கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாக உறுப்பினர் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும் எமது சங்க உறுப்பினருமாகிய திருமதி.மனேரஞ்சனா கனகசபாபதி கடந்த மாதம் ரொன்ரோவில் நிகழ்ந்த பெருவிபத்தொன்றில் பலியானார்.
ஆடம்பரமற்ற எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திருமதி.மனோரஞ்சனா கலையார்வமும் சமூக அக்கறையுள்ளவர். ஆரவாரமில்லாமல் அவர் எமது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு பற்றி அவரின் 45ஆம் நாள் நினைவையொட்டி கனடா உதயன் செய்தியிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை இங்கே தருகின்றோம்.
மறைந்தும் மறையாத எம் மண்ணின் மங்கை மனோரஞ்சனா
-காரை.நங்கை –
எல்லாவற்றிற்கும் மேலான சக்தியாக எல்லோரும் நம்பும் கடவுளை நம்பி வழமைபோலவே திருமதி. மனோரஞ்சனா கனகசபாபதி அன்றும் கடைசி ஆடிச் செவ்வாய் என்று அவன் சந்நிதியில் நம்பிக்கையோடு தனக்காக மட்டுமல்ல தான் அன்பு செலுத்தும் அனைவருக்காகவும் நிச்சயமாக தான் அக்கறைப்படும தன் சமூகத்திற்காகவும் வழிபட்டு விட்டு தன் பணியகமான வங்கிக்கு சென்று கொண்டிருந்தார்.
எல்லோரும் பாதுகாப்பான பயணம் என்று நம்பும் பேருந்துக்காக நம்பிக்கையோடு காத்து நின்றபோது அவரது நம்பிக்கை வீண்போகாமல் அவரை ஏற்றிச் செல்ல ஒரு பேருந்து அவரது தரிப்பிடத்தில் வந்து நின்றது. மனேரஞ்சனா பேருந்தினுள் ஏறி உள்ளே சென்றுகொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த சிறியரக பாரஊர்தி பேரூந்தை மோதித் தள்ள அதில் அகப்பட்ட அப்பாவி மனேரஞ்சனா, அவரது நம்பிக்கை, அவரை நம்பியோரின் நம்பிக்கை எல்லாமே ஒரு கணத்தில் தொலைந்து போயின.
Picture
பிள்ளைகள் ஒரு உன்னதமான தாயை இழந்தனர். கணவர் தன் ஆருயிர் மனைவியை இழந்தார். முதுமையாகி குழந்தையான தாய் தன் தாயான குழந்தையை இழந்தார். சதோதரர்கள் தமது அருமைச் சகோதரியை இழந்தனர். பேரக் குழந்தை தான் ஒரு அற்புதமான பேர்த்தியை இழந்ததை அறியாமலே அழுதது. எல்லாவற்றிக்கும் மேலாக சமூகம் ஒரு சமூக அக்கறையுள்ள பெண்ணை இழந்தது. கலையுலகம் கலையார்வம் உள்ள கலைஞரை இழந்தது.
picture
சிறியரக பார ஊர்தியின் சாரதி கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாலேயே இந்த கோர விபத்து நேரிட்டது. கனடிய பிரதான ஊடகங்கள் எல்லாவற்றிலும் பிரதான இடத்தைப் பிடித்திருந்த இந்தத் துன்பியல் விபத்து பற்றிய செய்தி ரொன்Nhhவில் எல்லோர் மனதிலும் அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
திருமதி.மனோரஞ்சனாவின் இழப்பு எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத தாங்கிக் கொள்ள முடியாத தொழில் நுட்ப வளர்ச்சியின் கறுப்புப் பக்கமாக ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டது.
ரொரன்ரோ நகர பிதா றொப் ஃபோர்ட், ரொன்ரோ பொதுப் போக்குவரத்து நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.அன்டி பைஃபோர்ட், கனடியத் தமிழர் பேரவையினர் ஆகியோர் தமது அநுதாபச் செய்திகளை உடனடியாக வெளியிட்டிருந்தனர்.
கனடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (CTBC) ஒரு மணி நேரம் திருமதி.மனேரஞ்சனாவிற்கான அஞ்சலி நிகழ்ச்சியாக ஒலிபரப்பியபோது பெருமளவான நேயர்கள் அவருடன் தாம் பழகிய நினைவுகளை மீட்டி வானொலி ஊடாக அஞ்சலி செலுத்தியிருந்தனர். இறுதி வணக்க நிகழ்வில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்ய செலவுசெய்யப்படும் பணத்தை அநாதைக் குழந்தைகளிற்கு உதவிவரும் ‘பிரணவம் நிதியத்திற்கு’ வழங்கி உதவலாம் என்று அன்னாரின் குடும்பத்தினர் வேணடுகோள் விடுத்திருந்தனர்.
திருமதி. மனோரஞ்சனாவின் பூதவுடல் Highland Funeral Home மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தபோது பெருந்திரளான பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்து நின்று தமது இறுதி அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். ரொறன்ரோ போக்குவரத்துச் சபை நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.அன்டி பைஃபோர்டஇ பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்இ விபத்து நிகழ்ந்த வட்டாரத்தின் மாநகரசபை உறுப்பினர் ஆகியோரும் அன்னாருக்கு நேரில் சமூகமளித்து இறுதி அஞ்சலியினை தெரிவித்ததுடன் அன்னாரது குடும்பத்திற்கு ஆறுதலும் கூறியிருந்தனர். கனடா இந்து சமயப் பேரவை, தமிழ் இசைக் கலா மன்றம், கனடா-காரை கலாச்சார மன்றம், கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளை ஆகிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இரங்கலுரை நிகழ்த்தியிருந்தனர்.
