காரைநகர் இந்துக் கல்லூரியின் பெரும்பாலான அடிப்படைத் தேவைகளிற்கு, பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தொடங்கப்பெற்ற காலம் முதலாக உள்ள கடந்த ஆறு ஆண்டுகளாக நிதி உதவி அளிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததேயாகும்.
பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், அனுசரணையாளர்கள் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் மற்றும் நிதியுதவி நிகழ்ச்சிகள் ஊடாகப் பெறப்படும் நிதி ஆகியவற்றின் ஊடாக பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் குறித்த அடிப்படைத் தேவைகளிற்கான உதவி வழங்கப்பட்டு வருகின்றது.
மின்சாரக் கட்டணம், இலத்திரனியல் நூலக மின் கட்டணம், Wi-Fi இணையக் கட்டணம், குடிநீர்க் கட்டணம், விருந்தினர் உபசரணைக்கான செலவீனம், ஆளணிப் பற்றாக் குறையினை தற்காலிகமாக நீக்கிவைப்பதற்கான கொடுப்பனவு போன்றனவே கல்லூரியின் முக்கிய தேவைகளாக இருந்துவருகின்றன. இவற்றிற்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவதில் அனைத்துத் தரப்பினரும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
சிரமங்களைத் தவிர்க்கவும், கல்லூரியின் சுமுகமான நிர்வாகச் செயற்பாட்டினை உறுதிசெய்யவும் ஏற்றவகையில் இத்தேவைகளை நிறைவு செய்வதற்கு நிரந்தரமாக உதவும் வகையில் வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் திட்டம் ஒன்றினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உருவாக்க வேண்டும் என சென்ற யூன் மாதம் நடைபெற்ற 6வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இத்தீர்மானம் குறித்து அண்மையில் கூடிய சங்க நிர்வாக சபைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன் நிரந்தர வைப்புத் திட்டத்தினை தொடங்கிவைக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் தெரிவித்துள்ளார். படிப்படியாக முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்பாடுகள் தொடர்பில் அவ்வப்போது உறுப்பினர்களிற்கு தெரியப்படுத்தி அவர்களது ஒத்துழைப்பும் உதவியும் கோரப்படவுள்ளதாகவும் திரு.குஞ்சிதபாதம் மேலும் தெரிவித்தார்.
No Responses to “காரை.இந்துவின் அடிப்படைத் தேவைகளிற்கு நிரந்தரமாக உதவக்கூடிய திட்டம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் முன்னெடுக்கப்படவுள்ளது”