கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளை உறுப்பினர் திரு.மாணக்கம் கனகசபாபதி அவர்களின் மனைவியும் எமது சங்க உறுப்பினருமாகிய திருமதி.மனோரஞ்சனா கனகசபாபதி கடந்த ஆகஸ்ட் மாதம் சிறியரக பாரஊர்தி ஒன்று தரிப்பிடத்தில் நின்றிருந்த ரொன்ரோ போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பயணிகள் பேரூந்துடன் மோதுண்டபோது உயிரிழந்தமை வாசகர்கள் அறிந்ததே.
அமரர் மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களைக் கௌரவித்து ஒன்ராரியோ மாகாண சட்ட சபையில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யும் சட்ட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமரர் மனோரஞ்சனா உயிரிழப்பதற்குக் காரணமான விபத்து நடைபெற்ற ஸ்காபுரோ ரூஜ் ரிவர் தொகுதியின் சட்ட சபை உறுப்பினர் திரு.பாஸ் பல்கிசூன் ‘மனோரஞ்சனா கனகசபாபதி சட்டமூலம்’ (கைகளில் இலத்திரனியல் சாதனங்களுடன் வாகனம் செலுத்துதல் சட்டமூலம்-2013) என்ற தனிநபர் திருத்த சட்டப் பிரேரணையை சென்ற புதன்கிழமை(ஒக்.09,2013) அன்று மாகாண சட்ட சபையில் சமாப்பித்திருக்கிறார்.
மேற்படி போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்யும் ‘மனோரஞ்சனா கனகசபாபதி சட்டமூலம்’ என்ற தனிநபர் சட்ட பிரேரணை மாகாண சட்ட சபையில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், கைகளில் இலத்திரனியல் கருவிகளுடன் வாகனம் செலுத்துவோருக்கு விதிக்கப்படும் தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்படும்.
கைகளில் இலத்திரனியல் கருவிகளுடன் வாகனம் செலுத்துவோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 155டொலர் அபராதம் அதிகரித்து 300 டொலர் முதல் 700 டொலர் வரையான அபராதம் விதிப்பதற்கும், வாகனச் சாரதி அனுமதிப் பத்திரத்தில் மூன்று தண்டனைப் புள்ளிகளைப் பெறுவதற்கும் ஏற்ற வகையில் நெடுஞ்சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்வதற்கு இத்திருத்தச் சட்டமூலம் வழிவகுக்கும்.
மாகாண சட்ட சபையில மேற்படி திருத்தச் சட்டப் பிரேரணை ஒக்டோபர் 31 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. சட்ட திருத்தப் பிரேரணையைச் சபையில் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாகாண சபை உறுப்பினர் திரு.பாஸ் பல்கிசூன் ‘மனோரஞ்சனா கனகசபாபதி சட்ட மூலம்’ எமது சாரதிகள் அவதானமாக வாகங்களைச் செலுத்துவதற்கும் எமது வீதிகள் பாதுகாப்பானதாக இருப்பதற்கும் உதவும் என்றும் இச்சட்ட மூலம் சபையில் நிறைவேற்றப்படுவதற்கு அனைத்துக் கட்சியினரின் ஆதரவும் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
pic
அமரர்.மனோரஞ்சனாவின் குடும்ப அங்கத்தவர்களும் அன்றைய தினம் மாகாண சட்டசபையின் பார்வையாளர் பகுதியில் சமூகமளித்திருந்தனர்.
pic
திருமதி.மனோரஞ்சனாவின் சகோதரர் திரு. கந்தையா கனகராஜா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது இந்த திருத்த சட்டமூலம் தாமதிக்கப்டாமல் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் இன்னொரு உயிரிழப்பை எம்மால் தாங்கிக் கொள்ள முடியாதென்றும் கூறினார். தமது சகோதரியின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
கடந்த மாதம் (28-09-2013) அன்று கனடா ஸ்ரீஐயப்பன் கோவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற அமரர்.மனோரஞ்சனாவின் 45ஆம் நாள் நினைவு வணக்க நிகழ்வின் போது கவனத்தைச் சிதறவிட்டபடி வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும், பொதுமக்களினதும் ஒத்துழைப்பை மனோரஞ்சனாவின் குடும்பத்தினர் வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No Responses to “அமரர்.மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களுக்கு ஒன்ராரியோ மாகாண சட்ட சபையில் கௌரவம்”