கனடாவின் பிரதான ஊடகங்கள் பலவும் இவ் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு முக்கியத்தும் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தன.
திருமதி. மனேரஞ்சனாவின் கலையார்வமும் சமூக உணர்வும்
இலங்கை காரைநகரில் பிறந்த திருமதி. மனேரஞ்சனா 1983 இனக்கலவரத்தையும் 1991 தமது சொந்தக் கிராமத்தின் இடப்பெயர்வையும் நேரில் சந்தித்து கனடாவிற்கு 1991 ஆம் ஆண்டு தமது இரு குழந்தைகளுடன் புலம்பெயர்ந்திருந்தார்.
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் ரொரன்ரோவில் வாழ்ந்தாலும், நாம் ஏன் புலம்பெயரவேண்டி வந்தது, அதன் வலி, புலம்பெயர் வாழ்வின் அவலம் என்பனவற்றை எல்லோர் சார்பிலும் காத்திரமான பதிவாக ‘ஊரான ஊர்’ என்ற விவரணப்படத்தில் திருமதி.மனோரஞ்சனா பதிவு செய்திருந்தார்.
இலங்கையின் இனச் சிக்கல் பற்றிய வரலாற்றையும் உள்நாட்டுப் போரிற்கு தமிழர் கொடுத்த விலைபற்றியும் ‘ஊரான ஊர்'(My Country) என்ற விவரணப்படம் Omni தொலைக்காட்சி நிலையத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட முக்கிய ஆவணப்படமாகக் கருதப்படுகின்றது.
விருது பெற்ற இயக்குநர் லலிதா கிருஷ்ணாவின் இவ்விவரணப்படம் ReelWorld திரைப்பட விழாவில் ஏப்பிரல் 2012இல் திரையிடப்பட்டிருந்தது.
இயக்குநர் திருமதி.லலிதா கிருஷ்ணா திருமதி. மனேரஞ்சனாவின் இழப்பை அறிந்து வெளியிட்ட செய்தியில் இந்தத் துன்பியல் சம்பவம் வேறு யாருக்குமல்ல நாம் எல்லாம் அறிந்த திருமதி. ரஞ்சனா கனகசபாபதிக்கே நிகழ்ந்துள்ளதை அறிந்து தான் மிகவும் இடிந்துபோயுள்ளதாகவும் அவர் தம்முடன் பணியாற்றிய நினைவுகளையும் பதிவு செய்திருந்தார். மிகவும் வெளிப்படையாக தனது கதைகளையும் தாயக நினைவுகளையும் அவர் தம்முடன் பகிர்ந்து கொண்டதாகவும் திரைப்படம் திரையிடப்பட்ட பின்னரும் தம்முடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும் திருமதி. ரஞ்சனா பெருந்தன்மையும் பேரார்வமும் உள்ளவர் என்றும் அவரது வாழ்க்கை தனது பிள்ளைகளை மையப்படுத்தியதாகவே இருந்ததாகவும் 51 வயது மட்டுமேயான இவருக்கு இன்னும் ஆக்கபூர்வமான எதிர்காலம் இருந்ததாகவும் அவரின் குடும்பத்தினர் எவ்வாறு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளப்போகின்றனர் என்பதை தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருத்தார்.
குறமகள் என்ற திருமதி. வள்ளிநாயகி இராமலிங்கம் எழுதிய ‘மிதுனம்’ என்கின்ற நாவல் புலம்பெயர் தமிழரின் வாழ்வு, மேலத்தேய வாழ்வு, முதுமை வாழ்வு என்ற பல பரிணாமங்களைத் தொட்ட சமூக நாவலாக கனடாவில் வெளிவந்திருந்தது. இந்நாவல் வெளியிடுவதற்கு ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்ததுடன் கதையின் முன்னோட்டத்தையும் நாவலின் பின் அட்டையில் மனோரஞ்சனா எழுதியிருந்தார். கலையுணர்வும், சமூகப் பொறுப்புமுள்ள காத்திரமான பதிவாக அது அமைந்திருந்தது.
கனடாவில் குடியேறிய பின் ‘people caring for people’ என்ற விழுமியத்திற்கமைய திருமதி. மனோரஞ்சனாவும் மருத்துவமனை, பாடசாலை ஆகியவற்றில் தொண்டராகச் சேவையாற்றி பல சான்றிதழ்களையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
தனது மகள் திருமதி.சத்தியசொரூபி தீபன் அவர்களை சிறந்த வயலின் இசைக் கலைஞராக உருவாக்கி இசையுலகிற்கு மட்டுமல்ல அந்த இசையின் மூலம் வட அமெரிக்காவில் சில நிதிசேர் இசை நிகழ்வுகளையும் நடத்தி எமது சமூகத்திற்கும் திருமதி. மனோரஞ்சனா தம்மாலியன்ற பங்களிப்பினைச் செய்திருந்தார்.
இவ்வாறு எமது சமூகத்திலும், கலையுலகிலும் ஒரு முன்மாதிரியான பெண்மணியாக வாழ்ந்து எம்மை விட்டு மறைந்தாலும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மண்ணின் மங்கை மனேரஞ்சனாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானை இறைஞ்சுவோமாக!
சாந்தி! சாந்தி! சாந்தி!
நன்றி: கனடா உதயன்
No Responses to “மறைந்தும் மறையாத எம் மண்ணின் மங்கை மனோரஞ்சனா”