கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட ‘சயம்பு சிறப்பு மலர் – 2013 ‘ இல் முதுபேரறிஞர், தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள்வழங்கிய அருளாசியுரையை இங்கே தருகின்றோம்.
காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தைச் சேர்ந்த, ஆயிரம் பிறை கண்ட முதுபேரறிஞர், தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் வழங்கிய
அருளாசியுரை
மேலைத்தேசத்தவர்களின் ஆட்சி காரணமாக எமது சைவத்தமிழ் கலாசாரம் பின்பற்றும் உரிமை மறுக்கப்பட்ட வேளையில் பெரியார் அருணாசல உபாத்தியாயரின் வேண்டுகோளுக்கிணங்க 1888ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் நன்நாளில் இவ்வித்தியாலயம் பெரியார் திரு.முத்து சயம்பு அவர்களால் ஒரு கிடுகுக் கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இவ்வித்தியாலயம் பெரும் விருட்சமாகத் தழைத்து நூற்றியிருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதையிட்டும் சயம்பு மலருக்கு ஆசியுரை வழங்குவதையிட்டும் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வித்தியாலயம் காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை, காரைநகர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை, காரைநகர் இந்துக் கல்லூரி, கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம் என்ற பெயர்கள் காலத்துக்குக் காலம் பெற்றிருக்கிறது. எனினும் நாற்பத்து மூன்று ஆண்டுகள் இவ்வித்தியாலயத்தின் ஸ்தாபராக, ஆசிரியராக, தலைமையாசிரியராக, முகாமையாளராக(மனேஜராக) பெரும் பணியாற்றிய சயம்பு அவர்களின் பெயரே மக்கள் மனத்தில் நிலைத்து நின்று சயம்பற்றை பாடசாலை என்றே அழைக்கின்றனர்.
சயம்பு அவர்களின் பின் வந்த அதிபர்களில் திரு.A.கனகசபை B.A அவர்கள் காலத்தில் சிரேஷ்ட வித்தியாலயமாகத் தரம் உயர்த்தப்பட்டு காரைநகர் இந்துக் கல்லூரி என்ற பெயருடன் விளங்கி வந்தது.
இவர் பின் வந்த திரு.ஆ.தியாகராசா M.A.M.Litஅவர்கள் இருபத்தைந்து ஆண்டு காலம் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலம் பொற்காலம் எனப் போற்றப்பட்டது. நடராசா மண்டபம், நூல் நிலையம், விஞ்ஞான கூடங்கள் போன்ற தேவையான கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இவர் காலத்தில் எச்.எஸ்.சி H.S.C) எனும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1யுடீ பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது.
திரு.K.K.நடராசா அவர்களின் காலத்தில் உயர்தர கல்வி (A/L) உன்னத நிலை பெற்றிருந்தது. திரு.மு.திருநீலகண்டசிவம் அவர்கள் காரைநகர் கொத்தணிப் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் விளங்கினார். இவர் பழைய மாணவர் சங்கத்தைப் புனரமைப்புச் செய்து நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியமை சிறப்புக்குரிய அம்சமாகும்.
ஐந்தாண்டு கால இடம் பெயர்வுக்குப் பின்னர் சகல வளங்களும் இழந்த நிலையில் திருமதி. தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் மீளவும் ஆரம்பித்தார். இவர்பின் வந்த பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் தமது ஏழாண்டு காலப் பகுதியில் பலகோடி ரூபா பெறுமதியான கட்டடங்களையும் ஏனைய பௌதீக வளங்களையும் நிறையப் பெற்றதோடு கல்வித் தரத்திலும் விளையாட்டுத் தரத்திலும் மிக உயர் நிலையைப் பெறச் செய்தார். யாழ் நகரில் உள்ள கல்லூhரிகளுக்கு சரிநிகராகத் தலை நிமிர வைத்த சாதனையாளராகப் போற்றப்படுகின்றார்.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் அதிபராகப் பொறுப்பேற்ற திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் இவ்வித்தியாலயத்தை நல்வழிப்படுத்தி உயர் நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
இத்தகைய அதிபர்களினதும், ஆசிரியப் பெருந்தகைகளினதும் கடின உழைப்பாலும், உயாந்து விளங்கும் இவ்வித்தியாலயம் மேலும் பல வளங்களும் பெற்று நற்பண்பு மிக்க கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டுமென்று உளமார வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றேன்.
க.வைத்தீசுவரக்குருக்கள்
No Responses to “முதுபேரறிஞர், தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் 125 ஆவது ஆண்டு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு ‘சயம்பு’ மலருக்கு வழங்கிய அருளாசியுரை”