காரைநகர் இந்துக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி சென்ற 31-01-2019 வியாழக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. சயம்பு, நடராசா, தியாகராசா, பாரதி ஆகிய இல்லங்களுக்கிடையேயான இப்போட்டி கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையிலும் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் ஒருங்கமைப்பிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பொன்னம்பலம் சகீலன் சிறப்பு விருந்தினராகவும், காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவகலாநிதி பரா.நந்தகுமார் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாணவர்களின் அணிவகுப்பு, இடைவேளையின்போது மாணவர்களால் நிகழ்த்தப்பட்டிருந்த உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தாம்பிழுவைப்போர் என்பன பார்வையாளர்களை அதிகம் கவர்ந்த நிழ்வுகளாக அமைந்திருந்தன என்பதுடன் இம்முறை பழைய மாணவர்களின் பங்களிப்பு அதிகம் இருந்தமையை அவதானிக்கமுடிந்தது.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் நிர்வாக உறுப்பினரும் கல்லூரியின் விளையாட்டுத்துறை சாதனையாளருமான அமரர் நாகராசா பாலசுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக, அன்னாரது நண்பர்கள் சார்பாக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் வழங்கப்பட்டிருந்த சுற்றுக் கேடயமும் ரொக்கப் பரிசிலும் மரதன் ஓட்டத்தில் பங்குபற்றி ஆண்கள் பிரிவில் வெற்றிபெற்ற செல்வன் இ.சயிந்தன் அவர்களுக்கும், பெண்கள் பிரிவில் வெற்றிபெற்ற செல்வி எஸ்.அசந்தா அவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் சுற்றுக் கேடயமும் ரொக்கமும் வழங்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இம்முறை இரண்டாவது ஆண்டாக இவை வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை நடாத்தவதற்கு உதவும் பிரதான நோக்குடன் குழந்தைகள் மருத்துவநிபுணர் வி.விஜயரத்தினம் அவர்களால் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின்’ வைப்புத்தொகை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக மேலதிகமாகப் பெறப்பட்ட வட்டித்தொகயிலிருந்து இவ்வாண்டுக்கான மெய்வல்லுநர் போட்டி நடாத்தப்பட்டது என்பதுடன் எதிர்வரும் காலங்களில் இந்த நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடனேயே இப்போட்டி நிகழ்வு தொடர்ந்து நடாத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டி நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “வெகு சிறப்பாக நடைபெற்ற இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி”