கல்லூரியின் அனைத்து மாணவர்களும் மைதானத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மெய்வல்லுநர் நிகழ்வு
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு புதன்கிழமை (பெப்.5.2014) அன்று பிற்பகல் 1:00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக பாடசாலையின் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளைப் படைத்த பழைய மாணவரும், வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.க.சத்தியபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.இ.குணநாதன் அவர்களும், காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.ஏ.விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
கௌரவ விருந்தினர்களாக பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரும் யோகா ரான்ஸ்போட் உரிமையாளருமாகிய திரு.ந.யோகநாதன் அவர்களும், பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளரும் கிராம சேவையாளருமாகிய திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்களும், அலையன்ஸ் நிறுவன முகாமையாளர் திரு.கோ.சிறிவரதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியரும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும் தாய்ச்சங்கத்தின் போசகருமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம், ஓய்வுநிலை அதிபரும் தாய்ச்சங்கத்தின் உப-தலைவருமான பண்டிதர்.மு.சு.வேலாயுதபிள்ளை, ஓய்வுநிலை அதிபர் திரு.கா.குமாரவேலு, முன்னாள் ஆங்கில ஆசிரியையும், கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் ஆர்.கந்தையா மாஸ்ரரின் மகளும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா. மருத்துவர் சுவாமிநாதன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கல்விக்காருண்யன் இ.ச.பே.நாகரத்தினம், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் திரு.சு.கணேசமூர்த்தி, முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அ.ஜெகதீஸ்வரன் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் என விளையாட்டு ரசிகர்கள் பல நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டிருந்தனர்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது உரையில் இன்றைய நிகழ்வின் பிரதமவிருந்தினர், சிறப்பு விருந்தினர்கள் கௌரவ விருந்தினர்களையும் மற்றும் முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், மாணவர்கள் அனைவரையும் வரவேற்று மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து அவர் தனது உரையில் ஒவ்வொரு பாடசாலையிலும் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியானது மாணவர்களின் ஆளுமையையும் திறமையையும் வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் மாணவர்களின் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கையும்; நல்ல உடல் உள ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகின்றது எனக் கூறினார்.
மேலும் இன்றைய இவ்விளையாட்டு நிகழ்வானது பாடசாலையில் கற்கும் சகல மாணவர்களும் மைதானநிகழ்வுகளில பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் 100 வீதம் மாணவர்களும்; கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும் என்று கூறினார்.
மாணவர் பங்குபற்றலை அதிகரிப்பதற்காக இல்லங்களின் ஆண், பெண் என எட்டு மாணவர் அணிகளுக்கு மேலதிகமாக பான்ட் அணியின் ஆண்கள், பெண்கள் என இரு அணியினரையும் சுற்றாடல் முன்னோடிக்குழு, பெண்கள் சாரணிய அணியினர் என மேலும் ஆறு அணிகள் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எமது பாடசாலை மாணவர்கள் கடந்த ஆண்டு வலயமட்டத்தில் பல விளையாட்டு சாதனைகளை தடகள நிகழ்வுகள், பெருவிளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்களில் பதிவாக்கி உள்ளனர், அவ்வகையில் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி சாமினி சிவராஐ; அவர்களுக்கு சிறப்புப் பாராட்டைத் தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாண்டும் 20 மாணவர்கள் கோட்டமட்ட சதுரங்கப் பொட்டியில் பங்குபற்றி அதில் 10 மாணவர்கள் வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண:டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
இப்பாடசாலையின் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற நிதியனுசரணை வழங்கிய திரு.ஸ்ரீஸ்கந்தராஜா பாஸ்கர்,பயிரிக்கூடல்,காரைநகர் (பிரான்ஸ்) ரூ50,000.00, திரு.சண்முகம் சிவஞானம் இடைப்பிட்டி,காரைநகர்,ரூ 25,000.00, திரு.கந்தையாஆறுமுகம்,களபூமி,காரைநகர் ரூ2500.00 ஆகியோருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.
மற்றும் இப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை திருமதி. சாமினி சிவராஜ் இடமாற்றம் பெற்றுச் செல்ல இருப்பதால் பொருத்தமான உடற்கல்வி ஆசிரியரைப் பெற்றுத்தருமாறு பிரதிக் கல்விப்பணிப்பாளர், வடமாகாணம், தீவகவலயம் ஆகியோரிடம் வேண்டிக் கொண்டார்.
பாடசாலையில் ஒரு உள்ளக விளையாட்டு அரங்கம் இல்லாமல் இருப்பதனால் அதனை அமைப்பதற்கு பழையமாணவர்கள், புலம்பெயர் பழையமாணவர்கள் உதவியை இப்பாடசாலை வேண்டிநிற்கின்றது என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது உரையில் பாடசாலையின் வளர்ச்சிப் பணிகளில் கல்லூரியின் பழையமாணவர் சங்கங்கள் புலம்பெயர் காரைஅமைப்புகள், நலன்விரும்பிகள், கல்வித்திணைக்களத்தின் இணைப்பாடவிதான செயற்பாட்டு உதவிகள் என்பன பெரும் உதவிகளாக அமைந்தன. பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு மேலும் உதவிகள் தேவைப்படுவதனால் அதனை நிவர்த்தி செய்ய மேற்கூறிய அமைப்புகளின் உதவியைப் பாடசாலை வேண்டி நிற்கின்றது என்று கூறினார்.
பிரதமவிருந்தினர் திரு.க.சத்தியபாலன் அவர்கள் தனது உரையில், இவ்விளையாட்டுப்போட்டி தாம் எதிர்பார்த்ததிற்கு மேலாக மிகவும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது என்றும் பாடசாலை மாணவர்கள் 100 வீதம் கலந்துகொண்டமை இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பம்சம் என்றும் கூறினார். மேலும் ஏனைய பாடசாலைகளுக்குக் கிடைக்கும் உதவிகள் போல இப்பாடசாலைக்கும் உதவிகள் பெற்றுக் கொடுப்பதற்கு தன்னாலான உதவிகளை வழங்குவதாகக் கூறினார்.
சிறப்புவிருந்தினர் திரு.இ.குணநாதன் தனது உரையில் இவ்விளையாட்டு நிகழ்வில் நேரமுகாமைத்துவம் சிறப்பாகப் பேணப்பட்டமையும் சுற்றாடல் முன்னோடிக்குழு, சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டமை இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பியல்பாகும் எனக் குறிப்பிட்டார். இணைக் கலைத்திட்ட செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு பெற்றோர் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றும் இதன் மூலம் பல புலமைப் பரிசில்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
நான்கு இல்லங்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வில் இவ்வாண்டு சயம்பு இல்லம்( 569 புள்ளிகள்) முதலிடத்தையும், தியாகராசா இல்லம்( 545 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும் நடராசா இல்லம(441 புள்ளிகள்); மூன்றாம் இடத்தையும், பாரதி இல்லம்( 342 புள்ளிகள்) நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
569 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடம் பெற்ற சயம்பு இல்லத்தின் தலைவர் சு. டனுசன் பிரதம விருந்தினர், அதிபர் ஆகியோரிடமிருந்து வெற்றிக்கேடயங்களைப் பெற்றுக்கொண்டார்.
விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியை திருமதி சாமினி சிவராஜ் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட அணிவகுப்பு அணிகளும் மற்றும் உடற்பயிற்சி அணி நிகழ்த்திக் காட்டிய காட்சிகள் நகரப்பாடசாலையின் தரத்தையும் மிஞ்சியதாகக் காணப்பட்டதாகவும் விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு – 2014”