கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் அதிபராக சென்ற ஆண்டு ஜனவரியில் (18.01.2013) பதவியேற்ற திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் இன்று எமது கல்லூரி அதிபர் சேவையில் இரண்டாம் ஆண்டில் கால் பதிக்கிறார்.
காரைநகரின் கல்விப்பாரம்பரியத்திற்கு வித்திட்ட புகழ்பூத்த முதன்மைக் கல்லூரி தனது 125வது ஆண்டு நிறைவில் கால் பதித்த சென்ற ஆண்டில்; அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் நிர்வாகத்தில் கல்லூரி வளர்ச்சிப் பாதையில் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் கடந்த ஓராண்டுப் பதவிக் காலத்தில,; கல்லூரியில் புதிதாகப் பல பௌதிக வளவிருத்தித் திட்டங்களும் பாடவிதான, இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, அத்திட்டங்கள் கல்வித் திணைக்களத்தின் நிதியீட்டத்தினூடகவும், பழைய மாணவர் சங்க நிதியீட்டத்தினூடகவும், புலம்பெயர் காரை அமைப்புகளின் நிதியீட்டத்தினூடகவும், நலன் விரும்பிகளின் உதவியுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு கல்லூரி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.
அத்துடன் கல்லூரியில் சென்ற ஆண்டில் குறிப்பிடத்தக்க கல்விசார் சாதனைகளும், இணைப்பாடவிதான சாதனைகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் வரலாற்று நிகழ்வாகிய 125ஆவது ஆண்டு விழா மூன்று அமர்வுகளாக நடைபெற்றதுடன், நடராசா ஞாபாகார்த்த மண்டபத் திறப்பு விழா, சிற்றுண்டிச் சாலை திறப்பு விழா, பெண்கள் சாரணியம் கால்கோள் விழா, இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு, ஆசிரியர் தினம், வாணி விழா என்பன சென்ற ஆண்டில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாக நடைபெற்றன.
காரை இந்து அன்னையின் அரவணைப்பில் வளர்ந்து கல்விப்பகுதியில் உயர் பதவி வகித்த திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் எமது கல்லூரியின் அதிபராகப் பதிவியேற்ற கடந்த ஓர் ஆண்டில் கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வது குறித்து கனடா வாழ் பழைய மாணவர்கள் பேருவகை கொள்வதுடன் தமது நன்றியையும் பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
தனது அதிபர் பதிவிக் காலத்தின் இரண்டாம் ஆண்டில் கால் பதிக்கும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் எல்லாம் வல்ல இறைவனின் ஆசி கிடைக்க வேண்டுகின்றோம்.
No Responses to “ஒர் ஆண்டைப் பூர்த்தி செய்து இரண்டாம் ஆண்டில் கால் பதிக்கும் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலனுக்கு எமது பாரட்டுகளும் வாழ்த்துகளும்!”