நா.குஞ்சிதபாதம் தலைமையில் புதிய நிர்வாகசபை தெரிவு
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 6வது ஆண்டுப் பொதுக்கூட்டம் சென்ற சனிக்கிழமை கனடா செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சங்கத்தின் உப தலைவர் திரு.நா.குஞ்சிதபாதம் தலைமையில் முற்பகல் 10.00மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
2017ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டமை, புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டமை, சங்கத்தின் உறுப்பினரும் கல்வியாளருமாகிய பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை, அங்கத்தவர்களின் பிரேரணைகள் அங்கீகரிக்கப்பட்டமை, பாடசாலையின் வளர்ச்;சி சார்ந்து அங்கத்தவர்களின் உணர்வுபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் என்பன இப்பொதுக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்றிருந்தன.
தேர்தல் அலுவலர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள் தலைமையில் அடுத்த இரு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பதற்கான புதிய நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றபோது பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
தலைவர்: நாகலிங்கம் குஞ்சிதபாதம்
உப-தலைவர்: திருமதி செல்வா இந்திராணி சித்திரவடிவேல்
செயலாளர்: கனக சிவகுமாரன்
உதவிச் செயலாளர்: திருமதி அனுசூயா ஞானகாந்தன்
பொருளாளர்: திரு. மாணிக்கம் கனகசபாபதி
உதவிப் பொருளாளர்: திரு.திருவேங்கடம் சந்திரசோதி
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
திருமதி பிரபா ரவிச்சந்திரன்
திரு. செல்வரத்தினம் சிவானந்தன்
திரு. சிவபாதசுந்தரம் கனகரட்ணம்
திரு.நமசிவாயம் அம்பலவாணர்
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன்
சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள் போசகராகவும் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் உள்ளகக் கணக்காய்வாளராகவும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதுடன் பின்வருவோர் பிரதேச இணைப்பாளர்களாகவும் பொதுச் சபையால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
மொன்றியல் – திருமதி செல்வதி ஸ்ரீகணேசர்
ஒட்டாவா – திருமதி சந்திரா முத்துராசா
ஐக்கிய அமெரிக்க இராச்சியம் – திரு.கந்தையா தர்மராசா
ஏற்கனவே சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டவர்கள் கடந்த ஆண்டுகளில் செலுத்தப்பட்ட உறுப்புரிமைப் பணத்தின் மொத்தத் தொகையை ஆயுட்கால உறுப்புரிமைப் பணமாகிய நூறு டொலர்களிலிருந்து கழித்துக்கொண்டு வருகின்ற மிகுதித் தொகையை செலுத்துவதன் மூலம் ஆயுட்கால உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்கின்ற யாப்பிற்கான திருத்தப் பிரேரணை திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களினால் கொண்டவரப்பட்டு பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கல்லூரியின் நடைமுறைச் செலவீனங்களிற்கு உதவும் வகையிலும் இத்தகைய செலவீனங்களை ஈடுசெய்வதில் கல்லூரிச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற சிரமங்களிற்கு நிரந்தரமான தீர்வினை ஏற்படுத்தும் வகையிலும் நிரந்தர வைப்புத் திட்டம் ஒன்றினை உருவாக்கும் வகையிலான வேலைத் திட்டத்தினை பழைய மாணவர் சங்கம் தனது வேலைத் திட்டங்களுள் ஒன்றாக இணைத்துக்கொண்டு செயற்பட்டு நிறைவுசெய்யவேண்டும் என்கின்ற திரு.கனக சிவகுமாரன் அவர்களினால் கொண்டுவரப்பட்டிருந்த பிரேரணைக்கும் பொதுச்சபை அங்கீகாரமளித்தது.
மூத்த பழைய மாணவர்களும் பெண் உறுப்பினர்களும் அதிகமாகச் சமூகமளித்திருந்த இப்பொதுக்கூட்டம் மூன்று மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றது என்பதுடன் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் பயனுள்ள கருத்துக்களையும் பல உறுப்பினர்களும் பகிர்ந்துகொண்டு தமது கல்லூரி மீதான விசுவாச உணர்வினை வெளிப்படுத்தியிருந்தமை சிறப்பானதாகும். சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம், திரு.மு.வேலாயுதபிள்ளை, திரு.வேலுப்பிள்ளை இராஜேந்திரம்,(முன்னாள் தலைவர், கனடா-காரை கலாசார மன்றம்) திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன் (முன்னாள் செயலாளர், கனடா-காரை கலாசார மன்றம்) திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன்(முன்னாள் செயலாளர், கனடா-காரை கலாசார மன்றம்) திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன், திரு.கனக சிவகுமாரன், திரு.மாணிக்கம் கனகசபாபதி ஆகியோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.
கல்லூரிக்கு பெரும்புகழ் சேர்த்த கல்லூரியின் மூத்த பழைய மாணவனும் கல்வியாளரும் சங்கத்தின் உறுப்பினருமாகிய பேராசிரியர் கலாநிதி தில்லைநாதன் சிவகுமாரன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டிருந்தது. சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம், திரு.கனக சிவகுமாரன் ஆகியோர் அன்னாருக்கு அஞ்சலிதெரிவித்து உரையாற்றினர்.
செயலாளரின் நன்றியுரையைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுற்றதையடுத்து வழங்கப்பட்ட மதியபோசனத்திலும் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
No Responses to “சிறப்புற்று விளங்கிய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 6வது ஆண்டுப் பொதுக்கூட்டம”