திரு. எஸ்.கே.சதாசிவம் அவர்களால் எழுதப் பெற்ற ‘வரலாற்றில் காரைநகர்’ எனும் நூலின் வெளியீட்டு விழா 31.03.2024 அன்று யாழ்ப்பாணம் துர்க்கா மணி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
காரைநகர் மக்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், சமய, சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கிய சிறப்பு மிக்க சபையினால் மண்டபம் நிரம்பி வழிந்திருந்தமை இந்நூலின் முக்கியத்துவத்தினையும், காரைநகர் மக்களின் ஆழ்ந்த மண் பற்றினையும், நூலாசிரியர் எஸ்.கே.சதாசிவம் அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
இவ்விழாவானது வடமாகாண ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் திரு. ப.விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ‘வரலாற்றில் காரைநகர்’ எனும் நூல் பல பெறுமதி மிக்க வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் என தனது தலைமையுரையில் திரு. ப.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வாழ்த்துரை வழங்கிய செஞ்சொற் செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்கள் மிக முக்கியமான தகவல்களுடன் இன்றைய சூழ்நிலைகளையும் உள்ளடக்கிய, அரிய ஆவண பெட்டகமாகிய ‘வரலாற்றில் காரைநகர்’ எனும் நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். பண்புசார் கல்விமான்களையும், தாராள சிந்தை மிக்க கொடையாளிகளையும் தந்த காரைநகர் மண்ணின் பெருமை பற்றி இந்நூல் பேசுகின்றது. சைவ ஆசிரிய கலாசாலையை உருவாக்கிய அருணாசல உபாத்தியாயரின் பணி பற்றி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சமயப் பணிகளில் காரைநகர் மக்களின் பங்களிப்பு போற்றுதற்குரியது என மேலும் குறிப்பிட்டார்.
வாழ்நாள் பேராசிரியர் திரு. பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் பேசுகையில்; தீவகம் சார்ந்த பல நூல்கள் கடந்த காலங்களில் வெளியிடபட்டுள்ளது. ‘வரலாற்றில் காரைநகர்’ எனும் நூல் பல சிறப்பு அம்சங்களை தாங்கி வெளிவருகின்றமை பாராட்டுதற்குரியது. நூல் ஆசிரியர் தன் வயது, கண்ணில் ஏற்பட்ட நோய் என்பனவற்றை உறுதியுடன் கடந்து நூலை ஆக்கியுள்ளார். காரைநகர் மக்களின் பெருமை மிகு பண்பாடுகளையும், மக்களின் சாதனைகளையும் பற்றி தனது உரையில் பேராசிரியர் குறிப்பிட்டார்.
சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு. இளையதம்பி தயானந்தா அவர்கள் தனது அறிமுகவுரையில், திரு. எஸ்.கே.சதாசிவம் விளையாட்டுத்துறை ஆசிரியராக இருந்த போதிலும் வரலாற்று நூல் ஒன்றினை வெளியிடுவது பாராட்டுக்குரியது என்றார். நீண்டகால தேடல்கள், ஆவணப்படுத்தல், சந்தேகங்களை தீர்ப்பதற்கு தயக்கமின்றி கலந்துரையாடல் என்பன இந்நூல் சிறப்பாக வெளிவர காரணமாயிற்று. தொல்லியல், விளையாட்டு, நிர்வாகம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. ‘வரலாற்றில் காரைநகர்’ எனும் நூல் ஆவணப்படுத்தலுக்கும், தேடலுக்குமான வழியைத் தந்துள்ளது என மேலும் தெரிவித்தார்.
தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீண்டதொரு சிறப்பான நயப்புரையினை வழங்கினார். அவர் தனது உரையில், நான் பல நூல்களை வாசித்து உள்ளேன். இந்நூல் என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது. என் மண்ணின் பெருமை அறிந்தபோது எழுச்சியையும், மகிழ்ச்சியையும் தந்தது எனக் குறிப்பிட்டார்.
‘வரலாற்று நூல்களில் காரைநகர்’ எனும் கட்டுரையில் காரைநகரின் வரலாற்றுப் பெருமைகளை வரலாற்று நூல்களின் ஆதாரங்களுடன் (அடிக்குறிப்புக்களுடன்) குறிப்பிட்டுள்ளார். காரை மக்கள் ஒவ்வொருவரும் இந் நூலை வாசிப்பதன் மூலம் எம் மூதாதையினர் எம்மண்ணில் மனமகிழ்வுடன் வாழ்ந்தமையை அறிய முடியும். ஒவ்வொரு கட்டுரைகளிலும் கடந்த கால நிகழ்வுகளைக் குறிப்பிட்டு எதிர் காலம் எப்படி அமைதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். நூல் ஆசிரியர் காய்தல் உவத்தல் இன்றி, ஏற்றம் இறக்கம் இன்றி நடுநிலையாக நின்று கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் தகுதியான நூல் ஆசிரியர் என்ற அந்தஸ்தை திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் பெறுகின்றார். அற்புதம் மிக்க மகத்தான பணியினைச் செய்த திரு.சதாசிவம் அவர்களை மனதாரப் பாராட்டி வாழத்துவதுடன் நன்றியினையும் தெரிவித்த சிவகுமாரன் அவர்கள், இப்பணியின் ஊடாக வரலாற்றில் அவர் வாழப் போவதாகவும் காரைநகர் மண்ணும் என்றென்றும் வாழும் என்பதற்கு அழகான ஆதாரமாக இந்நூல் உள்ளது எனவும் குறிப்பிட்டதுடன் இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி அதன்மூலம் எமது அடுத்த தலைமறை காரை.மண்ணின் பெருமைக்குரிய வரலாற்றினை அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படமுடியும் எனக் குறிப்பிட்டார். காரைநகரின் வரலாறு தொடர்பில் வெளிவந்த நூல்களுள் இந்நூல் நான்காவதாக இருந்தாலும் அர்ப்பணிப்பு மிக்க ஆழமான தேடலுடன் பல முக்கியமான புது விடயங்களைத் தாங்கி இந்நூல் வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும் எனவும் திரு.சிவகுமாரன் தனது நீண்ட சிறப்பான நயப்புரையில் தெரிவித்தார்.
கடவுள் வணக்கம் செல்வி. லீலாவதி இராசரத்தினம் அவர்களால் இசைக்கப்பட்டது. வரவேற்புரையை திரு. ச.இராசநாயகம் நிகழ்த்தினார். அனைத்து நிகழ்ச்சிகளையும் திரு. ந.சோதிநாதன் தொகுத்து வழங்கினார்.
திரு.சிவகுமாரன் அவர்கள் வழங்கிய சிறப்பான நயப்புரையினை கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம்காணொளி ஊடாகக் கேட்கலாம்:
https://youtu.be/gZQL6D3sOrg?si=Cj-qF8COf1_g02Bu
நிகழ்வின் சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அதேவேளை தரப்பட்டுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் முழுமையான புகைப்படத் தொகுப்பினை பார்வையிடலாம்:
https://photos.app.goo.gl/znbtuA24caGYv4Ly7
No Responses to “வரலாற்று நிகழ்வாக அமைந்துவிட்ட எஸ்.கே.சதாசிவம் அவர்களின் ‘வரலாற்றில் காரைநகர்’ நூலின் வெளியீட்டு விழா.”