கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாக உறுப்பினர் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும் எமது சங்க உறுப்பினருமாகிய திருமதி.மனேரஞ்சனா கனகசபாபதி கடந்த ஆகஸ்ட் மாதம் ரொன்ரோவில் நிகழ்ந்த பெருவிபத்தொன்றில் உயிரிழந்த செய்தி வாசகர்கள் அறிந்ததே.
அன்னாரின் 45ஆம் நாள் நினைவு வணக்க நிகழ்வு சென்ற சனிக்கிழமை (28-09-2013) அன்று கனடா ஸ்ரீஐயப்பன் கோவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்களுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களும்; கலந்து கொண்டனர்.
இலங்கை காரைநகரில் பிறந்த திருமதி.மனோரஞ்சனா கனகசபாபதி 1991 ஆம் ஆண்டு தமது இரு குழந்தைகளுடன் கனடாவிற்கு புலம் பெயர்ந்திருந்தார். மிகுந்த இறைநம்பிக்கையுடைய இவர் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு பணிக்குச் செல்வது வழக்கம். கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி கடைசி ஆடிச்செவ்வாய் அன்று வழமைபோலவே மனோரஞ்சனா கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு தன் பணியகமான வங்கிக்குச செல்வதற்காக Middlefield/Steels சந்திப்பில் மேற்குத்திசையாகச் செல்லும் 53ஆம் இலக்கப் பேரூந்து அதன் தரிப்பிடத்தில் நிற்க அதனுள் ஏறி உள்ளே சென்றிருந்தபோது அந்தக் கணத்தில் எங்கிருந்தோ வந்த சிறியரக பாரஊர்தி அந்தத் தரிப்பிடத்தில் நின்றிருந்த பேரூந்தின் வலதுபுறமாக முன்பகுதியை மோதித்தள்ள அதில் அகப்பட்ட அப்பாவி மனோரஞ்சனா அவ்விடததிலேயே உயிரழந்தார்.
சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சியப்படி பாரஊர்தியின் சாரதி கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும்;. இதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காக சாரதியின் கைத்தொலைபேசிச் சேவை வழங்குநரின் பதிவு ஆதாரங்களை எதிர்பார்த்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஆர்தர் லேன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
வாகனச் சாரதி ஒருவர் தனது புலன்களைச் சிதறவிட்டவாறு இன்னொரு இலத்திரனியல் சாதனத்தை உபயோகித்தவாறு வாகனம் செலுத்தியமை ஒர் உன்னதமான மானிட உயிரைப் பலி கொண்டுள்ளது. இன்னும் பலரைக் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கின்றது.
ஒன்ராரியோ போக்குவரத்துச் சட்டங்கள் வாகனம் செலுத்தியபடி கைத்தொலைபேசியில் பேசுதல், மற்றும் தொலைதொடர்பு சாதனங்களை கையில் வைத்து பயன்படுத்தியவாறே வாகனம் செலுத்துதல் போன்ற செயல்களை ஒக்Nhரபர் 2009இல் இருந்து தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் வெறுமனே சட்டங்கள் இருக்கின்றனவே தவிர அவை கடுமையாக அமுல்படுத்தப் படுவதில்லை என்பது திருமதி.மனோரஞ்சனாவின் குடும்பத்தினரின் கவலையாக உள்ளது. சென்ற சனிக்கிழமை (28-09-2013) அன்று கனடா ஸ்ரீஐயப்பன் கோவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற அன்னாரின் 45ஆம் நாள் நினைவு வணக்க நிகழ்வின் போதே குடும்பத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அமரர்.மனோரஞ்சனா கனகசபாபதியின் 45ஆம் நினைவு வணக்க நிகழ்விற்கு நகர,மாகாண, மத்திய அரசுகளின் பிரதிநிதிகள், கனடிய பிரதான ஊடகங்கள்,, உள்ளுர் தமிழ் ஊடகங்கள்,உறவினர்கள், நண்பர்களுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சமூகமளித்திருந்தனர்.
பிரபல இசை ஆசிரியையும் சங்கீத அக்கடமி இசைப்பள்ளியின் அதிபருமாகிய திருமதி.பராசக்தி விநாயகதேவராஜா அவர்கள் பஞ்சபுராணம் ஓதியைத் தொடர்ந்து சென்ற ஆண்டு Omni தொலைக்காட்சி நிலையத்தினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட திருமதி.மனோரஞ்சனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த ‘ஊரான ஊர்’ ((My Country) என்ற விவரணப் படத்தின் காணொளி திரையில் காண்பிக்கப்பட்டது.
அடுத்து திருமதி.மனோரஞ்சனாவின் சகோதரர் திரு. கனகராஜா கந்தையா உரையாற்றும்போது தனது சகோதரியின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் தமது குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு இனி வேறு யாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது என்றும் வாகனம் ஓட்டும்போது சாரதி தனது புலனை வாகனம் செலத்துவதில் மட்டும் செலுத்தாமல் வேறு பல வழிகளில் சிதறவிடுவதினாலேயே இவ்வாறான விபரீத விபத்துக்கள் நடைபெறுகிறது என்றும் அன்றாட வாழ்க்கையிலும் வளர்ந்து விட்ட தகவல் தொழில்நுட்பத்திற்கு மக்கள் அடிமைப்பட்டு உண்மையான வாழ்க்கையை அநுபவிக்காமல் தம்மைத் தொலைத்துவிடுகின்றனர் என்றும் கூறினார்.
எனவே தமது சகோதரி திருமதி.மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் நினைவாக கவனத்தைச் சிதறவிட்டபடி வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையை தமது குடும்பத்தினர் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும், பொதுமக்களினதும் ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டார்.
மேலும், திருமதி.மனோரஞ்;சனா கனகசபாபதி அவர்களின் நினைவாக அவர் பிறந்து வளர்ந்த ஊரான காரைநகரில் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தற்கு உதவுவதற்கான நம்பிக்கை நிதியம் ஒன்றினை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்படி இரு திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை www.ranjana.ca என்ற இணையத்தளத்தில் விரைவில் எதிர்பார்க்கலாம் எனவும் திரு.கனகராஜா மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன், மாகாண சட்டசபை உறுப்பினர் பாஸ் பல்கிசூன், ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்கள் ரேமன்ட் ச்சோ, ச்சின் லீ, மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்கள், நண்பர்களுடன் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அமார்.மனோரஞ்சனாவிற்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
பல பிரதான ஊடகங்களும், உள்ளுர் தமிழ் ஊடகங்களும் நிகழ்வைப் பதிவு செய்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது.
படங்கள்: கங்கா
No Responses to “அமரர்.மனோரஞ்சனா கனகசபாபதி நினைவாக கனடாவிலும் காரைநகரிலும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்க குடும்பத்தினர் தீர்மானம்”