ஆசிரியர் தின வாழ்த்துக்கள் …
அன்னையும் பிதாவும் முன் வர
தெய்வத்தை பின் தள்ளிய என் ஆசானே
தூரத்து புள்ளியாய் காலங்கள் கடந்தாலும்
தூறலாய் என் நெஞ்சில் உங்களின் சாரல் என் அகல் விளக்கே!
என் அகக் கண் திறந்து
இடம் சுட்டி காட்டினீர்கள் என் அறிவை,.. தமிழை
என் குரலில் திருக்குறளை
அவையில் ஒலிக்கச் செய்த என் அம்மையே!
உங்கள் கிரணம் பரப்பி அதில் என்னை
மினுங்கச் செய்த ஆதவமே
உங்கள் பெயருக்குள் என்னை பொதிந்து நிற்கிறேன்
உங்கள் பெருமை கண்டு உருகி நிற்கிறேன்.
உங்களுக்காய்
உள்ளொளி கொடுக்கும் உலகை காக்கும் ஆசிரியர்களுக்காய்
வாழ்த்த வருகிறது என் தமிழ்
அன்பினை வளர்க்கும் அட்சய பாத்திரங்களே
அறிவுச் சுடர் ஏத்தும் அணையா தீபங்களே
அறிவுப் பசி தீர்க்கும் கற்பக விருட்சங்களே
அன்பின் வழி நடத்தும் முன் மாதிரிகளே
பின்தங்கிய சமுதாயம் உயர்த்தும் உன்னத உள்ளங்களே
பிறர்க்காய் மெழுகென உருகி ஒளி தரும் தியாக தீபங்களே!
சக்தியுள்ள சமுதாயம் படைத்து
நற்குணங்களை என்றும் காத்து
தீயசக்திகள் அழித்து..
முத்தொழில் செய்து மூவுலகை ஆளும் பரம் பொருள் சக்திகளே!
அறிவுச் சுடர் தந்து அறம் தழைக்க
அச்சாணியாய் விளங்கும் ஆசான்களே -உங்கள்
அடிமலர் பணிகிறேன்
உங்கள் ஆத்தமார்த்த அறிவுப் பணிக்கு
என் ஆசிரியப்பா வாழ்த்துக்கள் ……
No Responses to “ஆசிரியர் தின வாழ்த்துக்கள் …”