உயர் நிதிமன்ற நீதியரசராகப் பணியாற்றிய களபூமியைச் சேர்ந்த நமசிவாயம் நடராசா K.C. அவர்களின் நினைவாக அன்னாரது துணைவியாரான தங்கம்மா அவர்களினால் காரைநகர் இந்துக் கல்லூரியின் பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்டதே நடராசா ஞாபகார்த்த மண்டபம் ஆகும். வெள்ளிவிழா அதிபர் என்ற புகழுக்குரியவரும் கல்லூரியை உன்னதமான நிலைக்கு கொண்டுவர அயராது உழைத்தவருமாகிய கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் பெரு முயற்சியினால் 1950ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இம்மண்டபத்தினை அக்காலகட்டத்தில் நீதி மந்திரியாகவிருந்த ஏ.எஸ்.ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைக்க இலங்கை பல்கலைக் கழகத் துணைவேந்தராகவிருந்த ஐவர் ஜென்னிங்ஸ் அவர்கள் நடராசா K.C. அவர்களது முழு உருவப் படத்தினை திரை நீக்கம் செய்துவைத்திருந்தார். அக்காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள பெரிய மண்டபமாக இது கணிப்பிடப்பட்டது. மாணவர்கள் காலைப் பிரார்த்தனைக்காக ஒன்றுகூடுகின்ற இடமாகவிருப்பதுடன் கலை விழாக்கள், பொதுப் பரீட்சைகள், சமூக நிகழ்வுகள் என்பன நடைபெறுகின்ற முக்கியமான மண்டபமாகவும் இது விளங்குகின்றது. 1991ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வின் பின்னர் சேதமுற்றிருந்த இம்மண்டபம் 2012ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டதுடன் மின் விசிறிகள் பொருத்தப்பட்டும் இருக்கைகள் இடப்பட்டும இன்று புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
கல்லூரிச் சமூகத்தினதும் காரைநகர்ச் சமூகத்தினதும் பயன்பாடு சார்ந்து முக்கியத்துவம் மிக்க இம்மண்டபத்திற்கு வர்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தி பராமரிக்கப்படவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி அதற்குரிய நிதியுதவியைச் செய்யுமாறு தாய்ச் சங்க நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவரும் கல்லூரியின் அதிபருமாகிய திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பரிசீலித்து ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவினை உதவியிருந்தது. இதேவேளை யாழ்.பிரதேச தமிழ் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு வழங்கிவருகின்ற உதவிகள் காரணமாக யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தின் நன்மதிப்பினைப் பெற்ற பிரபல வர்த்தகரான ‘கல்விக்காருண்யன்’ E.S.P.நாகரத்தினம் அவர்கள் இருபத்தொராயிரம் ரூபா பெறுமதிமிக்க தீந்தைகளை வழங்கி உதவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். மண்டபத்தின் உட்பக்கம், வெளிப்பக்கம், முகப்பு மற்றும் கல்லூரியின் இரண்டு பிரதான நுழைவாசல்களோடு அமைந்துள்ள மதில்கள் என்பன வர்ணம் பூசப்பட்டு அழகுறக் காட்சியளிக்கின்றன.
வர்ணம் பூசப்பட்ட பின்னர் பல்வேறு கோணங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்த நடராசா ஞாபகார்த்த மண்டபத்தினதும் மதில்களினதும் புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் வர்ணம் பூசப்பட்டு அழகுறக் காட்சியளிக்கும் நடராசா ஞாபகார்த்த மண்டபம்.”