கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் வாணி விழா கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி பாடசாலையின் இந்துமா மன்றத்தின் ஏற்பாட்டில் பொறுப்பாசிரியர்; திருமதி.சங்கீதா பிரதீபனின் வழிநடத்தலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் பாடசாலை நடராசா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைமகள் கோவிலில் கொலு வைக்கப்பட்டு தினமும் பூசை வழிபாடுகள் நடைபெற்று சொற்பொழிவுகள், கலைநிகழ்வுகள் இடம்பெற்று இறுதிநாளான விஜயதசமி நாளில் வாணி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழமையாகும்.
அந்த வகையில் இவ்வாண்டும் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் இந்துமா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற வாணிவிழாவிற்கு கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமை தாங்கினார்.
விழாவிற்கு பிரதம விருந்தினராக காரைநகர் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் திரு.A.கங்காதரன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும், Super Shoes நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள் காரை அபிவிருந்தி சபைச் செயலாளருமாகிய திரு.இரத்தினகோபால் ஜெயராஜா கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
திரு.இ.ஜெயராஜா கல்லூரிக்கு பலவழிகளிலும் ஆதரவு வழங்கி வருபவர் என்பதுடன் கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட அணியின் பயிற்றுநர் திரு.ஆ.இராஜகோபால் அவர்களின் புதல்வன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கௌரவ விருந்தினராக களபூமியைச் சேர்ந்த சித்தானந்த வித்தகர் திரு.நடராசா கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
அன்றைய தினம் மண்டபத்தில் உள்ள கலைமகள் கோவிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விழா நிகழ்வுகள் தொடங்கின. இந்துமா மன்றத்தைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.சர்வாம்பிகை உலககுருநாதன் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றினார்.
கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது தலைமையுரையில் வாணி விழாவின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்து பாடசாலை மாணவர்கள் வழங்கிய கலைநிகழ்வுகள் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகி தனியிசை, குழு நடனம்(கீர்த்தனை), குழு இசை, கண்ணகி-கோவலன் நாட்டிய நாடகம் என்று தொடர்ந்து இடம்பெற்றன. மாணவர்கள் வழங்கிய இக்கலைப்படைப்புகள் கலைத்தாயாம் கலைமகளுக்கு அழகான கலைப்பூக்களை அர்ப்பணம் செய்வதாக அமைந்திருந்தன.
அடுத்து எமது பாடசாலையின் கலைத்துறை மாணவர்கள் தமது விடய ஆய்வின் போது சிறந்த பிரதேச் கலைஞராக இனம் காணப்பட்ட எமது பாடசாலையின் பழைய மாணவரும் யாழ் மாவட்டத்தில் சிறந்த சிற்பக் கலைஞராக விளங்குபவருமாகிய திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் ஓவிய ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் அவர்களினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
அடுத்து பிரதம விருந்தினர் திரு.A.கங்காதரன் அவர்கள் தம்மை இந்த விழாவிற்கு அழைத்தமையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் இப்பாடசாலைக்கு அயலில் உள்ள நிறுவனம் என்ற வகையில் தாமும் பாடசாலைச் சமூகத்துடன் எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் திரு.இ.ஜெயராஜா தமது உரையில் தாம் மாணவனாக இக்கல்லூரியில் வாணி விழாக்களில் பங்குபற்றிய பின்னர் மீண்டும் 27 ஆண்டுகளின் பின்னர் கல்லூரி வாணி விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
அடுத்து கௌரவ விருந்தினர் சித்தானந்த வித்தகர் திரு.நடராஜா சமயச் சொற்பொழிவாற்றினார்.
அடுத்து வாணி விழாவினையொட்டி பாடசாலையில் நடத்தப்பட்ட கோலமிடுதல், மாலை கட்டுதல், பண்ணிசை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்துமா மன்றச் செயலாளர் செல்வி.சுஜிவா அற்புதராஜாவின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
No Responses to “இந்துமா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாணி விழா”