சில மாணவர்கள் காலை உணவு உண்ணாது பாடசாலைக்கு வந்து கற்றலில் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டது. பாடசாலை முடியும் வரைக்குமுள்ள பிற்பகல் 1.30மணி வரைக்கும் காலை உணவின்றி இருப்பதனால் மிகவும் சோர்வுற்று கற்றலில் இவர்களால் முழுமையாக ஈடுபடமுடியாத நிலை இருந்து வருகின்றது.
கல்லூரியின் வளர்ச்சியில் தீவிர கரிசனை கொண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஊடாக பல உதவிகளை செய்து வருபவர் கல்லூரியின் பழைய மாணவனும் அமெரிக்காவில் பொறியியலாளராகப் பணியாற்றுபவருமாகிய திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்களாவர். 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று கல்லூரியில் கற்று வருகின்ற 48 மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு மாதாந்தம் உதவுகின்ற வகையில் மகேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்ட உதவித் திட்டம் அனைவரதும் வரவேற்பினைப் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது.
மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடசாலைக்கு அண்மையில் பயணம் செய்திருந்தபோது காலை உணவின்றி வருகின்ற மாணவர்களின் நிலையை அவரது கவனத்திற்கு அதிபரினால் தெரியப்படுத்தியபோது எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக உதவ முன்வந்து ஒருதொகைப் பணத்தையும் அதிபரிடம் கையளித்து அவர்களுக்கு உடன் காலை உணவினை வழங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
காலை உணவின்றி வருகின்ற மாணவர்கள் உடன் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மகேஸ்வரன் அவர்களது நிதியிலிருந்து தினமும் காலை சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட மாணவர்கள் காலை உணவு உண்ணாது வருவதற்கான உண்மைக் காரணம் கண்டறியப்பட்டு அதனடிப்படையில் சத்துணவு வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து வழங்குவது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அதிபர் திரு.அ. ஜேகதீஸ்வரன் தெரிவித்ததுடன் உண்ணாது பசியுடன் வரும் மாணவர்களுக்கு உதவ முன்வந்த மகேஸ்வரன் அவர்களது மனிதாபிமான சிந்தையை பாராட்டி பாடசாலைச் சமூகத்தின சார்பில் உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.
No Responses to “காலை உணவின்றி பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கு பொறியியலாளர் பாலசுப்பிரமணியம் மகேஸ்வரன் அவர்களது உதவியுடன் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.”