காரை.இந்துக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் பழைய மாணவனுமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களினால் எழுதப்பெற்ற ‘வரலாற்றில் காரைநகர்’ என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர், யாழ்ப்பாணம் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியரும் வடமாகாண ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமாகிய திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் பல மூத்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரையினை வழங்கவுள்ளனர். நூலின் அறிமுகவுரையினை காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியரும், மூத்த ஊடகவியலாளருமாகிய திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் நிகழ்த்தவுள்ளதுடன் நூல் நயப்புரையினை காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
இடைப்பிட்டி, காரைநகரைச் சேர்ந்தவரும் காரைநகர் மக்களால் நன்கறியப்பட்டவருமான சட்டத்தரணி (அமரர்) கந்தையா மற்றும் அமரர் விசாலாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மகனான நூலாசிரியர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் காரை.மண் மீது மிகுந்த பற்றுதல் கொண்டு அதன் வளர்ச்சிக்கு உழைத்து வருபவர். சிறப்பாக இம்மண்ணின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருபவர். ஸ்ரீலங்காவின் கல்விக் கட்டமைப்பில் ஆசிரியர், அதிபர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர் என பல பதவிகளூடாக கல்விப் பணியாற்றியவர். ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகத்தில் (German Technical Cooperation GTZ) நிர்வாக அலுவலர், அலுவலக முகாமையாளர், கணக்காளர் ஆகிய பதவிகளை வகித்து வட-கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி, புனர்நிர்மண புனரமைப்புப் போன்றவற்றின் செயற்றிட்டங்களில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
காரை.மண்ணின் வரலாற்றினை அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதிலும் அது ஆவணப்படுத்தப்படல் வேண்டும் என்பதிலும் ஆர்வத்துடன் செயற்பட்டவர். மண்ணின் வரலாறு சார்ந்த விடயங்களில் மிகுந்த தேடலுடையவரான இவர் வரலாற்றுத் தகவல்களையும் ஆவணங்களையும் புகைப்படங்களையும் சேகரித்துப் பாதுகாத்து வைத்திருப்பதில் அக்கறையுடன் செயற்படுபவர். தாம் சேகரித்து வைத்தனவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஆக்கங்களை தொடர்ச்சியாக எழுதி சஞ்சிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வந்தமை மக்களின் பெரு வரவேற்பினைப் பெற்றிருந்தது. இவ்விதம் அவரால் கடந்த காலங்களில் எழுதி வெளியிடப்பெற்ற ஆக்கங்களின் தொகுப்பாகவே ‘வரலாற்றில் காரைநகர்’ என்ற நூல் அமைந்துள்ளது. 326 பக்கங்களைக் கொண்ட இந்நூலானது வரலாற்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், எதிர்காலத்தில் காரை.மண்ணின் வரலாற்றினை ஆய்வுசெய்ய விரும்பும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் காரை.மண்ணின் வரலாற்றுப் பெருமையினை அறிய ஆவல்கொண்டுள்ள அனைத்து மக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டு உழைத்து வரும் திரு.சதாசிவம் அவர்கள் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பதும் குறிப்படக்கூடியதாகும். சிறந்த விளையாட்டு வீரரான திரு.சதாசிவம் அவர்கள் காரை.இந்துக் கல்லூரி, காரை விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் சிறந்த கோல் காப்பாளர் என்ற நிலையில் நன்கு அறியப்பட்டவர். இவர் காரை.இந்து வசாவிளான் மகா வித்தியாலய உதை பந்தாட்ட அணிகளின் பயிற்சியாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை திரு.சதாசிவம் அவர்கள் ‘வரலாற்றில் காரைநகர்’ என்ற நூலினை எழுதி வெளியிட்டு வைக்கின்ற பணியினைப் பாராட்டுவதுடன் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்கவும் காரை.மண்ணின் மக்களுக்கான அவரது பணிகள் தொடரவும் வாழ்த்தி மகிழ்கின்றது.
நூல் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழை கீழே பார்வையிடலாம்:
No Responses to “‘வரலாற்றில் காரைநகர்’ நூலினை வெளியிட்டு வைக்கின்ற ஆசிரியர் எஸ்.கே.சதாசிவம் அவர்களின் பணியினைப் பாராட்டி நூல் வெளியீடு சிறப்புற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்தி மகிழ்கின்றது.”