‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ (‘Nearest School is the Best School’) என்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பௌதீக வள அபிவிருத்தி மூலம் பண்புசார் கல்வியை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத் தொகுதிக்குத் தேவைப்படும் காணி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை, பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை, பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கம் ஆகிய அமைப்புக்களின் நிதி உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தமை குறித்த விபரங்கள் இவ்விணையத்தளம் ஊடாக எடுத்தவரப்பட்டிருந்தன.
பாடசாலையின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் பிரதான வீதியுடன் அமைந்துள்ள ஆறு பரப்புக் காணி பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் முப்பத்திஇரண்டு இலட்சத்து ஆயிரத்து தொழாயிரம் (32,01,900ரூபா) ரூபா நிதி உதவியுடன் 2016ஆம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. வடக்கு வளாகத்தின் வடக்கு எல்லையில் சயம்பு வீதியுடன் அமைந்துள்ள மேலும் பத்துப் பரப்புக் காணியினை கொள்முதல் செய்வதற்கு பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கம் இவ்வாண்டும் உதவியுள்ளது. காணியின் பெறுமதியாகிய நாற்பத்தைந்து இலட்சம் ரூபாவும் முத்திரைச் செலவு ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவும் ஆக மொத்தம் நாற்பத்தாறு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவினை பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கம் உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இக்காணிக்கான சட்ட ஆவணத்தினை பாடசாலையின் பெயருக்கு மாற்றி எழுதும் பணி கல்லூரியின் பழைய மாணவியும் சட்டத்தரணியுமாகிய திருமதி சாந்தி சிவபாதம் அவர்களின் யாழ்ப்பாணத்திலுள்ள காரியாலயத்தில் சென்ற மாதம் இடம்பெற்ற சமயம் பாடசாலை அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பழைய மாணவன் திரு.இ.சிவசுப்பிரமணியம் ஆகியோருடன் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் போசகர்களுள் ஒருவரான திரு.பரமநாதர் தவராசா மற்றும் காணியின் உரிமையாளர் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
மூலஉபாயத் திட்டத்தின் பிரகாரம் (Master Plan) பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்ட கிழக்கு எல்லையிலுள்ள ஆறு பரப்புக் காணியில் நிர்வாகக் கட்டிடம், நூலகம், மூன்று மாடிகளைக்கொண்ட தொழில்நுட்ப ஆய்வுகூடம், வகுப்பறைகள் என்பனவும் வடக்கு எல்லையில் கொள்முதல் செய்யப்பட்ட பத்துப் பரப்புக் காணியில் மாணவர்களுக்கான விடுதிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான மனைகள், ஆகியன நிர்மாணிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளன.
இத்திட்டமானது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு காரைநகர்ச் சிறார்கள் சமகால கல்வி வாய்ப்புக்களைப் பெற்று நல்லதோர் உலகைக் காண்பதற்கு பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கம் வாழ்த்துகிறது.
காணிகளை கொள்முதல்செய்வதற்கு உதவிய பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்திற்கும் ஒத்துழைத்த பழைய மாணவர் சங்க நிர்வாகிகளிற்கும் பாடசாலையின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கல்லூரியின் பழைய மாணவியான சட்டத்தரணி திருமதி சாந்தி சிவபாதம் கல்லூரிக்கான அனைத்து சட்ட ஆவணங்களையும் எவ்வித கட்டணமும் அறவிடாது இலவசமாகவே எழுதி உதவிவரும் வரிசையில் குறித்த இக்காணிக்கான சட்ட ஆவணமும் இலவசமாகவே அவரால் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
காணியின் சட்ட ஆவணம் (உறுதி) சட்டத்தரணி திருமதி சாந்தி சிவபாதம் அவர்களினால் அவரது காரியாலயத்தில் எழுதப்பட்டபோது எடுக்கப்பட்டிருந்த படங்களைக் கீழே பார்வையிடலாம
No Responses to “காரை.இந்துவின் பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் பத்து பரப்புக் காணி பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் நாற்பத்தாறு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா நிதி உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.”