தேசிய மட்டத்திலான சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாவது இடத்துக்குச் தெரிவுசெய்யப்பட்டுள்ள செல்வன் யாதவன் இராமகிருஸ்ணன் காரை.இந்து அன்னையைப் பெருமைப்படுத்தியுள்ளார். அதேவேளை இதே போட்டியில் செல்வன் யாதவனது சகோதரனாகிய செல்வன் நவனீதன் இராமகிருஸ்ணன் 8வது இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இப்போட்டியில் பங்குபற்றிய செல்வி யதுசா ரவிச்சந்திரன் வெற்றி வாய்ப்பினைப் பெறவில்லையாயினும் தேசிய மட்டத்திலான இப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தமை பாராட்டுக்குரியதாகும். நாட்டிலுள்ள பல முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு மூவரும் பெற்றுக்கொண்ட நிலை பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
சரித்திரம், பூமிசாஸ்திரம், குடியியல், பொது அறிவு என்பவற்றிலான பரீட்சைகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தனர்.
காரை.இந்துவுக்கு பெரும் புகழைச் சேர்த்த செல்வன் யாதவன் இராமகிருஸ்ணன் அவர்களையும் ஏனைய இரு மாணவர்களையும் இவர்களைப் போட்டிக்கு தயார்படுத்தி விட்டிருந்த திரு.ச.சுகந்தன், திருமதி இ.மனோரஞ்சிதமலர், செல்வி வி.கிரியா, திருமதி த.சிவாஞ்சலி, திருமதி பு.துசாந்தினி ஆகிய ஆசிரிய மணிகளையும சிறந்த முறையில் நெறிப்படுத்திய அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
கல்வி, கல்விசாரா செயற்பாடுகளில் சாதனை ஏற்படுத்தி வருகின்ற மாணவர்களையும் தொடர்புடைய ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிப்பதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அனுசரணை வழங்கி வரும் வரிசையில் மேற்குறித்த சாதனை மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிப்பதற்கும் முன்வந்துள்ளது. இவர்களைப் பாராட்டிக் கௌரவிப்பதற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவிச்செயலாளரும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் கரிசனைகொண்டு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றவருமாகிய திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “தேசிய மட்டத்திலான சமூக விஞ்ஞானப் போட்டியில் காரை.இந்துவின் மாணவன் செல்வன் யாதவன் இராமகிருஸ்ணன் 1ஆம் இடத்தைப் பெற்றுச் சாதனை!”