்பினை அழுத்தி விழாவின் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பார்வையிடலாம்.
புகைப்படங்கள்: சிந்துஜா போட்டோ அன் வீடியோ
https://photos.app.goo.gl/bVw4XDmq7HUyR1Wy6
No Responses to “வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னகவைக் கட்டடத் திறப்பு விழா”