காரைநகர் இந்துக் கல்லூரியின் நடராசா, சயம்பு, தியாகராசா, பாரதி ஆகிய இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் 4வது ஆண்டாக சென்ற 25-03-2024 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளரும் முன்னாள் கிராம அபிவிருத்தி அதிகாரியுமாகிய கனக.சிவகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், தீவக வலய உடற்பயிற்சிக் கல்விக்கான சேவைக்கால ஆலோசகர் செல்வி ரி.துஸ்யா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவரும் நிதி முகாமையாளருமாகிய திரு.குழந்தைவேலு அன்புச்செல்வன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
பழைய மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற் பாடசாலைகளின் அதிபர்கள், நலன் விரும்பிகள், விளையாட்டு ரசிகர்கள் என திரளானோர் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது சமூகமளித்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி நிகழ்வுகளைக் கண்டு களித்தனர். கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் அயராது உழைத்த முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்கள் இதில் கலந்துகொண்டமை சிறப்பானதாகும். தொடக்கத்தில் இடம்பெற்றிருந்த நான்கு இல்லங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணியினரதும் பாடசாலை பான்ட் அணியினரதும் அணிநடை நிகழ்வு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. ‘இசையும் அசைவும்’ என்ற தொனிப்பொருளில் கண்ணைக் கவரும் உடைகளணிந்த மாணவிகள் பங்குபற்றிய உடற்பயிற்சிக் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்து பிரமிக்க வைத்திருந்தது.
பிரதம விருந்தினரான திரு.கனக சிவகுமாரன் உரையாற்றுகையில், கல்லூரியுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் உற்சாகத்துடனும் மனமகிழ்வுடனும் ஈடுபடுகின்ற முக்கியமான ஒரு நிகழ்வாக மெய்வல்லுநர் திறனாய்வு பார்க்கப்படுகிறது. தேசிய மட்டம்வரை சென்றவர்களை மட்டுமல்லாது அதிலே தங்கம், வெள்ளி ஆகிய பதக்கங்களை வெற்றிகொண்ட செல்வரத்தினம் ராதகோபாலன் போன்ற சாதனையாளர்களை உருவாக்கி புகழ் பெற்றது எமது கல்லூரியாகும். வாழ்க்கைக்கு உதவக்கூடிய பல்வேறு விடயங்களையும் இவ்விளையாட்டு நிகழ்வின் ஊடாகப் பெற்றுக்கொள்ளமுடியும். மாணவர்களது பண்புகளை இது செப்பனிடவல்லது. குறிப்பாக விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தோல்விகளை ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம், தன்னை முந்தியவர்களையும் பாராட்டும் மனப்பான்மை ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது. கல்வி என்பது தங்கம் போன்றது. விளையாட்டு என்பது வைரம் போன்றது. இரண்டும் சமநிலை அடையும்போது சாதனைகளை குவிக்கமுடியும். எனவே கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுபட்டு உங்கள் உடல் வலுவையும் உள ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். எக்காரணம்கொண்டும் கல்வியை மட்டும் விட்டுவிடாதீர்கள். இன்று கல்வியை பூரணப்படுத்தாது இடைநடுவே விட்டு வெளிநாட்டு ஆசைகொண்டு பலரும் வெளியேறுவதையும் தாம் எதிர்பார்த்ததை அங்கு அடையமுடியாமல் திரும்பி வந்துகொண்டிருப்பதையும் அறியமுடிகிறது. முனைப்போடு கல்வியில் ஈடுபட்டு அதில் உயர்ச்சி அடைவீர்களேயானால் நீங்கள் பெற்ற கல்வியே உங்களை வெளிநாட்டுக்கு கொண்டு போய்ச் சேர்க்கவல்லது என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இக்கல்லூரியின் மகிமைமிக்க பழைய மாணவனான குழந்தைகள்மருத்துவநிபுணர் வி.விஜயரத்தினம் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கைநிதியம் பெரும் வரப்பிரசாதமாகும் எனக் குறிப்பிட்ட கனக.சிவகுமாரன் அவர்கள் இதனை ஏற்படுத்தி உதவிய மருத்தவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களது மகத்தான பணி அனைத்துத் தரப்பினரதும் பாராட்டுக்கும் நன்றிக்குமுரியதாகும் என மேலும் குறிப்பிட்டார். இடப்பெயர்வுக்கு முன்னரான காலப்பகுதியில் உதைபந்தாட்டம் காரை.இந்துவில் பல ஆண்டுகளாக உன்னதம் பெற்றிருந்தததையும் இந்த மைதானம் பல சிறந்த உதை பந்தாட்ட வீரர்களை இனம்காட்டியது என்பதுடன் ஆனந்தசற்குணநாதன் என்ற வீரரை தேசிய மட்டத்திலான உதை பந்தாட்ட தெரிவுஅணியில் இடம்பெறச் செய்த பெருமைக்குரியது எனக் குறிப்பிட்டதுடன் மீண்டும் உதைபந்தாட்ட அணியினை உருவாக்க அதிபரும் சம்பந்தப்பட்ட தரப்பும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் அப்படி உருவாக்க முன்வரும்பட்சத்தில் அதன் மேம்பாட்டுக்குத் தேவையானவற்றை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கி உதவும் எனவும் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர் ஆகியோரும் உரையாற்றினர்.
விளையாட்டுத்துறை ஆசிரியரும் நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுச் செயலாளருமாகிய திரு.ம.ஜெனிஸ்ரன் இதயகுமார் அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து நிகழ்வு நிறைவுற்றது.
நிகழ்வின் சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அதேவேளை நிகழ்வின் சிறப்பினை வெளிப்படுத்துகின்ற 300 வரையான புகைப்படங்களை கீழே தரப்பட்டுள்ள இணைப்புக்களை அழுத்திப் பார்வையிடமுடியும். ஏதாவதொரு புகைப்படத்தை அழுத்தி அதன்மேல் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் அழுத்துவதன் மூலம் அப்படத்தின் முன்னேயும் பின்னேயும் உள்ள அனைத்துப் படங்களையும் பெரிய அளவினதாகப் பார்வையிடலாம்.
Part I
https://photos.app.goo.gl/egSdiCoxAD2EP7Cm7
Part II
https://photos.app.goo.gl/XtSjKsVbw543fcSE8
No Responses to “கடும் வெப்பத்தைத் தணித்து கண்களுக்கு குளிர்ச்சியையும் மனமகிழ்வினையும் ஏற்படுத்திய காரை.இந்துவின் இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு.”